HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 (Post No.15,850)

Written by London Swaminathan

Post No. 15,850

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நபக / நாபாக

புராணங்களில் இதே பெயரில் பலர் இருப்பதால் குழப்பமாகத் தோன்றும் .

Nabhaga (नभग):—நபக என்பவர் ஸ்ராத்த தேவ – ஷ்ரத்தா ஆகியோரின் புதல்வர் .

Nābhāga (नाभाग).—நாபாக– என்பவர் இக்ஷ்வாகு மன்னரின் சகோதரர் ; புகழ்பெற்ற அம்பரீஷன் இவருடைய புதல்வர்.; மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் இவர்கள் கதைகள் வருகின்றன. நாபாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தானம் செய்தபோது பூமி தேவியே அவரிடம் யாசகத்துக்குச் சென்றாள்;  எப்போதுமே மாமிசம் சாப்பிடாத அவருக்கு பிரம்மலோகத்தில் நிரந்தர வாசம் கிடைத்தது.

இன்னும் ஒரு கதையும் உண்டு;

வைவஸ்வத மனுவின் புதல்வரும் அம்பரீஷனின் தந்தையுமான

 Nābhāga (नाभाग).—நாபாக- பிரம்மச்சாரியாக இருந்தபோது அவருடைய தந்தை எல்லாவற்றையும் மூத்த சகோதர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; தந்தையின் சொற்படி ஆங்கீர ரிஷி வம்சத்தினர் நடத்திய யாகத்துக்குச் சென்று சடங்குகள் பற்றி விளக்கினார்; யாகம் செய்தவர்கள் சொர்க்கத்துக்குச் சென்ற பின்னர் அவர்களுடைய  செல்வம் அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொள்ளும் தருணத்தில் கருப்பு மனிதன் வடிவத்தில் ருத்ரன் தோன்றி யாகத்தில் விடப்படும் மிச்சம் மீதியெல்லாம் ருத்ரனுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்; அதற்கென்ன எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாபாக சொன்னார் ; ருத்ரன் மனம் மகிழ்ந்து அனைத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டு பிரம்மன் பற்றிய ஞானத்தையும் சொல்லிக்கொடுத்தார்

***

நாகர்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலைக் கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—

நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்): கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்.

குப்தர்கால கல்வெட்டுகளிலும் கணபதி நாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம். ( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க).

நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் பொருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

 சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டான்: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

 நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

 கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

அர்ஜுனனின் பேரன் ஆன பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.  நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி- யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

 நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் தலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும். ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்!

ஆயிரம் தலையுடைய வாஹனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) SNAKE, SERPENT என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’– பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

இதைப்படங்களுடன் நான் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன் (காண்க- நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722).

***

நகர

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் கோயிலை நகர் என்று குறிப்பிட்டனர் ; முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பாடலில் இது வருகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் நாகர என்ற கோவில் வகைகளைக் குறிப்பிடுகின்றனர் இன்னுமொரு பொருள் – நகரம் – பெரிய ஊர் என்பதாகும்.  வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திர நூலிலும் நகரம் வருகிறது; நாகரீகம் என்பதும் நகர மக்களின் குணங்களைக் குறிக்கிறது இதற்கு எதிர்ப்பதம் பட்டிக்காட்டான்.

***

நசிகேதன்

சாந்தோக்ய உபநிஷத்தில் நசிகேதன் கதை வருகிறது ; இவர் உத்தாலக ஆருணியின் மகன். சின்னப்பையனாக இருந்தபோது தந்தை செய்த தானங்களை உற்று நோக்குகிறார் ; பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்களை அவர் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை பார்த்து வருத்தப்பட்ட நசிகேதன் , அப்பா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டான் ; இதையே மூன்று முறை கேட்டவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது ; உன்னை ம்ருத்யுவுக்குக் (யமதர்மன்) கொடுக்கப்போகிறேன் என்று கத்திவிட்டார்; உடனே மயங்கி விழுந்த நசிகேதன் யமலோகம் சென்று மூன்று நாட்களுக்கு காத்துக் கிடக்கிறான்; அவனைக் கண்டு அதிசயித்த யமன் எப்படி வந்தான் என்ற விஷயத்தை அறிந்தபின்னர் நீ போ!  பூலோகத்துக்கே திரும்பிப் போ; உனக்கு வரம் தருகிறேன் என்றான் . அப்படியா எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மீண்டும் சுமுக உறவு ஏற்பட்ட வேண்டும் என்று வேண்டுகிறான் ;அப்படியே ஆகுக என்று யமனும் சொல்கிறான் .

ஆயினும் நசிகேதன் கிளம்பவில்லை ; பல ஆசைகளைக் காட்டியும் மயங்காத நசிகேதன், தனக்கு ஆன்மா , பிரம்மன் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிறான் ; யமனும் அவ்வாறே செய்கிறான் .

உபநிஷத்தைத் தவிர, மஹாபாரதத்தில் வேறு ஒரு செய்தி வருகிறது; பசு தானம் செய்து மேன்மை அடைந்தவர்களைக் காண வேண்டும் என்று நசிகேதன் சொன்னவுடன் அவர்களைக் காணவும் யமதர்மன் ஏற்பாடு செய்கிறான் ; இது கோ தானத்தின் சிறப்பினைக் காட்டுகிறது.  .

****

நஹுஷன் 

நஹுஷன் ,இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT  விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; தற்காலிக இந்திரன் பதவிக்குப்   பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ‘ஜாலி’யாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் நஹுஷன் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது. 

அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!

நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா , ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; உடனே அதைச் செய்யுங்கள் என்று தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான் .

ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; பல்லக்கு ரெடி. நஹுஷன் பல்லக்கில் ஏறினான் ;  மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும்! அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையால் மெதுவாகச் செல்கிறோம்” .

உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான  அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.

குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார் சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்- பாம்பு

 அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான். அயிராணி/ இந்திராணி / சசி தேவி  தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப்  பயன்படுத்தினாள். 

****

நகுலன்

பாண்டுவின் இரண்டாவது  மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர் நகுலன்; இரட்டையர்களாகப் பிறந்தவர்களில் சகாதேவன் இவருடைய சகோதரர்  ஆவார் . இவர் குதிரை தொடர்பான சாஸ்திரங்களில் வல்லவர் ஆகையால் மறைந்து வாழும் 13-ஆவது ஆண்டில் கிரந்திகா என்ற பெயரில் விராட மன்னனுக்கு குதிரைகளை பராமரிப்பதில் உதவி செய்தார் ; 13-ஆவது ஆண்டின் இறுதியில் த்ரிகர்த்த தேசப் படைகள் விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தாக்கியபோது இவர் தன்னுடைய உண்மை அடையாளத்தைக் காட்டினார் ;  இவரும் சகோதரர் ஆன சகாதேவனும் வேத கால இரட்டையர் அஸ்வினி குமாரர்களின்  அம்ஸங்கள் நிறைந்தவர்கள் ஆவர்.

****

நள தமயந்தி 

கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர்.

காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி. இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)

இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.

நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர்.

நளன் செய்த எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை.

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

(இரண்டு நீண்ட கட்டுரைகளில் விஞ்ஞான விஷயங்கள் அனைத்தையும் எனது பிளாக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளேன்.)

–SUBHAM—

TAGS –HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 நஹுஷன், நகுலன், நளன், நசிகேதன், நாபாக , எட்டு அதிசயங்கள்

Leave a comment

Leave a comment