
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,739
Date uploaded in London – 15 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஏழாவது ரிஷி!
வீரத்துறவி இராம. கோபாலன் – சப்தரிஷிகளின் வரிசையில் ஏழாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியதோடு இந்து முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் வீரத்துறவி இராம. கோபாலன்.
1927ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி இராமசாமி-செல்லம்மாள் தம்பதியினருக்கு சீர்காழி சட்டநாதபுரத்தில் இராம.கோபாலன் பிறந்தார்.
இளமையிலேயே சங்கத்தின் பால் ஈடுபட்ட கோபால்ஜி சங்க பிரச்சாரக்காக ஆனார்; கும்பகோணத்திற்கு சங்கப் பணிக்காகச் சென்றார்.
1948ல் காந்திஜி கொலைப் பழி விணாக சங்கத்தின் மீது போடப்பட்டது. அப்போது திருநெல்வேலியில் பிரச்சாரக்காக இருந்த கோபால்ஜி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறந்த பேச்சாளராகவும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கோபால்ஜி ஏராளமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர்; சிறந்த பாடகர். அத்தோடு சங்கத்திற்கே உரித்தான தனித்துவம் வாய்ந்த பாடல்களை, இசைக்குத் தக பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்து சரியான தமிழ் சொற்களை அமைத்து தமிழில் தந்துள்ளார் அவர்.
சங்க குடும்பங்களில் ஒன்றி குடும்பத்தில் தானும் ஒருவராக இணைவது அவரது பண்பு. தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து 1008 முறை காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதை வாழ்நாள் பழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 300வது ஆண்டு விழாவை ஒட்டி 84 பள்ளிகளில் சிவாஜியின் வீரசரித்திரத்தைக் கூறி மாணவர்களின் மனதில் பதிய வைத்தார். அவர்.
தமிழ்நாட்டில் கன்யாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறையில் மண்டபம் அமைக்கும் பணியில் ஏராளமான தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றை ஏக்நாத்ஜி ரானடேயுடன் உடனிருந்து தூள்தூளாக ஆக்கி மண்டபத்தை நிறுவுவதில் வெற்றியை நாட்டினார்.
1971ம் ஆண்டு திராவிடர் கழகம் தி.மு,கவின் பலத்தால் இராமர் படத்தை இழிவுபடுத்தும் ஊர்வலத்தை நடத்தியது. இதனை எதிர்த்து சேலம் திரு ராமசாமி உயர்நீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார்.
சேலம் ராமசாமி அவர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் ஊட்டி இந்து ஆலயப் பாதுகாப்பு மாநாட்டை மிகப் பெரிதாக நடத்த அவர் வழி வகுத்தார்.
இந்துக்களுக்காக ஒரு தனி அமைப்பு வேண்டும் என்பதை உணர்ந்த கோபால்ஜி 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி கன்யாகுமரியில் பகவதி அம்மனைப் பிரார்த்தித்து ஒரு புதிய இயக்கத்தைத் துவக்கினார். அது தான் தமிழகத்தின் பேரியக்கமான இந்து முன்னணி ஆகும்.
1984ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி இரவு கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு மதுரைக்கு ரயிலில் வந்தார் கோபால்ஜி.
அடுத்த நாள் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வர மேம்பாலத்தில் ஏறி படிக்கட்டுகளில் இறங்கும் சமயத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் அவர் பின் மண்டையில் கத்தியால் வெட்டினான். கோவை கோட்டைமேடு பாஷா என்று அறியப்பட்ட அவனால் வெட்டுண்ட கோபால்ஜி படிக்கட்டில் விழ உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தெய்வாதீனமாம உயிர் தப்பினார்.
தமிழ்நாட்டில் விநாயக சதுர்த்தி விழாவை பெரும் ஊர்வலங்களுடன் நடத்தி ஹிந்துக்களின் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்ச்சியை அவர் ஏற்படுத்தினார். காவல்துறை தந்த தடைகளை மீறி வீடு வீடாக, தெருத் தெருவாக பிரச்சாரம் செய்யும் உத்தியை அவர் மேற்கொண்டார்.
பல துறைகளிலும் நிபுணராக விளங்கிய அவரது நகைச்சுவை கலந்த பேச்சு, பளீர் பளீரென்ற பதில்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தின. அவரது புல்லாங்குழல் இசையைக் கேட்டு மயங்காதவரே இல்லை.
சங்க நிகழ்ச்சிகளிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் அவரைப் பாடச் சொல்லும் போது உடனே இசைந்து பாட ஆரம்பிப்பார்.
‘என்று காண்போம் எங்கள் சிந்துவை’ என்ற அவரது பாடலைக் கேட்டு மனம் உருகாதவரே இருக்க முடியாது.
.துணிச்சலுடன் தேசப்பணிக்காக வாழ்நாளை அர்ப்பணம் செய்து கொண்ட அவரால் உத்வேகம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் என்றால் அது மிகையாகாது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் காலமானார்.
இந்த நூலைப் படிப்போர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை
சங்கத்தின் சப்த ரிஷிகளைப் பற்றித் தொகுத்து ஏழு நூல்களையும் தமிழ் உலகிற்கு அளித்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
நாமக்கல்லைச் சேர்ந்த இவர் அங்கு சங்கம் வளர பல வருடங்களாக அரும் பணி ஆற்றி வருகிறார்.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 72 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
***********************