சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள், நகைகள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 4 (Post.15,877)

Written by London Swaminathan

Post No. 15,877

Date uploaded in London –16 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள் , நகைகள்

அணிகலன் = ஆபரணம் , நகை

மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால் இப்போது தமிழர்கள் அணியும் பல நகைகளுக்கு சங்க இலக்கியத்தில் சான்றுகளே இல்லை ! இந்தியா முழுதும் சிலைகளிலும் ஓவியங்களிலும் எண்ணற்ற அணிகலன்களைக் காண்கிறோம் ஆயினும் சங்க இலக்கியத்தில் சில அணிகலன்களே பேசப்படுகின்றன .

சங்க காலப் புலவர்கள் நகைகள் ஆபரணங்கள் பற்றி நிறைய பாடல்களில் பாடி இருக்கிறார்கள் ; அவர்கள் நூபுரம் , மணி , கிண்கிணி முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர் ; வளையம் என்பதும் இரண்டு மொழிகளிலும் உள்ளது ; அக்கால மக்கள் பெரும்பாலும் சங்கு வளையல்களை அணிந்தனர் ஹரப்பா மொஹஞ்சதாரோ உருவங்களில் வளையல் சங்கிலி முதலிய ஆபரணங்களைக் காணலாம் .

நூபுரம் – காற்சிலம்பு – நூபுரம் என்பது சிலம்பு, பாதசரம் அல்லது கால் சலங்கை ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சம்ஸ்க்ருதச் சொல். கலித்தொகை 83-16; 96-16

கழல் -பழங்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள், மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் தங்கள் கால்களில் அணியும் வீரத்தைக் குறிக்கும் அணிகலன் ‘கழல்’ என அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியத்திலுள்ள 18 நூல்களிலும் – பத்துப்பாட்டு, எட்டுத் தொகை – இதைக்  காணலாம்.

கிண்கிணி – ஸம்ஸ்க்ருதச் சொல்; கிண்கிணி என்பது  அழகிய சதங்கை ஆகும்.குழந்தைகளின் கால்களிலும், இடையிலும் கட்டப்படும் சிறிய மணிகள் கொண்ட சலங்கையை இது குறிக்கும். இது நடக்கும்போது இனிய ஓசையை எழுப்பும். இசைக்க கருவிக்கும் இந்தப் பெயர் உளது

அகம் 254;

கலி.74;81;85;86;96.

குறு.148;

திரு .13;

நற்.250;269;

பதி.52;

புறம் 77;198;

மணி – உருண்டை வடிவிலான ரத்தினக் கல் அல்லது ஸ்படிகம் அல்லது உலோகத்திலான பொருள்; கோவில் மணி என்ற பொருளும் உண்டு; சங்க இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது ; ரிக்வேதம் முதல் எல்லா சம்ஸ்க்ருத நூல்களிலும் அதே பொருளில் உள்ளது ..

சிலம்பு – காலில் அணியும் அணி; சங்க இலக்கியத்தில் அகத்துறைப் பாடல்களில் தேகம் வரும் ஆபரணம் .

வளை– கையில், தோளில்  அணியப்படும் நகை; சங்க இலக்கியத்தில் கணக்கற்ற இடங்களில் வரும் ஆபரணம் இது ; சம்ஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்குகிறது

வளை , மணி போன்ற சொற்கள் மிகப்பழங்காலம் முதல் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் இருப்பதால் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தன என்பது உறுதியாகிறது .

****

மோதிரம் – ஒரே ஒரு இடத்தில் காணப்படுகிறது ; கலி-84;

சுறாமீன் /மகர மோதிரம்

கலித்தொகை 84

சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட,   20

மோதிரம் யாவோ? யாம் காண்கு

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன்; ‘காமன் கொடி எழுதி, என்றும்

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்  25

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்’ என்பது தன்னை

அறீஇய செய்த வினை

தாய் மகனிடம் சினம் கொண்டு பேசுகிறாள் – குறும்புக்கார பயலே! என்னை ஏளனம் செய்வதற்காக ஒருத்தி அடிவித்த மோதிரம் எது? காட்டு. – என்றாள்.

அவன் கையைக் காட்டினான்.

அவனது விரல்கள் “நறா”ப் பூவின் இதழ்கள் போன்று இருந்தன.

அந்த  விரலுக்கு ஏற்றாற் போல சுறா மீன் போல் கலை வேலைப்பாடு கொண்ட மோதிரம் விரலில் இருந்தது.

அதனைத் தாய் தொட்டுப் பார்த்தாள்.

அது காமனின் கரும்பு வில் எழுதிய தன் தோளில் உன் கணவன் மார்பினைக் கட்டி ஆள்வேன் என்று அந்த விலைமகள் /பரத்தை  சொல்லிக் காட்டுவது போல அவள் இவனுக்கு அணிவித்திருக்கிறாள் – இவ்வாறு தலைவி நினைக்கிறாள்..

***

ஐம்படைத்தாலி, புலிப்பல் தாலி, தங்கத் தாலி பற்றி

புறம் – 374; 77;

குறு -161;

அகம் -7;

ஆகியவற்றில் குறிப்புகள் உள. குழந்தை பிறந்த ஐந்தாம் நாளில் அணியும் ஐம்படைத்தாலி போல , அரையில்- இடுப்பிற்கு கீழே – இடபப்பூணும் அணிவர்.

அதனோடு வெட்டாத மழுவும் வாழும் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருக்கும். இடையுள்ள இடபப்  பூண், ஈசல் பூச்சியின் நிறம்போன்று பவளத்தால் செய்யப்பட்டிருக்கும்.

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு

பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி

உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல்

மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்

தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை  5

கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,

பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்  10

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்

சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு

ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,

அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண,   15

சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை

காலில் கிண்கிணி. பொன்னைச் சுட்டு உள்ளே பரல் இடும் இரண்டு அடுக்காகச் சுற்றி அழல் தீயில் இட்டுப்  பொடி வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டது.

உடுத்திருப்பவை – பொன்னும் வயிரமும் பதித்துக் கை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு இடுப்பில் அணியும் காசு. அதன் மேல் பவளம் பதித்துச் செய்யப்பட்ட கோவை.

தைத்துப்  போட்டிருப்பது – பூ தைத்த ஆடை. கால் வரையில் திரைக்கால்-சட்டை.

கையணி – நண்டுக் கண் போல அமைப்பினை உடைய ‘கண்ணுள்’ என்னும் பெயர் கொண்ட ஒளி திகழும் வளையல்

பூண்டிருப்பவை – வெட்டாத வாள். எறியாத மழு. பூண் என்னும் அணிகலன் – இவை பசுவும் காளையும் போல் அமைந்த அணிகலன்கள். மூதாய் என்னும் தம்பலப் பூச்சி நிறத்தில் பவளம் பதித்த அணிகலனில் கட்டப்பட்டிருந்தன.

சூடியவை – கடலில் பிறந்த முத்தும், மலையில் பிறந்த பல்வகை மணிகளும் கோத்து அமைக்கப்பட்ட முக்கோவை வயிர மாலை – இது வண்டு மொய்க்கும் பூ மாலை போல்ஆனால் வண்டு மொய்க்காத மாலையாக  நூலில் கோத்துச் செய்யப்பட்டிருந்தன

****.

அந்தணர்களின் வேதம் ஓதாத சிலர்,  பெண்களுக்கு வளையல் செய்யும் தொழில் ஈடுபட்டதை அகநானுறு கூறுகிறது ; சங்குகளை அறுத்து  அவர்கள் வளையல் செய்தனர் .

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த

வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,

தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,

சிதரல் அம் துவலை தூவலின், மலரும்

தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,   அகம் –செய்யுள் 24  

***

மூக்குத்தி, காதில் அணியும் தோடு முதலிய சொற்கள் சங்க காலத்தில் இல்லை ; ஆனால் காதில் ஓலை , பூ முதலியன அணிந்தனர் ; பிற்காலத்தில் நுதலணி , மூக்குத்தி, காதணி, கொலுசு முதலியன வழக்கத்தில் வந்தது போலும்! பனைமரத்தின் குறுத்தோலையைச் சுருட்டிக் காதில் அணிந்தனர்.

அட்டிகை ,சங்கிலி , சதங்கை போன்ற சொற்களும் சங்க இலக்கியத்தில் கிடையாது

சங்க காலச் சொல்லடைவில் ஒரு பொருள் குறி க்கப்படாததால் அது அக்காலத்தில் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது.

பிற்காலத்தில் எழுந்த தேவாரம், திவ்விய பிரபந்தம் திருப்புகழ் முதலிய நூல் களில் பல  anikalankalaik காணலாம்; ஆயினும் சங்க காலப்புலவர்கள் ஏன் இவைகளைக் குறிப்பிடவில்லை என்பது ஆராய்ச்சிக்குரியதே ; நாம் தமிழ் நாட்டில்  நாம் காணும் சிலைகளும் ஓவியங்களும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை  உடையனதான்.

***

நவரத்தினங்களில் முத்தும் பவளமும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பாடப்பட்டுள்ளன ; வயிரம் அகம், பரிபாடல், பதிற்றுப்பத்தில் உளது ;

நீலம்  என்ற சொல் சம்ஸ்க்ருதம் தமிழ் மொழிகளில் ஒரே பொருளில் கையாளப்படுகிறது நீலமணி என்ற சொல்லும் புறப்பாட்டில் வருகிறது  ; மரகதம் இல்லாவிடினும் பச்சை என்ற நிறம் வரும் இடங்களில் உரைகளில் மரகத்தைக் காணலாம்.

***

தமிழ் அணிகலன்கள் 

நுதலணி என்பது தமிழ் மொழியில் நெற்றிச்சுட்டி (Forehead ornament), மகரநெடுங்குழை, கொலுசு, மகர மோதிரம்,  தாடங்கம், மெட்டி.

–subham—

Tags-   தமிழ் அணிகலன்கள் , சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள், நகைகள்! ,இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 4, ஐம்படைத்தாலி, புலிப்பல் தாலி, தங்கத் தாலி, சுறாமீன் /மகர மோதிரம்

Leave a comment

Leave a comment