Picture: Ivory Figures.
Written by London Swaminathan
Post No. 15,870
Date uploaded in London –14 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 2
தமிழ் அதிசயம்!
உலகிலேயே ஐந்து காப்பியங்களை ஆபரணங்களின் பெயரைச் சூட்டியவன் தமிழன் ஒருவனே ; சம்ஸ்க்ருதத்தில் காளிதாசன் நூல்களில் ஒவ்வொரு ஆபரணம் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தாலும் அவன் நூல்களுக்கு நகைகளின் பெயர்களை சூட்டவில்லை ; தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள் நகைகளின் பெயரில் உள்ளன .
தமிழன் ஒரு நகைப்பைத்தியமோ என்று வியக்க வேண்டியுள்ளது!
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டல கேசி
வளையாபதி
****
டாக்டர் பட்டம் கிடைக்கும் !
Picture- Parvati as huntress, Madurai Meenakshi Temple.
இந்துப் பெண்கள் அணிந்த நகைகள் பற்றி ஒருவர் ஆராய்ந்து எழுதினால் எளிதில் டாக்டர் பட்டம் பெறலாம் ; ரிக் வேதம், ஹரப்பா நாகரீகம் , சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், சிலைகள், ஓவியங்களில் ஒரு என்சைக்ளோபீடியா அளவுக்குத் தகவல்கள் உள்ளன!
***
சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் மாதவியின் அலங்காரம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன; அவள் என்னென்ன ஆபரணங்களை அணிந்து இருந்தால் என்று இளங்கோ அடிகள் ஒரு பட்டியல் தருகிறார் ; இது ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவியம் ஆதலால் அப்போதைய தமிழக நிலையை நமக்கு இளங்கோ படம்பிடித்துக் காட்டுகிறார். .
மாதவியின் ஒப்பனை
கூந்தலை நறுமணம் கலந்த நீரில் குளிப்பாட்டினாள். நறும்புகை கொண்டு உலர்த்தினாள். கால் அடிமுதல் தலை முடிவரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால்விரலுக்குக் கணையாழிகள்; கணைக்காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள்: கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள்: செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள். இத்தகு ஒப்பனைகளோடு அவன் மகிழ அவனோடு ஊடலும் கூடலும் கொண்டு அவனை மகிழ்வித்தாள்.
புது விருப்பு
இந்திரவிழாவில் கலைவிழாக்களைக் கண்ட நகரத்து மாந்தர் அடுத்தது கடல்விளையாட்டைக் காணக் கடற்கரை நோக்கிச் சென்றனர். மாதவியும் அங்குச் சென்று அதனைக் காண அவாவினாள். கோவலனும் உடன் புறப்பட இசைந்தான்.
வைகறை விடிந்ததும் கோவலனும் மாதவியும் கடற்கரை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் பயணம் உல்லாசப் பயணமாக அமைந்தது. அவன் அத்திரி என்னும் அழகிய குதிரைமீது ஏறிச் சென்றான். அவள் வையம் என்னும் முடுவண்டியில் அமர்ந்து சென்றாள்.
Picture- Siva as hunter, Madurai Meenakshi Temple.
கடலாடு காதை (from Project Madurai website;thanks)
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை 80
வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110
உருகெழு மூதுர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப 115
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக் 120
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு…………………………………………
****
இதில் வரும் ஆபரணங்கள் அணிகலன்கள்
மெல் விரல் நல்லணி – மோதிரம்,
பரியகம் – காற் சவடி ,
நூபுரம் – சிலம்பு,
அரியகம்- பாதசாலம் ,
குறங்கு செறி யணி – கவான் செறியாபரணம் ,
முத்திரை- அரையின் முத்துவடம்,
பிறங்கிய முத்து- பெரிய முத்து,
முப்பத்திரண்டு வடத்தினாற் செய்த விரிசிகை என்னும் மணி மேகலை
காமர் கண்டிகை- தோள் வளையென்றது- கழுத்து வட்டத்தின் பின் தாலிக்கு இரண்டு பக்க முன்பகுத்துப் போந்து வாகு வலையத்தோடு தொடக்கிக் கிடப்பதோர் ஆபரணம் ; காமர் கண்டிகையுடனே மணி நெருங்கின தோள்வளையைத் தோளுக்கணிந்ததென்றுமாம் .
மத்தக மணி – உச்சியிலே வைத்த மாணிக்கம் ; மத்தகத்தையுடைய சூடகத்துச் சிலேயுள்ள மணியோடு வைரங்கட்டுதலுமாம்.
கைவளை- சந்துக் காரை .
பரியகம்- பாசித்தாமணி; கைச் சரியுமாம்-
வால்வளை – சங்கவளை- பவழப் பல்வளை-கடக வளை.
வாளைப் பகுவாய் மோதிரம் – முடக்கு மோதிரம்,
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் – செங்கேழ் மணியுடைய மோதிரம்; அவை இரத்தினங்கட்டின அடுக்காழி.
வாங்குவில் வயிரம்– நுடங்கின ஒளியையுடைய வயிரம்
மரகதத் தாள் செறி- மரகதத்துடைய தாள் செறி; இல்லை மரகத நாயகமாகிய வட்டப்பூ .
சங்கிலி – வீரச் சங்கிலி,
கயிற்கடையொழுகிய கோவை- கழுத்தாபரணங்களிற் கொக்கிவாய் முத்தாரமாகச் செய்து அதிலே நவரத்தினங்களைக் கோத்து முதுகு மறையவிடும் பின் தாலி ,
இந்திர நீலக் கடிப்பிணை – நீல குதம்பை; இடையிடை திரண்ட சந்திரபாணியென்னும் நாம வேறுபாட்டையுடைய வயிரமுழுதும் கட்டின கடிப்பிணை; இவை இரண்டு காதில் அணிவது.
தொய்யகம் – தலைப்பாளை,
புல்லகம் – தென் பல்லி, வட பல்லி- தொடர்ந்த தலைக்கணி.
இவையனைத்தும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் – உ.வே.சா . உரையிலிருந்து கிடைத்த தகவல்.
Lord Siva’s ornaments.
–subham—
Tags- தமிழ் அதிசயம்! சிலப்பதிகாரத்தில் ஆபரணங்கள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 2, தமிழ் அதிசயம்!