இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 3 காளிதாசன் நூல்களில் ஆபரணங்கள்! (Post.15,874)

 Written by London Swaminathan

Post No. 15,874

Date uploaded in London –15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆராய்ச்சிக் கட்டுரை –Part 3

ராமாயணத்துக்கு அடுத்தபடியாக மோதிரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவன் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனே ; ராமன்  கொடுத்த மோதிரத்தை இலங்கையில் அசோகவனத்திலிருந்த சீதா தேவியிடம் அனுமன் கொடுத்த காட்சி மிக முக்கியமான காட்சி;  இதை ராமாயண உபன்யாசகர்கள் சொல்லும்போது அவர்களுக்கு பரிசாக, மோதிரத்தைக் கொடுப்பதையும் நானே கண்டிருக்கிறேன் . இந்த மோதிர உத்தியை காளிதாசன் சாகுந்தலம் , மாளவிகாக்னி மித்திரம், விக்ரமோர்வசீயம் ஆகிய  நாடகங்களில் பயன்படுத்தியதோடு  அவன் எழுதிய  ரகுவம்சம், மேக தூதம், ருது சம்ஹாரம் , குமார சம்பவம் ஆகிய நூல்களில் ஆபரணங்களையும் எடுத்தாண்டுள்ளான்.

காளிதாசன் பயன்படுத்திய சொற்கள் :

நூபுரம் – காற் சலங்கை ; இதை சங்கத்தமிழ் நூல்களிலும் புலவர்கள் பயன்படுத்தினார்கள் .

மேகலா அல்லது காஞ்சி அல்லது  ரசனா  – இடையில் அணியும் ஒட்டியாணம் ;இதையும்  தமிழ் நூல்களில்  புலவர்கள் பயன்படுத்தினார்கள் . மணி மேகலை என்பது ஒரு காப்பியத்தின் பெயர்.

ஹார – தமிழில் ஆரம் அல்லது மாலை ; மாலை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்தான்  ;ஆயினும் தமிழ் இலக்கியத்தில் காணலாம் . தமிழில் தொங்கல் ,அலங்கல் போன்ற தூய தமிழ்ச் சொற்களும் உண்டு.

ஏகாவளீ- பல ரத்தினங்களால் இணைக்கப்பட்ட சங்கிலி ;

தாரஹார – பெரிய முத்துமாலை

வலய – கையில் அணியும் காப்பு ; மாலை போலவே இந்தச் சொல்லும் தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளில் வருகிறது; இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை என்பதை மெய்ப்பிக்கிறது .

கேயூர அல்லது அங்கத – ஆண்களும் பெண்களும் தோள்களில் அணியும் ஆபரணம்.

கர்ணபூர அல்லது குண்டல அல்லது தாடங்கம் – காதில் அணியும் அணி ; இதுவும் ஆண்களும் பெண்களும் அணிவது; சிவ பெருமான் சிலைகளிலும் காதுகளில் தொங்கும் .

சூடாமணி – சூளாமணி – தலையில் தொங்கும் நகை;

மூக்குத்தி பற்றி எங்கும் சொல்லப்படவில்லை ; ஆயினும் பிராமணர் முதல் பழங்குடி மக்கள் வரை இதை அணிந்து வருகின்றனர்

முத்ரிகா – மோதிரம் – அங்குலீயக-

__

சாகுந்தலத்தில் இது முக்கியப் பங்காற்றுகிறது; மாளவிகாக்நி மித்திரத்திலும் பாம்பு மோதிரம் முக்கியப் பங்காற்றுகிறது.

உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம் ஆகும் ; துஷ்யந்தன் என்ற மன்னன் கானகத்தில் வாழ்ந்த பறவைப் பெண்ணை கந்தர்வ / காதல் திருமணம் செய்கிறான்( சாகுந்தல என்றால் பறவைங்களால் வளர்க்கப்பட்டவள் என்பது பொருள்; இதிலிருந்து வந்த சகுனம் – பறவை ஜோதிடத்தை — இன்றுவரை இந்துக்கள் பின்பற்றி வருகின்றனர் ); நாட்டுக்குத் திரும்பியபின்னர் சகுந்தலையை மறந்து விடுகிறான்; அவன் சகுந்தலாவுக்குக் கொடுத்த மோதிரத்தையும் ஒரு மீன் விழுங்கி விடுகிறது; சகுந்தலையை கண்வ மஹ ரிஷி  சிஷ்யர்கள் புடை சூழ துஷ்யந்தன் அரண்மனைக்கு அனுப்புகிறார்; மன்னரோ “பெண்ணே! உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதே” என்று மறதியில் உளறுகிறான்; அந்த நேரத்தில் ஒரு மீனவன் பிடித்த மீனின் வயிற்றில் அரச மோதிரம் (ரத்னாங்குலீயகா) இருக்கவே அதைக் கொண்டு ஓடிவருகிறான்; அந்த மோதிரத்தைக் கண்டவுடன் பழைய நினைவுகள் வந்தவுடன் சகுந்தலையை மனைவி என்று துஷ்யந்தன் ஒப்புக்கொள்கிறான்; அவர்களுடைய மகன் பரதன் ஆண்டதால் இந்தியாவுக்குப் பாரத நாடு என்ற பெயர் ஏற்பட்டதை மஹாபாரதம் இயம்புகிறது; அதை பாரதியாரும் பாடி மகிழ்ந்துள்ளார்.

***  

மாளவிகா அக்நிமித்திரம் நாடகத்தில் ஒரு சுவையான மோதிரக் காட்சி வருகிறது; மாளவிகா சிறை வைக்கப்பட்டாள்; அவளை விடுவிக்க நகைச் சுவை நடிகன் / விதூஷகன் ஒரு தந்திரம் செய்கிறான் ; பாம்பு கடித்தது போல பாசாங்கு செய்து மஹாராணி தாரிணியிடமிருந்து பாம்பு மோதிரத்தைப் பெறுகிறான்; அதைக்கொண்டு பாம்பு விஷத்தை இறக்கிவிடலாம் என்பது அக்கால நம்பிக்கை; அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்ச் சிறைக் காவலர்களிடம் காட்டி , “ராணியின் உத்தரவு; உடனே மாளவிகாவை விடுதலை செய்யுங்கள்” என்கிறான்; சிறைக்காவலர்களும் உடனே மாளவிகாவை விடுதலை செய்கின்றனர்; எல்லா சம்ஸ்க்ருத நாடகங்களிலும் விதூஷகன் / காமெடியன் – கதாபாத்திரமுண்டு; இன்று வரை இந்த 2000 ஆண்டு வழக்கத்தை இந்தியத் திரைப்படங்களில் காணலாம். அரசவை விதூஷகனுக்கு மிகவும் செல்வாக்கு இருந்ததைத் தெனாலிராமன் கதைகளிலும் காண்கிறோம்; சம்ஸ்க்ருதத்தில் 600-க்கும் மேல் நாடகங்கள் இருக்கின்றன ; தமிழில் பழங்கால நாடகம் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை!

***

காளிதாசன் காவியங்களில் நகைகள் ரத்தினக் கற்கள்

ரகுவம்சம் – 8-63; 13-23; 8-58; 8-64; 9-37; 10-8; 11-17; 15-1; 16-65; 13-21; 16-56; 14-19; 15-77;16-74;

மேக தூதம் – 1-28; 1-35; 1-31; 1-69;2-9;

குமார சம்பவம் – 1-37; 3-55; 4-85-10; 7-618-14; 8-83; 7-69;7-35; 6-84;

மாளவிகா அக்கினி மித்ரம் -3-17;4-3; 3-20; 4-4; 6-24;

விக்ரம ஊர்வசீயம் -3-15; 4-52;

அபிக்ஞான  சாகுந்தலம்- 3-10; 1-13; 5-13;

ருது சம்ஹாரம்- 4-4; 3-20; 1-5; 3-20; 6-6; 4-3; 2-24;3-19; 2-19;

***

சங்க காலத் தமிழர்கள் தங்கம், வெள்ளி, முத்து, பவளம் மற்றும் இயற்கை மணிகளைக் கொண்டு நேர்த்தியான நகைகளைச் செய்தனர். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தாலி, காதணி, மேகலை, மற்றும் வளையல்கள் போன்ற ஆபரணங்கள்

சங்க காலத்தில் மக்கள் விரும்பி அணிந்த முக்கிய நகைகள்:

  • காதணிகள் (குழை, காதணி): காதுகளில் அணியப்பட்ட இந்த நகைகள் சங்கப் பாடல்களில் மிகவும் புகழப்படுகின்றன.
  • மேகலை (ஒட்டியாணம்): இடுப்பில் அணியப்படும் ஆபரணம்.
  • தாலி (மங்கல அணி): திருமணத்தின் அடையாளமாக கழுத்தில் அணியப்படும் அணிகலன்.
  • வளையல்கள் (வளையல் / கடகம்): கைகளில் அணியப்பட்ட அணிகலன். சங்க காலத்தில் சங்குகள், தங்கம் மற்றும் உலோகங்களால் இவை செய்யப்பட்டன.

நகைகள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல், மக்களின் கலை நயத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், பொருளாதார முதலீடாகவும் பயன்பட்டன.

–subham—

Tags- இந்துக்கள், பழங்கால நகைகள், Part 3 காளிதாசன், நூல்கள், ஆபரணங்கள்!

Leave a comment

Leave a comment