Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-46; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post No.15,836)

Written by London Swaminathan

Post No. 15,836

Date uploaded in London –6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 46

திருவாறன்விளை, கேரளம்

திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

மலைநாட்டுத் திருப்பதி

மூலவர் – திருக்குறளப்பன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – பத்மாஸநி நாச்சியார்.

தீர்த்தம் – வேதவ்யாஸ ஸரஸ், பம்பா தீர்த்தம்.

விமானம் – வாமன விமானம்.

ப்ரத்யக்ஷம் – ப்ரஹ்மா, வேதவ்யாஸர்.

விசேஷங்கள் – யுத்தத்தில், கர்ணனின் தேர் இடது சக்கரத்தை பூமிவிழுங்கிய பொழுது, கர்ணன், தன் ரதத்தைத் தூக்கிவிட்டு வரும்வரை பூமியில் இருக்கும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லியும், வஞ்சகமாக பாணத்தைப் போட்டுக் கொன்றதால், மனது வருந்திய அர்ஜுனன், இவ்விடம் வந்து தவம் செய்து இந்த கோவிலை ஜூர்ணோத்தாரணம் செய்ததாக ஸ்தலபுராணம்.

ஒரு பெரிய மேட்டின் மேலுள்ள இப்பெரிய கோயில் அர்ஜுனனால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாம். பக்கத்தில் கோவில் மதிலைத் தொட்டுக்கொண்டு அழகிய பம்பாநதி ஓடுகிறது.    பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து தவமிருந்தான் என கூறுவர்.

இந்த ஸ்தலத்தில்தான் சபரிமலை ஐயப்பஸ்வாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின்போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

 நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

செங்கண்ணூரிலிருந்து கிழக்கே 6 மைல், பஸ்ஸில் போகலாம்.

அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.

இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும்
வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்துவைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

 குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும்
துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.

  இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலை ஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

  கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி
இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
     
   நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம். இத்தலத்து எம்பெருமானின் திருக்குறளப்பன் என்ற திருநாமத்தை தலைப்பில் இட்ட பாடலில் நம்மாழ்வார் பாசுரித்துச் செல்கிறார்.
****

பாசுரங்கள்

3552.  

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,*

இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,*

அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*

அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)     

3553.  

ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*

ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*

மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,*

மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!      

3554.  

கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*

ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*

பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*

நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!    

3555.  

வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*

வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*

வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,*

வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.   

3556.  

மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,*

பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,*

மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,*

உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.

3557.  

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,*

என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,*

நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.

3558.  

நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,*

நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*

வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,*

வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே.

3559.  

அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,*

நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,*

சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,*

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.

3560.  

தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,*

நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*

யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,*

மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே.

3561.  

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,*

சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,*

சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,*

சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.    

3562.  

தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே

தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல்

தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)

–subham—

Tags Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-65; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 46, திருவாறன்விளை, கேரளம்,  ஆறன்முளா, ஆரன்முளா, அர்ஜுனன் கர்ணன் வன்னிமரக் காய்கள், துலாபாரம்

Leave a comment

Leave a comment