Written by London Swaminathan
Post No. 15,818
Date uploaded in London –2 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 42
திருவல்லா
திவ்ய தேசம் திருவல்லவாழ் – ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்
மூலவர் கோலப்பிரான், திருவாழ் மார்பன், ஸ்ரீ வல்லபன்
தாயார் செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திருமுகமண்டலம் கிழக்கே திருமுக மண்டலம்
பாசுரங்கள்
மங்களாசாசனம் நம்மாழ்வார் 11 பாடல்கள்
திருமங்கை ஆழ்வார் 11 பாடல்கள்
தீர்த்தம் கண்டாகர்ண தீர்த்தம் பாம்பா நதி
விமானம் சதுரங்க கோல விமானம்
இக்கோயிலில் தினமும் கருடனுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்டமான கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.
மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது.
மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.
இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.
இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.
மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..
இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.
குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.
ஸ்தல வரலாறு
சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.
துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.
கேரளாவின் கோட்டயம் (Kottayam) மற்றும் செங்கன்னூர் (Chengannur) நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக எளிதில் அடையலாம்.
மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).
கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.
கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி
செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.
திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.
திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்
திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.
திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்
***
பாசுரங்கள்
1808.
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்* ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!. (2)
1809.
மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற* நுண்இடை நுடங்கும்,*
அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி* முன் தூது சென்ற*
மன்னனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1810.
பூண்உலாம் மென்முலைப் பாவைமார்* பொய்யினை ‘மெய் இது’ என்று,*
பேணுவார் பேசும் அப்பேச்சை* நீ பிழை எனக் கருதினாயேல்,*
நீள்நிலா வெண்குடை வாணனார்* வேள்வியில் மண் இரந்த,*
மாணியார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1811.
பண்உலாம் மென்மொழிப் பாவைமார்* பணைமுலை அணைதும் நாம்என்று*
எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து* நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற* வேங்கடத்துஉளார்,* வளங்கொள் முந்நீர்-
வண்ணனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1812.
மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்* வாரணம் சூழ வாழ்ந்தார்,*
துஞ்சினார் என்பதுஓர் சொல்லை* நீ துயர்எனக் கருதினாயேல்,*
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து* அவள் நாளை உண்ட,-
மஞ்சனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1813.
உருவின்ஆர் பிறவிசேர்* ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*
அருவிநோய் செய்துநின்று* ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ* வேள்வியோடு அங்கம் ஆறும்,*
மருவினார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1814.
நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை* மெய்எனக் கொண்டு,* வாளா-
பேயர்தாம் பேசும் அப்பேச்சை* நீ பிழைஎனக் கருதினாயேல்,*
தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்* மங்குல் வான்ஆகி நின்ற,*
மாயனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1815.
மஞ்சுசேர் வான்எரி* நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
அஞ்சுசேர் ஆக்கையை* அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
சந்துசேர் மென்முலைப்* பொன்மலர்ப் பாவையும் தாமும்,* நாளும்-
வந்துசேர் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1816.
வெள்ளியார் பிண்டியார் போதியார்* என்றுஇவர் ஓது கின்ற,*
கள்ளநூல் தன்னையும்* கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
தெள்ளியார் கைதொழும் தேவனார்* மாமுநீர் அமுது தந்த,*
வள்ளலார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
1817.
மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்* வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்* கோலநீள்ஆலி நாடன்,*
கறைஉலாம் வேல்வல* கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு* இன்பம் நன்கு எய்துவாரே. (2)
2775.
அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*
என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*
மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்-
3321.
மான் ஏய் நோக்கு நல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வான் ஆர் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்* திருவல்லவாழ் உறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)
3322.
என்று கொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புது மாதவி மீது அணவி*
தென்றல் மணம் கமழும்* திருவல்லவாழ் நகருள்-
நின்ற பிரான்* அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*
3323.
சூடு மலர்க்குழலீர்!* துயராட்டியேன் மெலிய*
பாடும் நல் வேத ஒலி* பரவைத் திரை போல் முழங்க*
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்* தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*
3324.
நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பச்சிலை நீள் கமுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சு அணி மாடங்கள் மீது அணவும்* தண் திருவல்லவாழ்*
நச்சு அரவின் அணைமேல்* நம்பிரானது நல் நலமே*.
3325.
நல் நலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தணர் வேள்விப் புகை*
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்* தண் திருவல்லவாழ்*
கன்னல் அம் கட்டி தன்னை* கனியை இன் அமுதம் தன்னை*
என் நலம் கொள் சுடரை* என்றுகொல் கண்கள் காண்பதுவே?*
3326.
காண்பது எஞ்ஞான்றுகொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண் குரல் வண்டினொடு* பசுந் தென்றலும் ஆகி எங்கும்*
சேண் சினை ஓங்கு மரச்* செழுங் கானல் திருவல்லவாழ்*
மாண் குறள் கோலப் பிரான்* மலர்த் தாமரைப் பாதங்களே?*
3327.
பாதங்கள்மேல் அணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*
ஓத நெடுந் தடத்துள்* உயர் தாமரை செங்கழுநீர்*
மாதர்கள் வாள் முகமும்* கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ் ஞாலம் உண்ட* நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*
3328.
நாள்தொறும் வீடு இன்றியே* தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*
ஆடு உறு தீங் கரும்பும்* விளை செந்நெலும் ஆகி எங்கும்*
மாடு உறு பூந் தடம் சேர்* வயல் சூழ் தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* நிலம் தாவிய நீள் கழலே?*
3329.
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு* கைதொழக் கூடுங்கொலோ*
குழல் என்ன யாழும் என்ன* குளிர் சோலையுள் தேன் அருந்தி*
மழலை வரி வண்டுகள் இசை பாடும்* திருவல்லவாழ்*
சுழலின் மலி சக்கரப் பெருமானது* தொல் அருளே?*
3330.
தொல் அருள் நல் வினையால்* சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*
தொல் அருள் மண்ணும் விண்ணும்* தொழ நின்ற திருநகரம்*
நல் அருள் ஆயிரவர்* நலன் ஏந்தும் திருவல்லவாழ்*
நல் அருள் நம் பெருமான்* நாராயணன் நாமங்களே?*
3331.
நாமங்கள் ஆயிரம் உடைய* நம் பெருமான் அடிமேல்*
சேமம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமம் கொள் தென் நகர்மேல்* செப்புவார் சிறந்தார் பிறந்தே*
–SUBHAM—
TAGS- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-42; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவல்லா