நீண்ட ஆயுள் தரும் ‘ப்ளூ ஜோன்ஸ்’ ரகசியங்கள்: டான் பூட்னர் கூறும் 8 பழக்க வழக்கங்கள் என்ன?(Post.15,769)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,769

Date uploaded in London – 21 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-5-26 கல்கிஆன்லைன் கட்டுரை!

நீண்ட ஆயுள் தரும் ‘ப்ளூ ஜோன்ஸ்’ ரகசியங்கள்: டான் பூட்னர் கூறும் 8 பழக்க வழக்கங்கள் என்ன?

 ச. நாகராஜன்                 

ஒருவர் பிறந்தவுடன் நிச்சயமாவது அவரது மரணம் தான்.

ஆனால் இந்த மரணத்தை யாருமே விரும்புவதில்லை.

அதைத் தள்ளிப் போட யாருக்குத் தான் ஆசை இருக்காது?

 அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்கு – அமெரிக்கா என்ன உலகில் எங்கிருந்தாலும் அங்கு இருக்கும் ஒருவருக்கு – இருக்கும் ஆசை என்ன?

 ஒரு சொந்த வீடு, ஒரு கார், நல்ல மனைவி, குழந்தைகள் – சரி, இத்தனையும் இருந்து ஐம்பதே வயதில் கான்ஸர் வந்தால்….

இத்தனையும் இருந்து என்ன தான் பிரயோஜனம்?

 ஆக அனைவரும் முதலில் வேண்டுவது நீடித்த ஆயுளைத் தான்.

 இதற்கு வழி சொல்கிறார் அமெரிக்க ஆய்வாளரான டான் பூட்னர் (Dan Buettner). (பிறப்பு 18-6-1960) இவர் எழுதிய ‘தி ப்ளூ ஜோன்ஸ்’ (The Blue Zones) என்ற புத்தகம் உலகெங்கும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

அப்படி அந்த புத்தகத்தில் என்ன தான் இருக்கிறது?

நீடித்து வாழ வழி இருக்கிறது. அப்படி உலகில் நீடித்து வாழும் முதல் தரமான ஐந்து இடங்களை அவர் ஒரு பெரிய குழு அமைத்து இருபது ஆண்டுகள் ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார். அந்த இடங்களில் வாழ்பவர்கள் மற்ற இடத்தில் வாழ்பவர்களை விட மூன்று மடங்கு அதிக ஆயுளுடன் இருக்கின்றனர். இந்த இடங்களுக்கு அவர் ‘ப்ளூ ஜோன்ஸ்’ –  Blue Zones – என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்.

ப்ளூ ஜோன்ஸ்வாசிகளின் பழக்க வழக்கங்கள், உணவுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் அவரிடம் உள்ளன. 

உலகில் நீடித்த ஆயுளைக் கொண்டோர் வாழும் ஐந்து இடங்களாவன:

சார்டீனியாவில் உள்ள சில கிராமங்களின் தொகுதி, ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவுகள், கோஸ்டா ரீகாவில் உள்ள நிகோயா வளைகுடா, கிரேக்கத் தீவான இகாரியா,  அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சான்பெர்டினா கவுண்டியில் இருக்கும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட்ஸ் சமூகக் குழு உள்ள இடம். 

சரி, நாம் நீடித்து வாழ என்ன செய்ய வேண்டும்?

அதற்கும் வழி சொல்கிறார் பூட்னர்.

அவர் கேட்கும் கேள்விகள் எட்டு.

இதற்கு பதிலைச் சொல்லுங்கள் என்கிறார் அவர். 

1)      தினமும் குறைந்த பட்சம் ஏழு மணி நேரம் நன்கு உறங்குகிறீர்களா? 

2)      ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக முப்பது நிமிடமாவது நீங்கள் நகர்கிறீர்களா? (நடக்கிறீர்களா) 

3)      ஒரு நாளைக்கு மூன்று முறை உண்மையாகவே நல்ல சைவ உணவு கறிகாய்களை சாப்பிடுகிறீர்களா?

 4)      தெரியாத ஒருவருடன் பாதுகாக்கப்படாத முறையில் பாலியல் உறவைக் கொள்ளாமல் இருக்கிறீர்களா?

 5)      நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் மதத்தின் கூட்டங்களில் மாதத்திற்கு நான்கு முறையேனும் கலந்து கொள்கிறீர்களா?

 6)      அர்த்தமுள்ள அரட்டை அடிக்கும் படி உண்மையான மூன்று நண்பர்களையேனும் நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?

 7)      கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு தடவை கூட நீங்கள் சிகரட் பிடிக்கவில்லையா?

 8)      90 வயது வரை வாழும் ஆசையுடன் அதற்கான உடல் தகுதி கொண்டிருக்கிறீர்களா?

 இந்த எட்டு கேள்விகளுக்கும் எவ்வளவு முறை உங்கள் பதில் “ஆம்” என்று இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் வாழ்நாள் நீடிக்கும்.

 இது தான் ப்ளூ ஜோன்ஸ் வித்தகர் பூட்னர் கூறும் அறிவுரை.

 உலகெங்குமுள்ள மக்கள் இந்த அமர வாழ்வை அடையும் வித்தையைக் கற்பிக்கும் பூட்னரைப் பெரிதாக மதிக்கிறார்கள்.

ஏனெனில் அனைவருக்குமே மரணத்தைத் தள்ளிப் போட ஆசை இருக்காதா என்ன – உங்களையும் சேர்த்துத்தான் – சொல்லுங்கள் பார்ப்போம்!

Leave a comment

Leave a comment