பாம்பு மந்திரம் பற்றி ஆறு புலவர்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்! (Post.15,803)

Written by London Swaminathan

Post No. 15,803

Date uploaded in London –29 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை

மந்திரங்களுக்கு பாம்புகள் கட்டுப்படும் என்றும் மந்திரத்தால் பாம்பு விஷத்தை இறக்கலாம் என்றும் காளிதாசன், கம்பன், திருமூலர் , வேதாந்த தேசிகன், நாலடியார் , நீதி வெண்பா  மூலம் அறிகிறோம் ; ஆயினும் விஞ்ஞான ரீதியில் யாரெனும்  இதை நிரூபித்துக் காட்டினால் அவருக்கு கட்டாயம் ஒரு நோபல் பரிசுகொடுக்கலாம் . இந்தத் தொகுப்புரையில் ஆறு புலவர்கள் பாம்பு மந்திரம் பற்றிப் பாடியதைக் காண்போம்

1

நாலடியார்

 நாலடியார் நூலின் ஏழாவது அதிகாரமான ‘சினமின்மை’யில் வரும் ஒரு புகழ்பெற்ற பாடல் :

கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச்சொல்

எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை

இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையால் தங்களை அடக்கு வார்

பாடலின் பொருள்:

கல்லால் அடிப்பது போன்ற கொடுமையான சொற்களைப் பேசும் கீழோர்களின் (கயவர்களின்) வாயிலிருந்து வரும் கடுமையான வார்த்தைகளை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோர்கள், பலரும் அறியும் வண்ணம் பொறுத்துக் கொள்வார்கள். மந்திரிக்கப்பட்ட திருநீற்றைத் தூவியவுடன் தன் சீற்றமும் படமும் அடங்கிப் போகும் பாம்பைப் போல நல்ல குடிப்பிறப்பு மற்றும் பண்புடையவர்கள் தங்கள் குலப் பெருமையைக் கருதி தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்.

1200 ஆண்டுகளுக்கு முன்னர் நாலடியார் நானூறு பாடிய பல புலவர்களில் யாரோ ஒரு புலவர் பாடியது இது . இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேத்திலுள்ள மந்திரம் ஆகும் (கட்டுரையின் பின்னால் வருகிறது).

சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த, உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன், காளிதாசன் சொன்னதையும் பார்ப்போம் :

2

காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32

बाहुप्रतिष्टम्भविवृद्धमन्युरभ्यर्णमागस्कृतमस्पृशद्भिः।

राजा स्वतेजोभिरदह्यतान्तर्भोगीव मन्त्रौषधिरुद्धवीर्यः॥ २-३२

bāhupratiṣṭambhavivṛddhamanyurabhyarṇamāgaskṛtamaspṛśadbhiḥ|

rājā svatejobhiradahyatāntar bhogīva mantrauṣadhiruddhavīrya || 2-32

பாஹு பிரதிஷ்டம்ப விவ்ருத்த மன்யுஹு அப்யர்ணம் ஆகஸ்க்ருதம் அஸ்ப்ருஷத்பிஹி

ராஜா ஸ்வதேஜோபி   அதஹ்யதா ந்தத போகீவ மந்த்ராவ்ஷதி ருத்தவீர்யஹ

bAhupratiShTambhavivR^iddhamanyurabhyarNamAgaskR^itamaspR^ishadbhiH |

rAjA svatejobhiradahyatAntarbhogIva mantrauShadhiruddhavIryaH || 2-32

திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)

3

நீதி வெண்பா

துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்: 

துர்ச்சனரும் பாம்புந்  துலையொக்கினும் பாம்பு

துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி

மந்திரத்தாலே வசம்

பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.

4

கம்பன் பாட்டு

ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்

நல் மதியார் புகல் மந்திர நாமச்

சொல் மதியா அரவின் கடுகிற்பாள்

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்

மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்

பொருள்:-

அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.

(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)

5

வேதாந்த தேசிகன்அருளிய  கருட மந்திரம்

வேதாந்த தேசிகர் அருளிய மிகச் சக்திவாய்ந்த கருட மந்திரங்கள் கருட தண்டகம் மற்றும் கருட பஞ்சாஷத் ஆகும். பாம்பாட்டியின் சவாலை முறியடிக்கவும்விஷ ஜந்துக்களின் பயம் நீங்கவும் தேசிகர் இந்த மந்திரங்களைப் பாடினார்.இவற்றின் சிறப்புகள் மற்றும் துதி வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:1. ஸ்ரீ கருட தண்டகம்பாம்புதேள் போன்ற விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்கவும்சகல நன்மைகள் உண்டாகவும் தினமும் இதைப் பாராயணம் செய்வது வழக்கம்.

துவக்க ஸ்லோகம்:

நம: பந்நகநத்தாய வைகுண்டவஶவர்திநே |ஶ்ருதிஸிந்து ஸுதோத்பாதமந்தராய கருத்மதே ||இதன் முழுமையான தமிழ் அர்த்தம் மற்றும் சமஸ்கிருத மூல வரிகளை Stotra Nidhi பக்கத்தில் படித்துப் பயன்பெறலாம்.

கருட பஞ்சாஷத்

சுவாமி தேசிகன் கருடனைப் போற்றிப் பாடிய 52 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்தோத்திரம் இதுவாகும். இதனை முறையாக ஓதினால் கருட பகவானின் தரிசனமும்சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பயன்கள்:கொடிய விஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.எதிரிகளின் தொல்லைகள் அகலும்.மன அமைதியும்ஆரோக்கியமும் பெருகும்

 ஸ்ரீ கருட தண்டக:

 4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.

விஷ்ணுவின் வாகனம் கருடன். நித்யசூரிகளில் ஒருவரான கருடர் வேதத்தில் புகழப்படுபவர். அவருக்கு ருத்ரா மற்றும் சுகிர்தி என இரு மனைவிகள் உண்டு. விஷ்ணுவின் வியூக தோற்றங்களில் அவர் சங்கர்ஷண அம்சமாக கருதப்படுகிறார்.

ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும் பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.

உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது. உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும் அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும்  வேண்ட தேசிகர் இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக் கீழே போட்டது.

இதில் உள்ள சந்தச் சிறப்பை சம்ஸ்கிருத ஆர்வலர்கள் வெகுவாகப் போற்றுவர்.

 ஸ்ரீ கருட பஞ்சாஷத்

 52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.

கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.

வர்ணகா என்று கூறப்படும் ஐந்து பகுதிகள் கொண்ட இதுகருட மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

முதல் பகுதி பர வ்யூஹ வர்ணகம். இரண்டாவது பகுதி அம்ருதாஹரண வர்ணகம். மூன்றாவது பகுதி நாகதமன வர்ணகம். நான்காவது பகுதி பரிஷ்கார வர்ணகம். ஐந்தாவது பகுதி அத்புத வர்ணகம்.

கருடர் விஷ்ணுவுக்கு பல அம்சங்களில் சமமானவர் எனக் கூறும் தேசிகர் தனது இறுதி ஸ்லோகத்தில் பாம்பினால் ஏற்படும் உடல் மற்றும் மனோ பாதிப்புகள்வியாதிகள்,விதியின் தீய விளைவுகள் அனைத்தும் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதால் போய் விடும் என்று கூறி அருள்கிறார்.

6

அதர்வண வேத ரகசியங்கள்

அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:- 

சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போல  நான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன் 

முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன். 

இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன்.  . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்.. 

(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)

***

7

திருமூலர் கருடன் பாம்பு உவமை

கருட மந்திரம் செய்யும் அதிசயம்

கருடன் உருவங் கருதும் அளவிற்

பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்

குருவின் உருவாங் குறித்தஅப் போதே

திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே–.2611

பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப்  பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள்  கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும்.  அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.

At the Thought of Guru’s Form Impurities Vanish

At the thought of Garuda’s form

The serpent’s poison leaves

Its terrors lose;

Unto it,

At the thought of Guru’s form

The triple Malas leave instant;

The Jiva then Siva becomes.

கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக  கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)

***

8

பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).

குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.

9

கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:

10

“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”

கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த  புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.

11

தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி,  அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.

அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.

திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்

12

பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.

13

விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்

மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)

14

 சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-

க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்

 ****

ALSO READ MY OLD ARTICLE

பிராணிகள் கண்டுபிடித்த மூலிகைகள் வேதம் சொல்லும் அதிசயச் செய்தி (Post No.10,456)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,456

Date uploaded in London – – 17 DECEMBER 2021

–SUBHAM—

TAGS- பாம்பு மந்திரம் , ஆறு புலவர்கள் , அதிசயச் செய்திகள், திருமூலர், வேதாந்த தேசிகன் , அதர்வண வேதம், தேவாரம், , காளிதாசன், நாலடியார், நீதி வெண்பா

Leave a comment

Leave a comment