
HINDU MUDRAS IN EGYPT

Written by London Swaminathan
Post No. 15,829
Date uploaded in London –4 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மோதக/ம்
தமிழில் கொழுக்கட்டை என்று பொருள்; விநாயகரின் கையில் , அதாவது பிள்ளையார் கையில், இருப்பது இந்த தின்பண்டம் . பிள்ளையார் சதுர்த்தி/கணேஷ் சதுர்த்தி பண்டிகையின் போது இதைச் செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வார்கள் ; அவருக்கு மிகவும் பிடித்த பண்டம் இது. வேகவைத்த அரிசி மாவினாலான பை போன்ற உறைக்குள் தேங்காய்ப் பூரணம் அல்லது வெல்லம் கலந்த பருப்பினை வைத்து நீராவியில் வேக வைப்பார்கள் ; பின்னர் இறைவனுக்குப் படைத்துவிட்டு இதைச் சாப்பிடலாம்; மகாராஷ்டிரா, தமிழ் நாடு மாநிலங்களில் இப்போதும் இதைச் செய்கிறார்கள் .
இதில் வேகவைத்த மாவினை கோலிக்குண்டு அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடுகு பருப்பு மிளகாய் தாளித்து செய்வதை ஊமைக் கொழுக்கட்டை என்பார்கள் ; அந்த உருண்டைகளை காரம் கலக்காமல் சர்க்கரை போட்ட பாலில் போட்டு சாப்பிடுவது பால் கொழுக்கட்டை எனப்படும். வேக வைத்த மாவிலான பைக்குள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணத்துக்குப் பதில், காரம் நிறைந்த உளுத்தம் பருப்பு முதலியவற்றை வைத்தும் செய்யலாம். இது நைவேத்தியத்து உகந்தது அல்ல ; ருசிக்காகச் செய்யப்படும் தின்பண்டம்தான்.
மோதகம் என்ற சொல் வால்மீகி ராமாயண யுத்த்த காண்டத்தில் வருகிறது ;பத்ம புராணத்தில் கணபதிக்குப் படைக்கும் பொருள்காவே வருகிறது .
Vālmīki-Rāmāyaṇa Yuddhakhaṇḍa 131.38
Modaka (मोदक) refers to a type food-stuff used in the worship of Gaṇeśa, according to the Padmapurāṇa 1.65
***
மோக்ஷ/ம் , முக்தி , வீடுபேறு
ஜன மரண , அதாவது பிறப்பு இறப்பு, என்ற சூழலிலிருந்து விடுபடுவது வீடுபேறு ; சம்ஸ்க்ருதத்தில் இதை முக்தி என்பார்கள் ; இந்துக்களின் வாழ்க்கை நான்கு லட்சியங்களைக் கொண்டது; அவையாவன- தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் ; அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ; இது தொல்காப்பியம், புறநானூறு திருக்குறள் முதலிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களின் இறுதி லட்சியம் மோக்ஷம்; இதை தேவார திருவாசக திவ்யபிரபந்தப் பாடல்களிலும் பஜனைப் பாடல்களிலும் இந்துக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்; புத்த, சமண, சீக்கிய மதக் கோட்பாடுகளிலும் இது இருக்கிறது ; பிறவிப் பெருங்கடலிலிருந்து- சம்சார சாகரத்திலிருந்து- விடுபடுவது விடுதலை ஆகும்.
***
மூகாம்பிகை
சரஸ்வதி தேவியின் இன்னும் ஒரு வடிவம்; இந்த தேவியின் கோயில் கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் என்னுமிடத்தில் உளது ; துர்கா, லெட்சுமி , சரஸ்வதி, ஆகியோரின் மூலமான ஆதி பராசக்தி என்றும் சொல்லுவார்கள் ; மூகாசுரனை வதைத்ததாலும், மூகம் என்னும் ஊமைத்தன்மையைப் போக்குவதாலும் இந்தப் பெயர் . ஆதி சங்கரர் இவரை ஸ்தாபித்ததாகவும் கதை ஒன்று உள்ளது; ஆதிசங்கரர் வழிபட்ட தேவியை அவர் கேரளத்துக்கு அழைத்ததாகவும், அவர் திரும்பிப்பார்க்காமல் இருந்தால் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகவும் தேவி வாக்கு அளித்தாள்; அவரது நம் பிக்கையைச் சோதிக்க, தேவி ஓரிடத்தில் நின்றாள் ; காலடிச் சலங்கை ஒலி கேட்டகவில்லையே என்று சங்கரர் திரும்பிப் பார்க்கவே தேவி அங்கேயே நின்றுவிட்டாள். அந்த இடத்தில் அவளது விக்கிரகத்தையும் ஸ்ரீ சக்கரத்தையும் அவர் நிறுவினார் என்பது அந்தக் கதை ஆகும் . எம் ஜி ராமச்சந்திரன் , ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் வைர வாள், தங்கக் கவசம் முதலியவற்றைக் காணிக்கையையாகச் செலுத்தியதால் தமிழ்ப் பாமரர்களுக்கு இடையேயும் இவள் புகழ் பரவியது.
***
மூக கவி
மூக கவி (Mooka Kavi) என்பவர்பிறவியிலேயே ஊமை; பின்னர் காமாட்சி தேவியின் அருளால் பேசும் திறனைப் பெற்றமகான் ஆவார். காஞ்சி காமாட்சி அம்மன் மீது 500 ஸ்லோகங்களைக் கொண்ட மூக பஞ்சசதீ என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார் ‘மூகன்’ என்றால் ஊமை என்று பொருள். , தேவியின் அழகை வருணிக்கும் இந்த புகழ்பெற்ற,அற்புத நூலைப் படைத்தார்.மூக பஞ்சசதீ மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது:ஆர்யா சதகம்: அம்பிகையின் மேன்மைகளை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள்.பாதாரவிந்த சதகம்: காமாட்சியின் திருவடித் தாமரைகளை வர்ணிக்கும் 100 ஸ்லோகங்கள்.ஸ்துதி சதகம்: அம்பிகையைத் துதிக்கும் 100 பாடல்கள்.கடாக்ஷ சதகம்: தேவியின் கருணைக் கடாட்சத்தைப் போற்றும் 100 ஸ்லோகங்கள்.மந்தஸ்மித சதகம்: அம்பாளின் புன்னகையை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள். இவர் மூக சங்கர (398-437 CE) என்ற பெயரில் காஞ்சி சங்காராச்சார்ய மடத்தின் இருபதாவது மடாதிபதியாக இருந்தார் என்று மடத்தின் வரலாறு இயம்புகிறது ; அவரை காஷ்மீர் அரசர்கள் மாத்ரு குப்தா, பிரவர சேனன் ஆகியோரும் போற்றினார்கள்
***
முசுகுந்தன்
இந்தியாவின் வடமேற்குப்பகுதியை ஆண்ட சூரிய குல மன்னர்கள் தமிழ்நாட்டுக்கு குடியேறி சோழ வம்சஆட்சியை ஸ்தாபித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களில் ஒருவன் முசுகுந்தன்.மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)
சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.
இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.
மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன.
புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.
சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.
சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர்.
***
முத்கல்ய ரிஷி
மௌத்கல்யர் (அல்லது முத்கலர்) என்பவர் இந்து புராணங்களின்படி நளாயினியை மணந்த ஒரு புகழ்பெற்ற முனிவர் ஆவார். வறுமையிலும் இறையச்சத்துடன் வாழ்ந்து, மோட்ச நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவர்.மௌத்கல்ய நளாயினி (இந்திரசேனை) என்ற பதிவிரதையான பெண், தன் கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் சுமந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. மௌத்கல்ய முனிவரின் வழித்தோன்றல்களே மௌத்கல்ய பிராமணர்கள் ; மேலும், சௌராட்டிர சமூகத்தின் பண்டைய கோத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ரிஷியைச் சோதிக்க ஒரு முறை கோபக்கார ரிஷி துர்வாசர் வந்து சாப்பிட உட்கார்ந்தார்; அவர் யாரோ ஒரு யாசகர் (பிச்சை எடுப்பவர்) போல வந்தார் கடோத்கஜன், பீமன் போல வீட்டிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தார். இவ்வாறு ஆறு முறை செய்தார் ; அப்போதும் முத்கல்யர் மலர்ந்த முகத்துடன் அன்னமிட்டார் . துர்வாசரும் மனம் மகிழ்ந்து தன்னுடைய உண்மை வடிவத்தை வெளிப்படுத்தினார் . அதே நேரத்தில் முத்கல்யரை அழைத்துச் செல்ல ஒரு புஷ்பக விமானம் / SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் வந்தது; தேவலோகத்துக்கு வரும்படி தேவர்கள் அழைத்தனர் ; இதில் என்ன நிபந்தனைகள் என்று ரிஷி கேட்டார் ; உங்கள் புண்ணியம் தீரும் வரை நீங்க தேவலோக இன்பங்களை அனுபவிக்கலாம் என்று பதில் சொன்னார்கள் ; அப்படியா போய் வாருங்கள்; நான் சொர்க்கத்துக்கு வரவில்லை மீண்டும் நீண்ட தவம் செய்கிறேன் என்றார் ; எந்த இடத்தில் நிரந்தர சுகம் உண்டோ, எந்த இடத்திலிருந்து நாம் பிறப்பெடுக்க பூமிக்கு வருவதில்லையோ அதற்காக நான் தவம் செய்வேன் என்றும் சொல்லி விமானத்தை திருப்பி அனுப்பிவிட்டார்; இந்த சம்பவம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது .
***
முத்ரா / முத்திரை

BUDDHA COPIED HINDU RISHIS; HE NEVER REMOVED TILAK OR HIS SACRED THREAD.




முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் ACUPRESSURE எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.
முத்திரைகள் நாட்டியம் முதல், பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.
பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.
‘முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-
1.எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்.
2.தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள் .
3.அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.
இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-
ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்; அர்கியஸ்தாபன முத்திரைகள்; அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்; நியாஸ முத்திரைகள்; ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்; நிவேதன முத்திரைகள்; காயத்ரீ முத்திரைகள்; கணேச முத்திரைகள்; சிவ முத்திரைகள்; விஷ்ணு முத்திரைகள்; நானா முத்திரைகள்; முத்திரைகளின் அகராதி
புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர் ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது.அவர் முகத்தில் பெரிய பொட்டு/ திலகம் இருக்கும்; தோளில் பூணுல் தொங்கும் ; இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் போரோபுதூரில் உள்ள புத்தர் சிலைகளில் அவர் மந்திர சக்தியுள்ள முத்திரைகளைப் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெற்றதை ஒரு ஜெர்மானியர் படங்களுடன் வெளியிட்டுள்ளார் .
பரத நாட்டிய சாஸ்திரத்திலுள்ள 108 முத்திரைகள் சிதம்பரம் முதலிய கோவில்களில் சிற்ப வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன உள்ளன
பழங்கால எகிப்திய சிலைகளில் தியான முத்திரை உள்ளது அபய முத்திரையும் உள்ளது புத்தர் சிலைகளைப் போல பல முத்திரைகளை காட்டும் சிலைகளும் உள்ளன (இது பற்றி நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளை எழுதி அது புஸ்தகமாகவும் வந்துள்ளது )
***
முரளீதரன்
கிருஷ்ணனின் பெயர் ; புல்லாங்குழலைத் தாங்கியவன் என்று பொருள் . மாடு மேய்க்கும் கண்ணனாக வலம் வந்தபோது, குழல் ஊதி மக்களையும் மாக்களையும் மயக்கிய வேணுகால லோலன் என்பதால் இந்த வடிவத்தில் கிருஷ்ணனின் படங்களும் பொம்மைகளும் சிலைகளும் எங்கும் காணப்படுகின்றன.
***
முருகன்
DR A NARAYANAN , SYDNEY, HAS TAKEN THIS PICTURE
தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப்பெயர் முருகனுக்கு உண்டு ; ஏனெனில் அகஸ்திய முனிவருக்கு முருகன் தமிழ் மொழியைக் கற்பிக்க, அவர் முதல் இலக்கணத்தை எழுதினார் ; இதை அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரைப் பாடிப் பரவியள்ளனர்.
முருகன் என்றால் அழகன் என்று பொருள்.
ஏனைய பெயர்கள் ; ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன், ஆறுமுகன், ஷண்முகன் ,குகன், குறிஞ்சிக் கிழவன்
யாதேயர் காலத்திலிருந்து ஆறுமுகங்களுடன் நாணயங்களில் காணப்படுகிறார் .
ஸ்கந்தன்-விசாகன் பொம்மைகள் விற்கப்பட்டதை பதஞ்சலி மகாபாரஷ்யம் குறிப்பிடுகிறது;
காளிதாசன் எழுதிய குமார சம்பவ காவியத்தால் ஈர்க்கப்பட்டு வைஷ்ணவர்களான குப்தப் பேரரசர்களும் தங்களுடைய புதல்வர்களுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்ற பெயர்களைச் சூட்டினார்கள்
தொல்காப்பியத்தில் சேயோன் ஆகத் தோன்றுகிறார்; சங்க கால திருமுருகாற்றுப்படை முதல் அண்மைக்கால அவ்வையார் அருணகிரிநாதர் வரை பாடப்பட்டுள்ளார்
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
……………… தொல்காப்பியம்
தமிழ் நாட்டில் அறுபடை வீடுகள் எனப்படும் கோயில்களுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் சென்று வழிபடுகின்றனர்
அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை
மனைவியர் – வள்ளி, தேவசேனை ;
வாகனங்கள்- மயில், பிணிமுகம் என்னும் யானை;
கொடி- சேவல், மயில் கொடிகள்;
சடங்குகள் – பால் குடம், காவடி;
பிடித்த நைவேத்தியம் – பஞ்சாமிர்தம்;
கொன்ற அசுரர்கள்- தாரகாசுரன், சூரபத்மன் ;
***
மூலாதாரம்

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,
விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று ஏழு சக்கரங்கள் உடலில் உண்டு என்று யோகசாஸ்திரங்கள் பகர்கின்றன .குண்டலினி சக்தி பாம்பு வடிவத்தில் மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும்; அதை மூச்சுப் பயிற்சிகளினால் — அதாவது பிராணாயாமத்தினால் –தலைக்குக் கொண்டுபோகும்போது பிரம்மானந்தம்/ பேரானந்தம் என்னும் சமாதி நிலை கிட்டும்; பாதி வழி போவதற்குள் அற்புத சக்திகள் தோன்றும்; அந்த நிலையில் மண், பெண்,பொன் ஆசைகளில் சிக்கி பாதி சாமியார்கள் சிறைச் சாலைக்குப் போய்விடுவார்கள் . தப்பித் பிழைப்பவர்கள் ராமகிருஷ்ணர், ரமணர் போல அழியாத புகழ் பெறுவார்கள்
உடலிலுள்ள சக்கரங்கள் : மனித உடலில் ஆற்றல் மையங்களாக ஏழு முக்கிய சக்கரங்கள் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்) விளங்குகின்றன. இந்த சக்கரங்களைச் சீரமைப்பதன் மூலம் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு மேம்படுவதாகத் தமிழ் மற்றும் வேத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மனத்தின் ஏழு நிலைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).
மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.
மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.
தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.
இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.
***
மூல நட்சத்திரம்
இது 27 நட்சத்திரங்களில் ஒன்று ; திருமூலரும் சங்க காலப் புலவர் மாமூலனும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம் ; ஆண் மூலம் அரசாளும் என்ற பழமொழி தமிழில் உள்ளது
இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–
அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை
பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி
கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்
ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),
(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. )
மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.
திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்
27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)
புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை;
பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்;
ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு;
மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு)
பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன்;
உத்தரம் = மானேறு, கதிர்நாள், கடை எழும் சனி, பாற்குனி, மாரி நாள்;
அத்தம் (ஹஸ்த) = ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, கயினி
சித்திரை =நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான்;
சுவாதி = விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று;
விசாகம் = முறம், முறில், சுளகு, காற்றினாள், வைகாசி, அனில நாள், சேட்டை;
அனுஷம் = பனை, புள்தேள், நட்புநாள், புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்திர நாள்;
கேட்டை(ஜேஷ்டா) = தழல், துளங்கொளி, வல்லாரை, இந்திரன் நாள், சேட்டை, வேதி, எரி, பின்று;
மூலம் = அன்றில், வில், குருகு, கொக்கு, தேட்கடை, சிலை, ஆனி, அசுர நாள்;
பூராடம் (பூர்வாஷாட) = உடைகுளம், முற்குளம், நீர்நாள்;
உத்திராடம் = ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள்;
சித்திரை (ஸ்பைகா) நட்சத்திரம்;
திருவோணம் = முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம்;
அவிட்டம் (தனிஷ்டா) = பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி
சதயம் (சதபிஷக்) = நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள்;
பூரட்டாதி = நாழி, முக்கொழுங்கோல் (பூர்வ ப்ரோஸ்தபத), புரட்டை
உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத);
ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்;
என் கருத்துக்கள்:
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.
சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.
பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.
மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.
பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.
இதோ ஆங்கிலப் பெயர்கள்:–
1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
2) Bharani – No 28,29,41 Taurus பரணி
3) Krittika – Pleiades கார்த்திகை
4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி
–Subham—
Tags – முருகன், மோக்ஷ, மூககவி, முத்ரா , மூலம் ,மூல நட்சத்திரம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70, 27 நட்சத்திரங்களின் பெயர்கள்