
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,827
Date uploaded in London – 4 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-5-26 தீபம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
தர்மத்தின் வழியில் நடந்து இறைவனின் நாமத்தை உச்சரித்து நூறு ஆண்டுகள் வாழ்வீராக! – ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
ச. நாகராஜன்
22-8-2001 விநாயக சதுர்த்தி தினத்தன்று ப்ரசாந்தி நிலையத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை:

ஆரம்பத்தில் ப்ரசாந்தி நிலையத்தில் சேஷகிரிராவ் இருந்தார். அவர் ஒரு பெரிய அதிகாரி. அவர் ஆரத்தி எடுப்பார். அவர் நூறு வருடங்கள் வாழ்ந்தார். இன்னொருவர், கிஷ்டப்பா என்று அவருக்குப் பெயர் சேஷகிரிராவுக்குப் பின்னால் வந்தவர் மறைந்து விட்டார். அவர் வெகு தூரத்திலிருந்து கால்நடையாக வருவார். பஜனை முழுவதிலும் இருந்து கலந்து கொள்வார். பின்னர் ஸ்வாமிக்கு ஆரத்தி எடுப்பார். அவரும் நூற்றியோரு வருடங்கள் வாழ்ந்தார். வேங்கடகிரியிலிருந்து வந்த பெரிய ஆளுமை கொண்ட சுரய்யா ஆறு அடி மூன்று அங்குல உயரம் இருப்பார்.அவரும் இங்கு இருந்தார். அவர் மிகவும் பிரபலமானவரும் கூட. இரவில் ஸ்வாமி ஓய்வெடுக்கும் போது அவர் ஸ்வாமியின் பாதங்களைப் பிடித்து விடுவார். ஸ்வாமி அவரிடம், “சுரய்யா, எனது பாதங்கள் வலிக்கவில்லை. நீ அதை அமுக்கிப் பிடிக்க வேண்டாம்” என்று கூறும் போது, அவர், “ஸ்வாமி. உங்களுக்கு வலி இல்லை. ஆனால் நான் பிடிக்கவில்லை என்றால் எனக்கு வலிக்கிறது. ஆகவே நான் உங்களின் பாதங்களைப் பிடிக்க விடுங்கள்” என்பார். ஸ்வாமி கண்களை மூடிய பிறகு அவர் அறையை விட்டு வெளியே செல்வார். இந்த வேலையை அவர் வாழ்நாளில் கடைசி நாள் வரை செய்தார். அவரும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். காருண்யாநந்த ஸ்வாமிகளும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். கஸ்தூரி மிகவும் சீக்கிரமாகவே இறந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரசாந்தி நிலையத்திற்கு வந்த பிறகு அவர் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.
யாரெல்லாம் இங்கு வருகிறார்களோ அவர்கள் நீடித்து வாழ்வார்கள். இதன் காரணம் என்ன? அவர்கள் எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு நீடித்த வாழ்வைத் தருகிறது.
சிலர் ஜாகிங் செய்து கொண்டு, ஒரு பயனும் இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் வரும் போது அவர்கள் ஸ்வாமியிடம் வந்து பிரசாதம் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படி கழிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள். இன்றைய நாட்களில் இளைஞர்கள் குரங்கு மனத்தைக் கொண்டிருக்கிறார்கள். குரங்கு மனத்தை விட இன்னும் மோசமான மனத்தைக் கொண்டிருக்கிறார்கள். எதைச் சொன்னார்களோ அதை அடுத்த நிமிடமே மறக்கிறார்கள். நாக்கிற்கு எலும்பில்லை. ஆகவே அது எப்படி வேண்டுமானாலும் சுழலும்.
நீங்கள் செய்த சத்தியத்தை இறக்கும் வரை காப்பாற்ற வேண்டும். பல பேர்கள் ஸ்வாமியிடம் வந்து, “ஸ்வாமி! எனது பற்கள் விழுகின்றன. எல்லாப் பற்களையும் இழந்த பிறகு என்ன பயன்?”என்கின்றனர்.
ஸ்வாமி அவர்களிடம், “நீங்கள் பற்களை இழக்கலாம். ஆனால் நாக்கு இருக்கிறதே” என்று சொல்வார்.
எல்லாப் பற்களும் வலிமையானவை. வலிமையானவை முன்னால் போகும். மென்மையான நாக்கு இன்னும் இருக்கும். நீ மறையும் போது நாக்கும் போய்விடும். நாக்கை நன்கு பாதுகாக்க வேண்டும். ஆகவே தான், “உன்னால் எப்போதுமே பணிந்து போய்க்கொண்டிருக்க முடியாது; ஆனால் எப்போதுமே பணிவாகப் பேச முடியும்” என்று சொல்லப்படுகிறது.
மென்மையாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள். சத்தியத்தைப் பேசுங்கள். தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். இறைவனின் நாமத்தைப் பாடுங்கள். அதை மற்றவர்களைக் கேட்கச் செய்யுங்கள். எதற்காக நாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்காகவா? அல்லது சந்து பொந்துகளில் சுற்றிக் கொண்டிருப்பதற்காகவா? உடலில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நீங்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். சரியான செயல்களைச் செய்ய வேண்டும். புனிதமான செயல்களைச் செய்வதற்காகவே உடல் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதர்மவழியில் செல்லக் கூடாது. ஒருபோதும் தப்பானவற்றைச் சொல்லக் கூடாது. உங்கள் உடல் தர்ம வழியிலேயே அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். ஸ்வாமி உங்களை நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
**