
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,864
Date uploaded in London – 12 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சோஷியல் மீடியாக்களில் பொய் சொல்லியே பிழைப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?ச. நாகராஜன்
அப்பப்பா! ஒரு வழியாக ஓய்ந்தது ஒரு அரசியல் அலை! எத்தனை பொய்கள்! எத்தனை கட்டி விடப்பட்ட கதைகள்! எத்தனை அவதூறுகள்!
மண்டையே சுழல்கிறது.

நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். கெட்டவர்கள் “கடவுளாகி” விடுகிறார்கள்.
எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்” உண்மையைப் பொய் ஆக்கலாம்!
சோஷியல் மீடியாக்களில் எத்தனை மணி நேரம் வேஸ்ட்!
“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று
டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை லட்சம்!
இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?
2005ம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய ஆய்வு இது.
எதிர்காலத்தைப் பற்றி இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மை தானா, நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.
ஆச்சரியகரமான பதில் வந்தது.
உண்மை இல்லை!
284 அரசியல் நிபுணர்களிடமிருந்து அவர் 28000 அரசியல் கணிப்புகளை எடுத்து அலசி ஆராய்ந்தார்.
முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார்.
கூக்குரலிட்டு கத்தி ‘நாளையே உலகம் பாழாய் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார் அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின.
மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மை ஆயின.
எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும் அவர் இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா என்று பாருங்கள் என்கிறார் பிலிப்..
- கணிப்பை நம்பரில் சொல்லுங்கள்.
இ’ந்தக் கட்சி பெரும்பான்மையாக ஆகும். அது தேறவே தேறாது’ என்று அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். இவர் 150 இடங்களை பெறுவார் அவர் 30 இடங்களையே பெறுவார் என்று ஒருவர் சொல்லும் போது உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று அவர்கள் நிலவரத்தை ஆராய்ந்த பின்னரே நம்பரைச் சொல்வார். இதையும் மீறி இரண்டு சீட்டுகளே வாங்குவார் என்று சொல்லும் போலி அறிவாளி ஒருவர், எதிராளி 108 இடங்களை வாங்கி விட்டால்
முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
அவர் ஒரு போலி என்பதை முத்திரை குத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்வதை இனி யாராவது கேட்பார்களா?
- கேள்வியைச் சுருக்கி குறிப்பாகக் கேளுங்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா என்று கேட்கக் கூடாது.இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியை நான்கு வாரங்கள் செய்தால் என் எடை எவ்வளவு குறையும் என்று குறிப்பாகக் கேளுங்கள்.முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது. இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும். தவறாக இருப்பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும்.
- உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள். ‘இது போல எப்போது யாருக்கெல்லாம் நடந்தது. அதன் பலன் அல்லது விளைவு என்ன’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை ஆராயும் கேள்வி. இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா, அதே போலத் தான் இன்றும் சகல அம்சங்களும் உள்ளனவா என்பனவற்றைக்
கேட்டால் கணிப்பு தவறாகப் போனாலும் அடிப்படையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
- ஃபெர்மி வழியைக் கடைப்பிடியுங்கள். பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்து கடைப்பிடித்த வழி இது. ஒரு
பிரச்சனையை ஏழு எட்டு துண்டுகளாகப் பிரித்து உண்மையை அறிவது
தான் இந்த வழி உதாரணமாக இந்த வேலையை நள்ளிரவுக்குள்
முடிப்பேனா என்று கேட்காதீர்கள். இரவு 9 மணிக்கு எத்தனை பக்கம்
முடிப்பேன். அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டி இருக்கிறது. இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன என்று பல சிறு துண்டுகளாக பிரச்சினையை ஆக்கி விடை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் பதில் – உண்மையான பதில் -கிடைக்கும்.
இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காக சோஷியல் மீடியாக்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவோம்.
இந்த நான்கு அம்ச வழிமுறையை பிலிப் சொல்கிறார்; கேட்டுப் பலனை அனுபவிப்போமே!
**