Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,881)

Written by London Swaminathan

Post No. 15,881

Date uploaded in London –17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 57

மூன்று திவ்விய க்ஷேத்திரங்களை சுருக்கமாகக் காண்போம் கோவிலடி ,திருக்கரம்பனூர் (உத்தமர்கோயில்),நாதன் கோயில் (நந்திபுர விண்ணகர்). மூன்றும் சோழநாட்டுத் தலங்கள்.

1

கோவிலடி அப்பக்குடத்தான் கோயில்

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 6-வது திருத்தலமாகும்.

மூலவர்: பெருமாள் ‘அப்பால ரெங்கநாதர்’, ‘அப்பக்குடத்தான்’

இவர் சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

புராணக் கதை: உபமன்யு முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க பெருமாள் ஒரு குடத்தில் அப்பத்தை ஏந்தி வந்து அருளிய தலம் என்பதால் இப்பெயர் பெற்றது.சிறப்பு: இத்தலத்து பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகாவில், கொள்ளிடம் மற்றும் காவிரி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், கல்லணையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது., அன்பில் திவ்ய தேசத்தில் இருந்து கொள்ளிடம் நதியின் மறுகரையை அடைந்தும் இத்தலத்தை அடையலாம்.

***

கோவிலடி என்னும் திருப்பேர் நகர்

     பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து

          பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்

     காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்

          ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)

                               திருவாய்மொழி 10-8-2

     திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது.

     இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில்

புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர். இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.

     உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால்

தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட இப்பலசவனம்

ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்) சாபந்தீரும் என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.

****

2

திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்தக்ஷண ஜகந்நாதம்)

மூலவர் – ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் – செண்பகவல்லித் தாயார்.

தீர்த்தம் – நந்திதீர்த்த புஷ்கரிணி.

விமானம் – மந்தார விமானம்.

ப்ரத்யக்ஷம் — நந்தி,

விசேஷம் – ஸந்நிதியின் இடது பக்கச்சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் ‘நந்திபுரம்’ என்றும் பகவானுக்கு ‘நந்திநாதன்’ என்றும் பெயர் உண்டாயிற்று. நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோவில் என்றும் இதனைக் கூறுவர். ‘நந்தி பணி செய்த நகர்’ என்றார் திருமங்கையாழ்வார். CH சக்கரவர்த்தி தன் உயிரைத்துறந்து புறாவின் உயிரை காப்பாற்ற தராசு தட்டில் தன் மாமிசத்தை வைத்து சமமாகாமல் இருக்க, தானே, புறாவின் எடைக்கு சமமாக எதிர்த்தட்டில் உட்கார்ந்த அதிசயத்தைக் காண, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கு முகமாக ஆனார்.

இந்த ஸந்நிதி வானமாமலை மடத்து ஆதினத்தில் உள்ளது.

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1438 – 47 – 10 பாசுரங்கள்.

கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து அங்கிருந்து 1 1/2 மைல் தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலைக் கடக்க வேண்டும். டவுன் பஸ்ஸில் கும்பகோணத்திலிருந்து வரலாம்.

நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்

     தம்பியொடு தாமொருவர் தந்துணைவி

          காதல் துணை யாக முனநாள்

     வெம்பியெரி கானகமு லாவுமவர்

          தாமினிது மேவு நகர்தான்

     கொம்புகுதி கொண்டு குயில் கூவ

          மயிலாலு மெழிலார் புறவு சேர்

     நம்பியுறை கின்ற நகர் நந்தி புர

          விண்ணகரம் நன்னு மனமே

                  (1443) பெரிய திருமொழி 5-10-6

     மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள் கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன் மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த ராமபிரான் உறைகிறான் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது.  நாதன் கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம்.     வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.

***

3

திருக்கரம்பனூர் /உத்தமர் கோயில்

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி / தரிசனம் தருகின்றனர் .

மூலவர்: புருஷோத்தம பெருமாள் (ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம்).

தாயார்: பூரணவல்லி.

தீர்த்தம்: கடம்ப தீர்த்தம், திருமஞ்சன தீர்த்தம்.

மூலவர் —    புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்  —   பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.

தீர்த்தம் —    கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.

விமானம் —    உத்யோக விமானம்

காட்சி கண்டவர்கள்  —   பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள், திருமங்கையாழ்வார்.

விசேஷங்கள்: இத்தலம் சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன், விஷ்ணு, சிவன், சக்தி, சுப்பிரமணியர், தேவகுரு, அசுரகுரு ஆகிய ஏழு குருக்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

வரலாறு: பிரம்மனின் கர்வத்தைப் போக்க சிவபெருமான் பிச்சாண்டவராக வந்து இத்தலத்தில் பிச்சை ஏற்றார், இதனால் இதற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் உண்டு.

****

     பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா

          லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு

     காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்

          ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே.

                           (1399) பெரிய திருமொழி 5-6-2

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம். திருச்சியிலிருந்து துறையூர்மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகள் இக்கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

     பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது. பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் த்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே

வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.

     பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த

யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.

     தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

     திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.

இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.

பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாடன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது.

—subham—

Tags- கோவிலடி, திருக்கரம்பனூர் ,உத்தமர்கோயில், நாதன் கோயில், நந்திபுர விண்ணகர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment