Written by London Swaminathan
Post No. 15,740
Date uploaded in London –15 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 24
திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்) தலசயனப் பெருமாள்
பெயர்: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
அமைவிடம் ஊர்: மாமல்லபுரம்
தாயார் : ஸ்ரீ நில மங்கை நாயகி
மூலவர் : ஸ்தல சயனப் பெருமாள்
மண்டலம் : தொண்டை நாடு
உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான்
***
இத்தலம், பல்லவ வேந்தர்களின் கலைக் களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது. சங்க காலத்திலேயே நீர்ப்பாயல், சலசயனம் என்று குறிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலயத்தில் ஸ்தல சயனப் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் தனது மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி என்ற தேவிமார்கள் எவரும் இல்லாமல், திருமார்பில் வக்ஷஸ்தல லக்ஷ்மி மட்டும் கொண்டு, தனது வலது, கீழ், மேல் என்ற இரண்டு திருக்கரங்களையும் மண்ணில் அழுத்தி வைத்து, ஆதிசேஷ பர்யங்கம் இல்லாமல், நிலத்தில் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பொதுவாகப் பெருமாள் பாம்பணை மீது துயில் கொள்வார். ஆனால் இங்கு புண்டரீக மகரிஷியின் பக்திக்காக, வெறும் தரையில் பள்ளி கொண்டுள்ளார். இதனாலேயே இவருக்கு “ஸ்தலசயனப் பெருமாள்” என்று பெயர்.
108 திவ்ய தேசங்களில், உற்சவப் பெருமாள் தன் கையில் தாமரை மொட்டுடன் காட்சி தரும் ஒரே தலம் இதுதான்! இந்தத் தாமரையை அவர் மூலவரின் பாதத்தில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
இங்கு பெருமாள் தனது வலது திருக்கரத்தை மார்பின் மீது வைத்து “உபதேச முத்திரை” காட்டியபடி தரிசனம் தருகிறார்.
பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் நிலமங்கைத் தாயார் சந்நிதியும் ஆண்டாள் சந்நதியும் உள்ளன. கோவில் வெளிச்சுற்றில், ராமர், ஆஞ்சநேயர், பூதத்தாழ்வார் , கருடன், ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர் என்று சந்நதிகள் உள்ளன.
ஒருகாலத்தில் மூன்று கோவில்கள் கட்டப் பட்டதாகவும், இரண்டு கோவில்கள் கடலில் மூழ்கிவிட்டதாவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது கோவில் இருந்த எம்பெருமான், சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி பூஜை, திருவாராதனம் முதலியவை நடைபெறுகின்றன.
பூதத்தாழ்வார் அவதாரம் செய்தது இங்குதான்
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் எம்பெருமான் அலங்கார பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளுகிறார். பூதத்தாழ்வார் சன்னிதியில் அவருக்கு மரியாதை நடக்கும். தொடர்ந்து, சுவாமியின் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
புண்டரீக ரிஷி பாதம் பட்ட தீர்த்தத்தில், புஷ்கரணியில் மாசிமகம் அன்று தெப்பம் சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசை, சரவண நட்சத்திரம், திங்கட்கிழமை மூன்றும் சேர்ந்து வரும் அன்று மஹோதன்ய தீர்த்தவாரி என்று எம்பெருமான் கடலில் சென்று தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராகர் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று கடலுக்கு சென்று தீர்த்தவாரி வழங்குவார்கள்.
ஆதி வராக பெருமாள்
இந்த ஸ்தல சயன பெருமாள் கோவிலைத் தவிர, சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது பக்தியின் அடையாளமாக ஆதிவராஹருக்காக ஒரு குகைக் கோவில் அமைத்தான். இது மாமல்லபுரத்தில் உள்ள இன்னொரு வைணவ கோவிலாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த பத்து நூற்றாண்டுகளில், மாமல்லபுரத்தில், கடலின் சீற்றத்திற்குத் தப்பித்த இரண்டு வைணவ கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று ஸ்தலசயன பெருமாள் கோவில்.
இந்த திருக்கோவிலில் மூலவர் ஆதிவராஹர் வர்ண கலாப மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். இங்கு வராஹப் பெருமான் பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறார். ஆகையால் இவர் வலவெந்தை பெருமாள் ஆகிறார். இடது திருவடிகள் ஆதிசேஷன் மற்றும் ஆதிசேஷன் மனைவி மேலும் இருக்கிறது. எம்பெருமானின் இடது திருக்கரம் பூமிபிராட்டியின் மேல் அவரை ஆசுவாசப்படுத்தும் படியாக உள்ளது.
FOLLOWING PICTURES ARE TAKEN FRM OTHER WEBSITES; THANKS
ஸ்தல வரலாறு
புண்டரீக மஹரிஷி புஷ்பங்களைக் கொண்டு க்ஷீராப்தி நாதனை (திருப்பாற் கடல் எம்பெருமான்) பள்ளி கொண்ட கோலத்தை வழிபட எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர நீரைக் கைகளால் இறைக்க ஆரம்பித்தார். இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், காட்சி அளித்தார். புண்டரீக மஹரிஷி கை கூப்பியபடி எம்பெருமான் அருகில் உள்ளார். மல்லேஸ்வரன் என்ற ஒரு அரசன் ஸ்தல சயன பெருமாளுக்கு ஆயிரம் மலர்களைச் சார்த்தி வழிபட்டாபின்னர் அவன் சாபம் நீங்கியதாக இன்னொரு செவி வழி வரலாறும் உண்டு
ஸ்தல சயன பெருமாள் கோவில், ஆதிவராஹர் கோவில் என்று இரண்டு கோவில்கள் இருந்தும், இரண்டிற்கும் ஆழ்வார் பாசுரங்கள் இருந்தும் திருகடல்மல்லை என்று ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.
திருச்சந்தவிருத்தம், நூற்று பத்தாவது பாசுரத்தில், திருமழிசையாழ்வார் நீர்பாயல் என்று குறிப்பிட்டு உள்ளார், ஆனால் அந்த பாசுரத்தை, மேல் உலகில் உள்ள திருப்பாற்கடல் திவ்யதேசத்திற்கு என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.
- பாசுரங்கள் (மங்களாசாசனம்): திருக்கடல் மல்லை தலசயனப் பெருமாள் மீது ஆழ்வார்கள் மொத்தம் 27 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
- பூதத்தாழ்வார் அவதாரம்: இரண்டாம் ஆழ்வாரான பூதத்தாழ்வார் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
இத்தலம் “சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை” எனப் போற்றப்படுகிறது. பூதத்தாழ்வார், புண்டரீக மகரிஷி, ஸ்தலசயனப் பெருமாள் ஆகிய மூவரையும் இந்த திவ்ய தேசத்தின் மூன்று முத்துக்கள் எனப் போற்றுவர்.
திருக்கடல் மல்லை பாசுரங்கள்
1088.
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
1089.
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
1091.
பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை* அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
குடம்ஆடு கூத்தன் தன்னை* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1092.
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ* பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,*
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1093.
கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி* கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை* பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
வளைமருப்பின் ஏனம்ஆகி* இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
எம்மானைக் கண்டுகொண்டேன்* கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1094.
பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்*
பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை* பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை*
ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்*
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1095.
பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை* பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை*
தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யம்என்னும்* தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி*
எண்ணானை எண்இறந்த புகழினானை* இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
கண்ணாரக் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை* படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
தென்இலங்கை அரக்கர்வேந்தை* விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு*
பண்டுஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
தொண்டனேன் கண்டுகொண்டேன்* கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
1097.
படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்* படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்*
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்* தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்* வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்* தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.
1098.
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி* அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே. (2)
1099.
பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
கார்வண்ண முது முந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே.
1100.
ஏனத்தின்உருவுஆகி* நிலமங்கை எழில் கொண்டான்*
வானத்தில்அவர் முறையால்* மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளிஉருவை* நினைவார் என் நாயகரே. (2)
1101.
விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல் இயலார்*
கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*
கண்டாரை கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரைக்,
கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குலதெய்வமே.
1102.
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*
விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே!
1103.
புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*
நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,*
கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வலங்கொள் மனத்தார்அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே!
1104.
பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணா*
கஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல்மல்லைத் தலசயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே!
1105.
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்து வன் பகட்டால்*
உழும் நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல்மல்லைத் தலசயனம்*
தொழும் நீர் மனத்தவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே .
1106.
பிணங்கள் இடு காடு அதனுள்* நடம் ஆடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்*
விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல்மல்லைத் தலசயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என்தன் மட நெஞ்சே!
—subham—
Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-24, Part 24; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருக்கடல் மல்லை, மாமல்லபுரம், தலசயனப் பெருமாள்