WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,880
Date uploaded in London – 17 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
வியாதி போக்கும் நாமங்கள்!
ச. நாகராஜன்
ரிஷி என்பவர் யார்? – சாணக்கியர் விளக்கம்!
அக்ருஷ்டபலமூலேன வனவாசரத: சதா |
குருதேஹரஹ: ச் ரார்த்தம் ரிஷிர்விப்ர: ச உச்சதே ||
ரிஷி என்பவர் யார் என்பதை சாணக்கியர் சாணக்கிய நீதியில் இப்படிக் கூறுகிறார்:
தானே வளரும் பழங்களையும் வேர்களையும் சாப்பிட்டு, ச்ரார்த்தத்தில் வழிபடுவதற்குரிய மூதாதையருக்கு அவற்றையே அர்ப்பணிப்பவரே ரிஷி எனப்படுவார்.
முடி இறக்க உகந்த கிழமைகள்!
அக்ஷௌரேபி நக்ஷத்ரே குர்வோத் புதசோமயோ: |
யுக்தேபி திதிநக்ஷத்ரே ந குர்யாச்சனிபௌமயோ: ||
மொட்டை அடிக்க உகந்தபடி கிரகங்கள் இல்லை என்றாலும் கூட, திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் ஒருவர் மொட்டை அடித்துக் கொள்ளலாம். (முடி இறக்கிக் கொள்ளலாம்). கிரகங்கள் மிக நல்ல இடங்களில் இருந்தாலும் கூட சனிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும் மொட்டை அடிக்கக் கூடாது.
சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.
எந்த திசையில் எந்தக் கிழமைகளில் செல்ல வேண்டும்?
அங்காரபூர்வே கமனே ச லாப:
சௌமே சனி தக்ஷிணமர்தலாப: |
புதே குரௌ பச்சிமகார்யசித்தி
ரவி பூகோ சோத்தரமர்தலாப: ||
கிழக்கு திசையில் ஒருவன் செவ்வாய்கிழமைகளில் பயணம் மேற்கொண்டால் அது லாபத்தைத் தரும்.
தெற்கு திசையில் திங்கட்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் பயணம் மேற்கொண்டால் அது லாபத்தைத் தரும்.
மேற்கு திசையில் புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் ஒருவர் சென்றால் அது அவர் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும்.
வடக்கு திசையில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் சென்றால் அவர் செல்வத்தைப் பெறுவார்.
சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.
நீரை உணவின் போது எப்போது அருந்த வேண்டும்?
அஜீர்ணே பேஷஜம் வாரி ஜீர்ணே வாரி பலப்ரதம் |
போஜனே சாம்ருதம் வாரி போஜதாந்தே விஷாபஹம் ||
தண்ணீர் என்பது அஜீர்ணத்திற்கு ஒரு நல்ல மருந்தாகும். சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாக அது ஊக்கமளிக்கும். சாப்பாட்டின் நடுவே நீரை அருந்தினால் அது அமிர்தத்திற்குச் சமமாகும். சாப்பாட்டிற்குப் பின்னர் அதை அருந்தினால் அது விஷத்திற்கு ஒப்பாகும்.
சாணக்கிய நீதியில் சாணக்கியர் கூறும் அறிவுரை இது.
எண்களின் வக்கிரம்!
அங்கேஷு சூன்யவின்யாசாத் வ்ருத்தி: ஸ்யாத் தஷாமிகா |
தஸ்மாஞ்ஞேயா விசேஷேண அங்கூனாம் வாமதோ கதி: ||
பூஜ்யத்தை ஒரு எண்ணுக்குப் பக்கத்தில் போட்டால் அதன் மதிப்பு பத்து மடங்காகிறது. இதிலிருந்து ஒருவர் எண்கள் எவ்வளவு வக்கிரமானவை என்பதை விசேஷமாகத் தெரிந்து கொள்ளலாம்!
சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.
வியாதி போக்கும் நாமங்கள்!
அச்யுதானந்தகோவிந்த நாமோச்சாரணமேஷஜாத் |
நஷ்யந்தி சகலா ரோகா: சத்யம் சத்யம் வதாம்யஹம் ||
அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற விஷ்ணுவின் நாமங்களை மருந்தாக உச்சரித்தால் கலியுகத்தின் எல்லா வியாதிகளும் குணமாகிவிடும். இது சத்தியம், சத்தியம் என்று நான் சொல்கிறேன்.
சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.
**