Written by London Swaminathan
Post No. 15,802
Date uploaded in London –29 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருக்குறுங்குடி
இறைவன் அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி
இறைவி அருள்தரும் குறுங்குடிவல்லி
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம் பஞ்சகேதக விமானம்
வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.
‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,
நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.
இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
குறுங்குடி நம்பியை நம்மாழ்வார் (2189, 2393, 2568-2578) பெரியாழ்வார், (71) திருமங்கையாழ்வார் (1005, 1399, 1470, 1788-1807, 2065, 3815:14) ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
தனிச்சிறப்பு
இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..
திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).
ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்
ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..
“வெள்ளிறா” என்னும் சாதி மீனை தாய் கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற திவ்விய தேசம்.
மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.
முக்கியத்திருவிழா
பங்குனி பிரம்மோற்சவம்
கார்த்திகை கைசிகஏகாதசி
***
சாலை வழியாக திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில், நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
அழகிய நம்பிராயர் (நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார்).
திருக்குறுங்குடி சிற்பங்கள்
திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில், நுணுக்கமான மற்றும் பிரம்மாண்டமான சிற்பக் கலைகளுக்குப் பெயர் பெற்றது.
:யாளி மற்றும் விலங்கு சிற்பங்கள்: கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம், யானை மற்றும் பிரம்மாண்டமான யாளி சிற்பங்கள்
மகாபாரதக் கதைகள் மற்றும் பிரம்மனின் படைப்புத் தொழிலை விளக்கும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள்
கிளியின் மீது அமர்ந்த ரதியின் நுணுக்கமான சிற்பம்,
கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம் கருடன் ஆமை, யானை ஆகியவற்றை இரு கைகளிலும் முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம்; கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும் அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் அற்புதமானது.
வீரர்கள் போருக்குச் செல்வது போன்ற தத்ரூபமான சிற்பங்களும், பிரம்மாண்டமான தேர் போன்ற அமைப்பில் உள்ள மண்டபங்களும் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.
பாறைகளில் உயிரோட்டமான வடிவில் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்கள் மற்றும் புராண காலக் காட்சிகள் இக்கோயிலின் தனிச்சிறப்பு.
***
பாசுரங்கள்
813.
கரண்ட மாடு பொய்கையுள்* கரும்பனைப் பெரும்பழம்,*
புரண்டு வீழ வாளைபாய்* குறுங்குடி நெடுந்தகாய்,*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*
இரண்டுகூறு செய்துகந்த* சிங்கம் என்பது உன்னையே (2)
1005.
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
1470.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள் குழகா!* திருநறையூர்த்
தேனே* வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே
1788.
தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
1789.
தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*
ஊதை திரிதந்து உழறிஉண்ண* ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*
பேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*
கோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
1790.
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*
மாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*
கோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
1807.
சிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)
2065.
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா- மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய- அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை*
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக! என்று* மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே
2774.
மின்இடையாள் நாயகனை விண்நகருள் பொன்மலையை,*
பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*
மன்னிய தண்சேறை வள்ளலை, -மாமலர்மேல்-
2898.
நம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ?
3102.
உளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
குளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே?
3277.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
3286.
கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.
3287.
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)
—subham—
Tags–Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-38, திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருக்குறுங்குடி