Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-40; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,811)

Written by London Swaminathan

Post No. 15,811

Date uploaded in London –31 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவாட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஆகும். பரளி, கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகள் இந்த இடத்தை வட்டமாகச் சூழ்ந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோயில்களில் இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்.

திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.

மூலவர்   :     ஆதிகேசவ பெருமாள்

தாயார்     :     மரகதவல்லி நாச்சியார்.

தீர்த்தம்    :     கடல் வாய் தீர்த்தம்வாட்டாறுராம தீர்த்தம்

ஊர்       :     திருவாட்டாறு

மாவட்டம்  :     கன்னியாகுமரி

ஆதிகேசவ பெருமாள் கோயில் உலகப் புகழ்பெற்றது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வக் கோயிலாக விளங்கியது. புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், இந்தக் கோயிலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டது.

மூலவர்: மூலவரான ஆதிகேசவ பெருமாள் 22 அடி நீளத்தில், கடுசர்க்கரை யோகம் என்னும் மூலிகைக் கலவையால் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.

பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.

இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். 

ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். 

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும்மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறதுதிருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

****

பாசுரங்கள்

3838.  

அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்-

அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*

இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்*

மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)

3839.  

வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்*

கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*

பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து*

நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.

3840.  

நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி*

மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*

விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே*

எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!

3841.  

என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து*

வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*

மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்*

நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.

3842.  

வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே*

நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*

தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை-

தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே

3843.  

தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்*

நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*

மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க*

கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே.

3844.  

குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்*

திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*

வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்*

விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.

3845.  

மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்*

கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*

மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு*

எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே?

3846.  

திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்*

திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*

புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்*

இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே.

3847.  

பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்*

அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*

பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு*

வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.

3848.  

காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த*

வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*

பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்-

கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)

–subham—

Tags-40Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-40; திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவாட்டாறு ,ஆதிகேசவ பெருமாள் கோயில்

Leave a comment

Leave a comment