Written by London Swaminathan
Post No. 15,828
Date uploaded in London –4 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
மலைநாட்டுத் திருப்பதி
Part 44
மூலவர் – இமையவரப்பன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் – செங்கமலவல்லி.
தீர்த்தம் – சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு.
விமானம் – ஜகஜ்ஜோதி விமானம்.
ப்ரத்யக்ஷம் – ருத்ரன் (சிவன்)
பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் யானை இறந்துவிட்டது என்று சொல்ல வேண்டிய தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி யானை என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.
தன் குருவான துரோணரை யுத்தத்தில் கொல்வதற்கு பொய் சொன்னது தர்மபுத்ரரின் மனதை வருத்தியபடியால், இத்தலத்திற்கு வந்து ஆலய ஜீர்ணோத்தாரணம் செய்து, திருசிற்றாற்றில் ஸ்நானமும் பகவத் பூஜையும் செய்து, மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. தர்மபுத்ரர் ஜிர்ணோத்தாரணம் செய்ததால், தர்மபுத்ரர் ப்ரதிஷ்டை என்பர்.
(அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது =”அச்வத்தாமா ஹத” என்று உரக்கச் சொல்லி “குஞ்ஜர” (Elephant) என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான்).
தலபுராணம்: திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது.
இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்கு திருமால் இவ்விடத்து காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறியமுடிகிறது.
***
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்
திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்
யாவர் மற்று என் அமர்துணையே
(3481) திருவாய்மொழி 8-6-2
என்று நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்செங்குன்றூர் என்ற
பெயரில் சிறந்த நகரமாக விளங்குகிறது. செங்குன்றூர் என்றால்தான் யாருக்கும்; எளிதில் விளங்கும். திருவல்லாவில் இருந்து இவ்வூர் வழியாக திருவாறன்விளை திவ்யதேசமான ஆரமுளாவிற்குப் பல பேருந்துகள் செல்கின்றன.
இங்குள்ள பேருந்து நிலையத்திலிறங்கி சிற்றாறு என்றோ அல்லது தர்மரால் கட்டப்பட்ட அம்பலம் எங்குள்ளது என்றால் எளிதில் பாதை காட்டிவிடுவார்கள். பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து நதியைக் கடந்து (தற்போது மேற்கு திசையில் சுமார் 2 பர்லாங் சென்றால் இத்தலத்தை அடையலாம்.]
மாநிலம்: கேரளம் மாவட்டம்: ஆலப்புழா
***
1. இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன். தலைப்பிலிட்ட பாடலில் நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்.
2. இன்றும் இந்தச் சிற்றாறு ஒரு சிறு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரம்மாண்டமான கட்டிடமாக ஒரு காலத்தில் இத்தலம் இருந்திருக்க வேண்டும். தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
3. கோவிலின் சுற்றுப்பிரகாரங்களில் வர்ணம் கலந்த தீபங்கள்
அகல்விளக்கு போல வரிசை வரிசையாக அமைந்துள்ள காட்சி காண்பதற்கு பேரழகு வாய்ந்தது.
***
மங்களாசாஸனம் –
நம்மாழ்வார் – 3480-90 – 11 பாசுரங்கள்.
3596.
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
3597.
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்* பொருந்துமூவுருவன் எம்அருவன்*
செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-
அங்கு அமர்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே?
3598.
என்அமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரைமீபால்-
நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண் நினைப்பிலும்* பிறிதுஇல்லை எனக்கே.
3599.
பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்அம்மான்*
செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய* மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடிஇணை அல்லதுஓர் அரணே.
3600.
அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருள்ஆகிலும்* அவனை
அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்புஒளி மறைக்கும்*
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.
3601.
எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவரியானை* தடம்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.
3602.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமலை மார்பும் செய்யஉடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.
3603.
திகழ என்சிந்தையுள் இருந்தானை* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை* அசுரர்வன்கையர் வெம்கூற்றை*
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!
3604.
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே*
இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே* புகழ்வுஇல்லையாவையும் தானே*
கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்* கூரியவிச்சையோடு ஒழுக்கம்*
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.
3605.
அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி* அவர்க்குஅருள் அருளும் அம்மானை*
அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*
அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை* நான்முகனை அமர்ந்தேனே.
3606.
தேனைநன்பாலை கன்னலைஅமுதை* திருந்துஉலகுஉண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே. (2)
–subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-44; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருச்செங்குன்றூர், திருச்சிற்றாறு). Kerala