Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-55; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,873)

Written by London Swaminathan

Post No. 15,873

Date uploaded in London –15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிறுபுலியூர்

அரு மாகடல் பெருமாள் கோயில்

திவ்யதேசம்— திருச்சிறுபுலியூர்பாலவியாக்ரபுரம்    

மூலவர்– அருள்மாகடல் பெருமாள் / சலசயனப்பெருமாள் 

உத்ஸவர் — க்ருபாசமுத்திர பெருமாள்    

தாயார்– திருமாமகள் நாச்சியார் / உத்சவர் தயாநாயகி    

திருக்கோலம்– கிடந்த திருக்கோலம் (புஜங்க சயனம்)

திசை– தெற்கு  

மங்களாசாசனம்– திருமங்கையாழ்வார் 10

இத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு, இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு சிறு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம். கருடனுக்கு அபயமளித்த தலம். எனவே இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேடனுக்கும் பூமிக்கு கீழ் கருடனுக்கும் சன்னதி அமைந்துள்ளது. கருடா சௌக்கியமா? என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம்.

ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த ஸ்தலம் நாகதோஷங்கள் நீங்க சிறப்பான ஒன்று. பால் பாயசம் நிவேதனம், ஆதிசேஷனுக்கு செய்வது சிறப்பு.

கருடனுக்கு அபயமளித்த இடம். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சன்னதியும் உள்ளன.

இத்தலத்தின் எம்பெருமானை பூஜித்து மோக்ஷம் அடைந்த வியக்கிரபாதர் எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகிலேயே உள்ளார். பதஞ்சலியும் எம்பெருமான் சன்னதியில் உள்ளார்.

கருடாழ்வார் சன்னதி, உள் திருச்சுற்றில் விஷ்வக்சேனர், மூலவர் சன்னதி, வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.

ஸ்தலபுராணம்

ஒரு சமயம் கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைக் குறித்து ஆதிசேஷன் இந்த க்ஷேத்திர குளக்கரையில் தவம் புரிந்தார். எம்பெருமான் மகிழ்ந்து ஒரு மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி அன்று இந்த ஸ்தலத்தில், பால சயனத்தில் எழுந்துஅருளினார். ஆதிசேஷனை அனந்த சயனமாக்கிக்கொண்டு குழந்தை வடிவில் சேவை சாதிக்கிறார்.

வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, அவர் சிவலிங்க ரூபமாக

வழிகாட்ட, அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் அவரை தொடர்ந்து, இத்தலத்திற்கு வந்து சேர்ந்து எம்பெருமானின் கருணையால் முக்தி பெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என்று ஆயிற்று.

ஆழ்வார்கள்

இத்திருத்தலத்தில், எம்பெருமான் புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாக இருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட, உமது குறைதீர திருக்கண்ணமங்கையில், நமது மிகப்பெரிய உருவை காணும் என்று எம்பெருமான் அருளிச் செய்த க்ஷேத்திரம்.

மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி அருகில் இந்த திவ்யதேசம் இருக்கிறது. சுற்றிலும் அருமையான வயல்வெளிகளுக்கு இடையே அழகான திவ்யக்ஷேத்திரம். அதைவிட அழகான சிறிய திருவுருவில் சந்நிதியில் சயனத்தில் எம்பெருமான்.

****

பாசுரங்கள்

1628.  

கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்*

வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-

தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து-

உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)

1629.  

தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி-

மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*

திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே

1630.  

பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!*

அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து-

உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே*

1631.  

வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்*

தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*

தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து

ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*

1632.  

நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்-

எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-

செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே* 

1633.  

முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்*

கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*

செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்*

தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே*

1634.  

சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-

மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*

தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்-

தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)

1635.  

மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*

உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்-

செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே*

1636.  

கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா*

பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*

திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)

1637.  

சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*

கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை*

பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)

***

கீழேழு திவ்ய தேசங்கள்; taken from Facebook;thanks

“கீழேழு திவ்ய தேசங்கள்” வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, பெருமாளே நேரடியாக முக்தி அளிக்கக் கூடிய “சப்த அம்ருத க்ஷேத்திரங்கள்” (ஏழு மோட்சத் தலங்கள்) ஆகும்!

அந்த அற்புதக் கோயில்களின் பட்டியல் இதோ:

1.திருக்கண்ணபுரம் (ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகில்.

• சிறப்பு: பெருமாளின் திருமுடியில் (தலையில்) நிஜமாகவே தலைமுடி (சௌரி) இருந்ததால் “சௌரிராஜன்” என்று பெயர். விபீஷணனுக்குப் பெருமாள் தனது நடையழகைக் காண்பித்த தலம். இங்கு வழங்கப்படும் ‘முனையதரையன் பொங்கல்’ பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

***

2.திருக்கண்ணமங்கை (ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: திருவாரூர் அருகில்.

• சிறப்பு: லட்சுமி தேவி பெருமாளைத் திருமணம் செய்யத் தவம் இருந்த இடம். தாயாரின் திருமணத்தைக் காண தேவர்கள் தேனீக்களாக வந்து அமர்ந்ததாகக் கூறப்படும் ‘தேன்கூடு’ இன்றும் கருவறையில் உள்ளது விசேஷம். “பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில்” இதுவும் ஒன்று.

***

3.திருக்கண்ணங்குடி (ஸ்ரீ லோகநாதப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ளது.

• சிறப்பு: திருமங்கையாழ்வார் பெருமாளின் விக்ரகத்தை நெல் வயலில் ஒளித்து வைத்த தலம். இங்குள்ள மகிழ மரம் என்றும் காய்க்காத “உறங்கா புளி” மற்றும் “காயா மகிழம்” என்ற அதிசய இயற்கை அமைப்பைக் கொண்டது.

***

4.திருநாகை (ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: நாகப்பட்டினம் நகரம்.

• சிறப்பு: ஆதிசேஷன் (நாகராஜன்) தவமிருந்து பெருமாளைத் தரிசித்த தலம். இங்கு மூலவர், உற்சவர் தவிர ‘அழகுப் பெருமாள்’ என்ற சௌந்தரராஜப் பெருமாள் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார்.

***

5.திருச்சேறை (ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: கும்பகோணம் – திருவாரூர் வழித்தடத்தில் உள்ளது.

• சிறப்பு: காவிரித் தாய் பெருமாளின் மடியில் குழந்தையாக அமர்ந்து தவம் செய்த தலம். மாசி மாத மாசி மகத்தன்று காவிரித் தாய்க்குப் பெருமாள் காட்சியளிக்கும் வைபவம் பிரசித்தி பெற்றது.

***

6.சிறுபுலியூர் (ஸ்ரீ அருமாகடல் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம்பேரளம் அருகில்.

• சிறப்பு: வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெருமாளிடம் வேண்டியதால்அவருக்குப் பெரிய வடிவைக் காட்டாமல்மிகச் சிறிய பாலசுப்பிரமணியர் போன்ற வடிவில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் தலம்.

***

7.தலைச்சங்கநாண்மதியம் (ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: மயிலாடுதுறை – ஆக்கூர் வழித்தடத்தில் உள்ளது.

• சிறப்பு: சந்திரனின் சாபத்தை நீக்கி, அவனுக்குப் பாதி நிலவை (நாண்மதி) பெருமாள் தன் சிரசில் சூடிக் கொண்ட தலம். பெருமாளின் கையில் உள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு மிகவும் விசேஷமானது.

இந்தக் கீழேழு திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிப்பது, நம் பாவங்களை நீக்கி மன அமைதியையும், மோட்சத்தையும் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

–subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-55; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், சிறுபுலியூர் ,அரு மாகடல் பெருமாள் கோயில்,  கீழேழு திவ்ய தேசங்கள்

Leave a comment

Leave a comment