Written by London Swaminathan
Post No. 15,865
Date uploaded in London –13 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திரு நாகை
தாயார் : ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
மூலவர் : நீலமேகப் பெருமாள்
உட்சவர்: சௌந்தர்யராஜன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : நாகப்பட்டினம்
கடவுளர்கள்: நரசிம்மா,கஜலெட்சுமி
வைணவ திவ்யதேசம் (திருநாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில்)
தீர்த்தம் – ஸாரபுஷகரிணி.
விமானம் – ஸெளந்தர்ய விமானம்.
ப்ரத்யக்ஷம் – நாகராஜன், திருமங்கையாழ்வார், கலியன், ப்ரஹ்மாதிகள்.
விசேஷங்கள் – வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோலத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.
****
பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் அருளிய 10 பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளன.இப்பதிகம் அச்சோப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் அழகில் ஆழ்வார் மயங்கி, “அச்சோ, ஒருவன் அழகியவா!” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் வியந்து பாடியுள்ளார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம்– இரண்டாம் ஆயிரம்– திருமங்கை ஆழ்வார்– பெரிய திருமொழி– திருநாகை: அச்சோப்பதிகம்.
1757 பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
அச்சோ ஒருவர் அழகியவா (1)
1758 தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க
பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-
அச்சோ ஒருவர் அழகியவா (2)
1759 வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-
அச்சோ ஒருவர் அழகியவா (3)
1760 வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (4)
1761 கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-
அச்சோ ஒருவர் அழகியவா (5)
1762 வெம் சின வேழ மருப்பு ஒசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த
காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (6)
1763 பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்
அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (7)
1764 மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
அச்சோ ஒருவர் அழகியவா (8)
1765 எண் திசையும் எறி நீர்க் கடலும்
ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
அச்சோ ஒருவர் அழகியவா (9)
1766 அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10)
***
இங்கு புகழ்பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது
அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.
மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.
மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.
—subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திரு நாகை, அம்பாள் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி