Written by London Swaminathan
Post No. 15,869
Date uploaded in London –14 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவாலி
இவ்வூரும் அருகிலுள்ள திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இது 34-வது திவ்ய தேசமாகும்.திருவாலி கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) வீற்றிருந்த திருக்கோலம், வேதராஜன்
தாயார் : ஸ்ரீ அம்ருதகட வல்லி, பூர்ணவல்லி திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர்
உற்சவர்: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : இலாட்சணி புஷ்கரிணி
புராண பெயர் : ஆலிங்கனபுரம்
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். அப்போது அந்த சீற்றம் அடங்காமல் இருந்ததால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு, பூலோகம் மேலும் அழியாமல் இருக்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பை மகாலட்சுமி எடுக்க வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தனர். அதையேற்ற மகாலட்சுமி, பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதன் காரணமாக இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று.
இப்பகுதியில் திருமங்கையாழ்வார், குறுநில மன்னராகத் திகழ்ந்து வாசம் செய்ததால், அவர் ‘ஆலிநாடன்’ என்று அழைக்கப்படுகிறார்.
திருநகரி ஸ்தல வரலாறு :
பிரம்மாவின் ஐந்தாவது புதல்வர் கர்த்தமப் பிரஜாபதி மோட்சம் வேண்டும் என்று எம்பெருமானைக் குறித்துத் தவமிருந்தான். அவனுக்கு அருள்தர வேண்டும் என்றாள். எம்பெருமான் அதற்கு சம்மதித்தும், அவனுக்கு உடனே மோட்சம் தரவில்லை. அதனால் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் ஒரு தாமரை மலருக்குள் புகுந்து கொண்டாள் . பின்னர் எம்பெருமான் வந்து அவரை ஆலிங்கனம் செய்ததால் ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. அப்பொழுது கர்த்தம ப்ராஜாபதி மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் பிரம்ம புத்திரனை நோக்கி அவனுக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்று அருளினார்.
திருவாழி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
திருவாழி தலத்தில் மேற்கு நோக்கி திருவாழி அழகியசிங்கர் கோயில் அமைந்துள்ளது. தாயார் பெயர் பூர்ணவல்லி நாச்சியார்.
திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் வேதராஜன்; தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார். இக்கோயில் விமானம் 7 நிலைகளைக் கொண்டது.
லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு.
திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
தனி சன்னதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உத்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார்.
ஆழ்வாருக்கு தனி கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனி கொடிமரம் உண்டு. மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சன்னதிகள் கொடிமரம் உள்ள மற்ற இரண்டு ஆகும்.
பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.
ரங்கநாத பெருமாள், தாயாருடன் இளம் திருமண தம்பதிகளாக திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்த ஸ்தலம். அதனால் இந்த எம்பெருமானுக்கு கல்யாண ரங்கநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்.
***
திருவாலி திருநகரி
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், சீர்காழியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
திருவிழாக்கள் :
வைகாசி சுவாதி திருவிழா (10 நாள்), ஆவணி பவித்ரோற்சவம்,
வைகுண்ட ஏகாதசி,
தை 12 கருட சேவை,
பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷ தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
திருமங்கைமன்னன் பெருமாள் வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழாவும் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடைபெறுகிறது.
***
திருவாலி பாசுரங்கள்
1188.
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
1189.
நீலத்தடவரை* மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே!
1190.
நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை* என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ* அரிவார் முகத்து எழு வாளை போய்*
கரும்பு அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே!
1191.
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
நின்மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே!
1192.
நீடு பல்மலர் மாலைஇட்டு* நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா!*
பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து* பல் பணையால் மலிந்து*
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே!
1193.
கந்த மாமலர் எட்டும்இட்டு* நின்காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே!
1194.
உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த*
அப்புலவ! புண்ணியனே!* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின்மிசை*
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே!
1195.
சங்கு தங்கு தடங் கடல் கடல்* மல்லையுள் கிடந்தாய்*
அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்*
இளந்தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே!
1196.
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு*
ஒரு பொருள் வேதியா! அரையா!* உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*
நீதி ஆகிய வேதமாமுனியாளர்* தோற்றம் உரைத்து*
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!* அணி ஆலி அம்மானே!
1197.
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான்உலகே. (2)
1198.
தூவிரிய மலர் உழக்கி* துணையோடும் பிரியாதே*
பூவிரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே!*
தீவிரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏவரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே. (2)
1199.
பிணிஅவிழு நறுநீல* மலர் கிழிய பெடையோடும்*
அணிமலர்மேல் மதுநுகரும்* அறுகால சிறு வண்டே!*
மணிகழுநீர் மருங்குஅலரும்* வயல் ஆலி மணவாளன்*
பணிஅறியேன் நீ சென்று* என் பயலை நோய் உரையாயே.
1200.
நீர்வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்*
தன்தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர்ஆரும் வளர்பொழில்சூழ்* திருவாலி வயல்வாழும்*
கூர்வாய சிறுகுருகே!* குறிப்புஅறிந்து கூறாயே.
–subham—
Tags- திருவாலி, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-54; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்