Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,758)

Written by London Swaminathan

Post No. 15,758

Date uploaded in London –19 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்பாடகம்

திருப்பாடகம் (காஞ்சீபுரம்)

ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளன. .

மூலவர் – பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ருக்மிணி, ஸத்யபாமா

தீர்த்தம் – மத்ஸ்ய தீர்த்தம்.

விமானம் – பத்ர விமானம், வேத கோடி விமானம்.

ப்ரத்யக்ஷம் – ஜனமேஜயன், ஹாரீத முனி.

ஜனமேஜயஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததை கேள்விப்பட்டு, அதை நேரில் ஸேவிக்க விரும்பி காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து, பூர்ணாஹ§தி ஆனதும் பகவான் பாண்டவதூத வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு.

இங்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார். மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம்.

மங்களாசாஸனம் -திருமழிசையாழ்வார் – 814, 815; திருமங்கையாழ்வார் – 1541, 2674 (127); பூதத்தாழ்வார் – 2275; பேயாழ்வார் – 2311; மொத்தம் 6 பாசுரங்கள்.

திருப்பாடகம்

   நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து

        அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்

   அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்

        நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே – (815)

                                – திருச்சந்தவிருத்தம் – 64

 பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில்;

 இருந்த திருக்கோலம் திருப்பாடகத்தில்;

 கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.

“இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே

எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்து அருளிய திருத்தலங்களாகும். எம்பெருமான் அர்ச்சா மூர்த்தியாகி இங்கு எழுந்து அருளிய காலங்களில் நான் பிறந்ததில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு அமைத்துக் கொண்டேன். அதனால் நான் இனி மறந்திலேன்”.

இவ்விதம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட

இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.

வரலாறு

     எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு

துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான்

பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம். துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த கண்ணன், நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார்.

சிறப்புக்கள்

     1) அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி

உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.

2.கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது.

     3) எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு

தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம்.

அ) வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத

   பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் – நான்கிடத்தும்

   நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே

   என்றால் கெடுமாம் இடர்.

     என்ற பொய்கையாழ்வாரின் பாசுரத்தில் வெஃகாவைக் குறிப்பிட்டிருப்பது தொன்மைக்காலத்தே 108 திவ்ய தேசங்களில் மூன்று திருக்கோல எம்பெருமான்களை ஒரு சேரக் குறித்தால் அது இந்த தொண்டை மண்டலத்தின் முத்தலமேயென்பதில் ஐயமில்லை.

ஆ)  இசைந்த வரவமும் வெற்புங் – கடலும்

          பசைந்தங்கு அமுது படுப்ப – அசைந்து

     கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்

          கிடந்திருந்து நின்றதுவு மங்கு – 2345

                      என்று பேயாழ்வார் உரைப்பதும்.

இ)   குன்றிருந்த மாட நீடும் பாடகத்தும் ஊரகத்தும்

     நின்றிருந்து வெஃகனைக் கிடந்ததென்ன நீர்மையே – 814

     என்று திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரும் கூறியிருப்பதில் 108இல் உள்ள பிற ஸ்தலங்களை மூன்று திருக்கோலங்கட்கும் சுட்டவில்லை.

     ஈ) நின்றவாறும் அன்றியும் இருந்தவாறும் கிடந்தவாறும்

நினைப்பரியன. ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் –

(திருவாய்மொழி 5.10.6)

     என்ற நம்மாழ்வாரின் மங்களாசாசனத்திற்கு

     திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும்

திருவெஃகாவிலே கிடந்த படியுமாதல் – என்று ஈடு வ்யாக்யானம்

சுட்டியிருப்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

     காஞ்சி மண்ணில் முத்தீபம் போல் இலங்கும் இத்தலங்கள் தொண்டைமண்டலத்திற்கே தனிப்புகழ் ஏற்றுத் தந்தன வென்பதும் மறுக்க முடியாததாகும்.

     4) ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை சொரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணுகைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.    

***

திரு ஊரகம்

திரு ஊரகம் (உலகளந்த பெருமாள் கோயில்) என்பது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 50-வது திவ்ய தேசமான இத்தலத்தில், திருமால் பிரம்மாண்டமான 35 அடி உயர உலகளந்த பெருமாள் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒரே கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச பெருமாள்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரு ஊரகம்

:மூலவர்: ஊரகத்தான் (உலகளந்த பெருமாள்)

தாயார்: அமுதவல்லி

சிறப்பம்சம்: பெருமாள் தனது இடது காலை வானத்திற்கும், வலது காலை மகாபலியின் தலையிலும் வைத்து உலகளந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

****

திரு நீரகம்

இது காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இந்தக் கோயிலுக்குள் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. ஒரே இடத்தில் இந்த நான்கு பெருமாள்களையும் தரிசிப்பது மிகுந்த சிறப்பாகும்.

திரு நீரகம் (காஞ்சீபுரம்) பெரிய காஞ்சீபுரத்தில் திரு ஊரகம், (உலகளந்தப் பெருமாள்) கோவிலிலேயே உள்ளது. .

மூலவர் – இல்லை

உத்ஸவர் – ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – நிலமங்கைவல்லி.

தீர்த்தம் – அக்ரூர தீர்த்தம்.

விமானம் – ஜகதீச்வர விமானம்.

ப்ரத்யக்ஷம் – அக்ரூரர்.

குறிப்பு – மூலவர் எங்கிருக்கிறார்? பழைய கோவில் எங்கிருக்கிறது? தீர்த்தம் எங்குள்ளது? என்றெல்லாம் தெரியவில்லை. உலகளந்தப் பெருமாள் கோவிலின் வடபுறத்துப் ப்ராகாரத்தில் மிகச்சிறிய ஸந்நிதியில் உத்ஸவர் மட்டுமே எழுந்தருளியிருக்கிறார்.

மங்களாசாஸனம் – திருமங்கையாழ்வார் – 2059 – 1 பாசுரம்.

****

திருக்காரகம் பற்றி முன்னரே கண்டோம் ; ஒரே கோவிலில் உள்ள 4 தலங்களுக்கு ஒரே பாசுரம்தான்.

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா

காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்

பெருமானுன் திருவடியே பேணினேனே.

~ திருமங்கையாழ்வார்

To be continued………………………….

Tags–திருப்பாடகம், திருஊரகம், திரு நீரகம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment