ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசய உலகம் தான் – நவீன மூளை இயல் தரும் செய்தி! (Post.15,757)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,757

Date uploaded in London – 19 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-5-26 தினமணி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசய உலகம் தான் – நவீன மூளை இயல் தரும் செய்தி!

ச. நாகராஜன்

நாளுக்கு நாள் மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சி அதிகமாக அதிகமாக மூளையின் மர்மம் இன்னும் அதிகமாகிறது.

 சுமார் எட்டு லட்சம் வருடங்களாக மனித மூளை பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து வந்திருக்கிறது. அதன் மர்மத்தை ஓரிரு ஆராய்ச்சிகளால் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?

 சமீபத்தில் ஆய்வாளர்களின் கவனம் மூளையின் நெட்வொர்க் – அதாவது மூளையின் தகவல் தொடர்பு மையம் பற்றித் திரும்பி இருக்கிறது.

இதை அறிவியலில் DMN – Default Mode Network – என்று அழைக்கின்றனர்.

 வளவள என்று இழுக்க வேண்டாம், புரியும்படி ஆராய்ச்சியின் முடிவைச் சொல்லுங்கள் என்றால் சொல்லலாம் இப்படி – ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம் தான்! அவனது பிரக்ஞை, மூளை இயக்கத் தொடர்பு எல்லாமே தனித்வம் கொண்டது தான்!

 இன்னும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “நீங்கள்’ என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வு தான் இது.

 பயம், தாகம் உள்ளிட்ட உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்கு மனிதன் தனி தான்.

 16 இள வயதினரை ஆராய்ச்சிக் குழு அழைத்தது.  2009ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான ‘டேகன்’ (TAKEN) என்பதைத் திரையிட்டுக் காட்டியது. அப்போது அவர்களின் மூளை செயல்படும் விதத்தை ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் என்ற செயல்முறை மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக்குட்பட்டவர்களின் மூளையில் தகவல் தொடர்பு இயங்கும் விதத்தை ஆராய்ந்த ஆய்வாளர்கள் உணர்வுடன் இருந்து படத்தைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி உலகத்தில் இருந்தார்கள் என்பதையும் ஆனால் பிரக்ஞையற்ற நிலையில் அவர்கள் இருந்தபோது அவர்களின் தனி உலகம் இல்லாமல் போய் அனைவரும் ஒரே மாதிரி உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதையும் கண்டு அதிசயித்தனர்.

 ஆகவே டி எம் என் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரிய வந்தது.

இதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது.

படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் சொந்தக் கதையை இணைத்துக் கொள்கிறார்கள். பல பழைய உணர்வுகளை நினைவாற்றல் அடிப்படையில் நினைக்கத் தொடங்குகிறார்கள். சிலர் படக்காட்சிகளை தங்கள் மனப்போக்கில் செட் போட்டு அமைத்து மீண்டும் காண்கிறார்கள்.

 ஏன் இப்படி டிஎம்என் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது? விடை மிகவும் எளிது தான். ஏனெனில் ஒவ்வொருவரின் குணாதிசயமும் தனித்தனியானது தான் என்பதால் இந்த வேறுபாடு அமைகிறது.

 ஒவ்வொரு மனிதனின் டிஎம்என்னையும் படமாக ஆக்கினால் அவர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இது சாத்தியம் தானா?

ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாற்பதினாயிரம் எண்ணங்களை எண்ணுகிறான். சிக்கலான உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனை ஆயிரம் தோன்றுகின்றனவோ!

 நவீன காலத்திய மெஷின் லேர்னிங் மாடல்கள் இப்படிப்பட்ட படங்களைத் தொகுத்து அவற்றை மரபணுக்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு நடத்தினால் மனிதனைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புரிந்து கொள்ளலாம்.

 ஒவ்வொருவரும் தனது எதிர்காலம் பற்றிச் சிந்தனை செய்ய உதவுவது இந்த டிஎம்என் தான். எதிர்காலத்தில் இது செம்மைப்படுத்தப்படுமோ?

 வளர்ந்து வரும் மூளை அறிவியல் மனித மூளை பற்றிய இன்னும் பல அதிசய உண்மைகளைக் கண்டு பிடிக்கும் போது மனிதன் மாறி விடுவானோ என்னவோ! காலம் தான் இதற்கு பதில் சொல்லும்!

**

Leave a comment

Leave a comment