Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-30; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,770)

Written by London Swaminathan

Post No. 15,770

Date uploaded in London –22 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்

திருமாலிருஞ்சோலை  என்றால் பொதுமக்களுக்குத் தெரியாது ; இந்த இடத்தின் தற்போதைய பெயர் அழகர் கோவில் ; மலை அடிவாரத்தில் பெருமாள் கோயில்இருக்கிறது; மலையில் ஏறிச்  சென்றால் அறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமானின் பழமுதிர்ச் சோலையைத் தரிசிக்கலாம்  ; அதற்கும் மேலே மலையேறிச் சென்றால் நூபுர கங்கை என்னும் சின்ன அருவி; இதிலிருந்து ஒடிய சிலம்பாறு ஒருகாலத்தில் பெரிய நதியாக இருந்திருக்க வேண்டும் .

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் கோயில்  உள்ளது; அங்கு அழகர் மலையின் அடிவாரத்தில்  அமைந்துள்ள திருமால் கோயிலை திருமாலிருஞ்சோலை என்றும்  மாவிருங்குன்றம் என்றும் சோலை மலை என்றும் வைணவர்கள் அழைத்தார்கள்;  இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.

கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி .

உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராஜப் பெருமாள்

 பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.

தாயார் : ஸ்ரீ சுந்தர வல்லி

மூலவர் : திரு மாலிரும் சோலை நம்பி

மண்டலம் : பாண்டியநாடு

கடவுளர்கள்: கள்ளழகர் கல்யாணசுந்தரவல்லி

***

சித்திரைத்  திருவிழா

இந்த விழாவை தற்போதைய வடிவில் அமைத்த மன்னர்  திருமலை நாயக்கர் ஆவார் .மீனாட்சி திருக்கல்யாணம் (திருமணம்) விழாவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் ஒரே திருவிழாவாக இணைத்தார்..

1. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 💍

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்-ல்

மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.

2. தேர் திருவிழா

பெரிய தேரில் தெய்வங்கள் நகரை சுற்றி வருவது பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம்.

3. அழகர் வருகை :அழகர் கோவிலிலிருந்து

கள்ளழகர் மதுரைக்கு வந்து, வைகை நதியில் இறங்குவது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆகும் ; வரும்போதும் அழகர் திரும்பிப்போகும் போதும் பல லட்சம் மக்கள் கூடிக் கொண்டாடுவர்; முக்கியமாக கள்ளர் மரபினர் பழங்கால வேடம் அணிந்து தண்ணீர் பைகளிலிருந்து தண்ணீரைப்பீச்சி அடித்த வண்ணம் வருவார்கள் ;அதைக் காணக் கண்கோடி வேண்டும்

அழகர் தனது சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு வருகிறார். ஆனால் அவர் தாமதமாக வந்து, திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, கோபத்தில் வைகை ஆற்றில் இறங்குவதாக நம்பப்படுகிறது.

இது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஒற்றுமையை காட்டுகிறது

வைகை ஆற்றின் கரையோரமுள்ள நூற்றுக் கணக்கான மண்டகப்படிகளில் மக்களுக்கு இலவச உணவுப் பிராசதம் கிடைக்கும்.

***

கோயில் கலைச் சிறப்புகள் :

முழுமை அடையாத இராஜ கோபுரம்

மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.

ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.

வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.

கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.

கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

***

மதுரையில் வியாழன் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய சந்தையொன்று,  திலகர் திடலில் கூடும்; அப்போது நூற்றுக்கணக்கான மூலிகைகளும் கீரைவகைகளும் ஒரு பகுதியில் இருக்கும்; மாவடு விற்போர் அந்தந்த சீசனில் வருவார்கள்; இன்னுமொரு பக்கம் மாகாளிக்கிழங்கு குவிந்து கிடக்கும்; அத்தனையும் அழகர் மலையிலிருந்தது வந்தவை ; பிற்காலத்தில் ஆண்ட அரசியலவாதிகள் அந்த வாராந்திர மார்க்கெட்டை அடியோடு அழித்தார்கள். ஒரு காலத்தில் காடுகளும் ஆறுகளும் நிறைந்த இந்தப் பகுதி இப்போது நூற்றில் ஒரு சதவிகிதம் மிஞ்சி இருக்கிறது என்று சொல்லலாம்.

****

நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்—ஆண்டாள்–நாச்சியார் திருமொழி

586       சிந்துரச் செம்பொடிப் போல்

      திருமாலிருஞ்சோலை எங்கும்

இந்திர கோபங்களே

      எழுந்தும் பரந்திட்டனவால்

மந்தரம் நாட்டி அன்று

      மதுரக் கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத்தோளுடையான்

      சுழலையினின்று உய்துங் கொலோ?            (1)

587       போர்க்களிறு பொரும்

      மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்

தார்க்கொடி முல்லைகளும்

      தவள நகை காட்டுகின்ற

கார்க்கொள் பிடாக்கள் நின்று

      கழறிச் சிரிக்கத் தரியேன்

ஆர்க்கு இடுகோ? தோழீ

      அவன் தார் செய்த பூசலையே             (2)

588       கருவிளை ஒண்மலர்காள்

      காயா மலர்காள் திருமால்

உரு-ஒளி காட்டுகின்றீர்

      எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்

திரு விளையாடு திண் தோள்

      திருமாலிருஞ்சோலை நம்பி

வரிவளை இற் புகுந்து

      வந்திபற்றும் வழக்கு உளதே?             (3)

589       பைம்பொழில் வாழ் குயில்காள்

      மயில்காள் ஒண் கருவிளைகாள்

வம்பக் களங்கனிகாள்

      வண்ணப் பூவை நறுமலர்காள்

ஐம் பெரும் பாதகர்காள்

      அணி மாலிருஞ்சோலை நின்ற

எம்பெருமானுடைய

      நிறம் உங்களுக்கு என் செய்வதே?             (4)

590       துங்க மலர்ப் பொழில் சூழ்

      திருமாலிருஞ்சோலை நின்ற

செங்கண் கருமுகிலின்

      திருவுருப் போல் மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள்

      தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்

தங்கு செந்தாமரைகாள்

      எனக்கு ஓர் சரண் சாற்றுமினே             (5)

591       நாறு நறும் பொழில்

      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய்

      வாய்நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த

      அக்கார அடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான்

      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?             (6)

592       இன்று வந்து இத்தனையும்

      அமுது செய்திடப் பெறில் நான்

ஒன்று நூறாயிரமாக்

      கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்

தென்றல் மணம் கமழும்

      திருமாலிருஞ்சோலை தன்னுள்

நின்றபிரான் அடியேன்

      மனத்தே வந்து நேர்படிலே             (7)

593       காலை எழுந்திருந்து

      கரிய குருவிக் கணங்கள்

மாலின் வரவு சொல்லி

      மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?

சோலைமலைப் பெருமான்

      துவாராபதி எம்பெருமான்

ஆலின் இலைப் பெருமான்

      அவன் வார்த்தை உரைக்கின்றதே             (8)

594       கோங்கு அலரும் பொழில்

      மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்

தூங்கு பொன் மாலைகளோடு

      உடனாய் நின்று தூங்குகின்றேன்

பூங்கொள் திருமுகத்து

      மடுத்து ஊதிய சங்கு ஒலியும்

சார்ங்க வில் நாண்-ஒலியும்

      தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?             (9)

595       சந்தொடு காரகிலும்

      சுமந்து தடங்கள் பொருது

வந்திழியும் சிலம்பாறு

      உடை மாலிருஞ்சோலை நின்ற

சுந்தரனைச் சுரும்பு ஆர்

      குழற் கோதை தொகுத்து உரைத்த

செந்தமிழ் பத்தும் வல்லார்

      திருமாலடி சேர்வர்களே             (10)

****

திருவாய்மொழி–பத்தாம் பத்து

மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர்.

அதுபோல் ஞானயிரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பரம பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.

அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.

***

3733. செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட்

செய்மின் திருமா லிருஞ்சேலை,

வஞ்சக் கள்வன் மாமாயன்

மாயக் கவியாய் வந்து,என்

நெஞ்சு முயிரு முள்கலந்து

நின்றார் அறியா வண்ணம்,என்

நெஞ்சு முயிரும் அவையுண்டு

தானே யாகி நிறைந்தானே.

திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்

3734. தானே யாகி நிறைந்தெல்லா

உலகும் உயிரும் தானேயாய்,

தானே யானென் பானாகித்

தன்னைத் தானே துதித்து,எனக்குத்

தேனே பாலே கன்னலே

அமுதே திருமா லிருஞ்சோலை,

கோனே யாகி நின்றொழிந்தான்

என்னை முற்றும் உயிருண்டே..

ஆ!அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!

3755. என்னை முற்றும் உயிருண்டென்

மாய ஆக்கை யிதனுள்புக்கு,

என்னை முற்றும் தானேயாய்

நின்ற மாய அம்மான்சேர்,

தென்னன் திருமா லிருஞ்சோலைத்

திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,

இன்னம் போவே னேகொலோ!

என்கொல் அம்மான் திருவருளே?

எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்

3736. நண்ணா அசுரர் நலிவெய்த

நல்ல அமரர் பொலிவெய்த,

எண்ணா தனகள் எண்ணும்நன்

முனிவ ரின்பம் தலைசிறப்ப,

பண்ணார் பாடல் இன்கவிகள்

யானாய்த் தன்னைத் தான்பாடி,

தென்னா வென்னும் என்னம்மான்

திருமா லிருஞ்சோ லையானே.

திருமால் என்னை ஆள்கின்றான்

3738. திருமா லிருஞ்சோ லையானே

ஆகிச் செழுமூ வுலகும்,தன்

ஒருமா வயிற்றி னள்ளேவைத்

தூழி யூழி தலையளிக்கும்,

திருமா லென்னை யாளுமால்

சிவனும் லெய்தி யடிபரவ

அருளை யீந்த அம்மானே.

எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்

3739. ‘அருளை ஈயென் அம்மானே!’

என்னும் முக்கண் அம்மானம்,

தெருள்கொள் பிரமன் அம்மானும்

தேவர் கோனும் தேவரும்,

இருள்கள் கடியும் முனிவரும்

ஏத்தும் அம்மான் திருமலை,

மருள்கள் கடியும் மணிமலை

திருமா லிருஞ்சோ லைமலையே.

என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்

3740. திருமா லிருஞ்சோ லைமலையே

திருப்பாற் கடலே என்தலையே

திருமால் வைகுந் தமேதண்

திருவேங் கடமே எனதுடலே,

அருமா மாயத் தெனதுயிரே

மனமே வாக்கே கருமமே,

ஒருமா நொடியும் பிரியானென்

ஊழி முதல்வன் ஒருவனே.

மனமே!திருமாலை விடாமல் பிடி

3741. ஊழி முதல்வன் ஒருவனே

என்னும் ஒருவன் உலகெல்லாம்,

ஊழி தோறும் தன்னுள்ளே

படைத்துக் காத்துக் கெடுத்துழலும்.

ஆழி வண்ணன் என்னம்மான்

வாழி!மனமே கைவிடேல்

உடலும் உயிரும் மங்கவொட்டே

நானேயாகி என்னை அளித்தவன் திருமால்

3742. மங்க வொட்டுன் மாமாயை

திருமா லிருஞ்சோ லைமேய,

நங்கள் கோனே!யானே c

யாகி யென்னை யளித்தானே,

பொங்கைம் புலனும் பொறியைந்தும்

கருமேந் திரியும் ஐம்பூதம்,

இங்கிவ் வுயிரேய் பிரகிருதி

மானாங் கார மனங்களே.

3743. மானாங் கார மனங்கெட

ஐவர் வன்கை யர்மங்க,

தானாங் கார மாய்ப்புக்குத்

தானே தானே யானானை,

தேனாங் காரப பொழில்குருகூர்ச்

சடகோ பன்சொல் லாயிரத்துள்,

மானாங் காரத் திவைபத்தும்

திருமா லிருஞ்சோ லைமலைக்கே.

****

திவ்யதேச பாசுரங்கள்

71.  

உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*

கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*

மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!*

என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே  

258.  

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து*

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்-

மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்*

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*

338.  

அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை*

குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*

சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்*

சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)

344.  

மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*

முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை*

கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்*

தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே

345.  

குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-

சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*

அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்*

சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே.

355.  

கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்-

இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*

கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்*

இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.

358.  

ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக*

ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*

ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்*

ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)

–subham—Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-30; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருமாலிருஞ்சோலை , அழகர் கோவில், சித்திரைத் திருவிழா , அழகர், வைகை 

Leave a comment

Leave a comment