Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-59; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,888)

Written by London Swaminathan

Post No. 15,888

Date uploaded in London –19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வடநாட்டுத்திருப்பதி

Part 59

நைமிசாரண்யம்

தாயார் : ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி

மூலவர் : ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)

இடம் : உத்தரப் பிரதேசம்

கடவுளர்கள்: தேவ ராஜா ,புண்டரீகவல்லி தாயார்

“குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…” என்று சொன்னவர் காஞ்சி மஹாபெரியவர்.

இந்த திருத்தலம் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.

நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

இந்தக்காட்டில் சூதர்என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதியபதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.

தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை. ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். கோமதி நதிக்கு ஆதிகங்கை என்று மற்றொரு பெயர் உண்டு. இந்த கோமதி தான் முதலில் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்ட நதி என்று சொல்வார்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்ரதீர்த்ததில் நீராடுவது விசேஷம்.

இங்குள்ள சக்ர தீர்த்தம் 14 லோகங்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படுவதால், சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ரதீர்த்த கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு.

இங்கிருந்து கோமதி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி (வ்யாஸகத்தி) என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்ற புராணங்களை உருவாக்கினார்கள். வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்த பெருமை இத்தலத்திற்கு உண்டாகிறது. இந்த கோவிலில் ஓலை வடிவில் இந்த புராணங்கள் இன்றும் பாதுகாக்கப் படுகின்றன. இங்கேயுள்ள ஆலமரத்தடியில் பல மஹரிஷிகள் இருந்து உபதேசம் செய்ததால், அதனை சுற்றி வருபவர்களுக்கு, இன்றும் இந்த ஆலமரமே, அதில் இருந்து வீசும் புண்ணிய கிரணங்கள் மூலம், அந்த ரிஷிகளின் அருளை அள்ளி வழங்குவதாக நம்பிக்கை.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான்கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

ஹநுமான்கட்டி செல்வதற்கு சற்று முன்னால், புராண மந்திர் என்று சுகப்பிரம்ம ரிஷிக்கு ஒரு கோவில் உள்ளது, கிளி மூக்குடன் பெரிய வெண்கல சிலை உள்ள கோவில் ஆகும்.

இங்கு ராமானுஜ கூடமும், அஹோபில மடமும் தங்குவதற்கும் தென்னிந்திய உணவுக்கும் உள்ளன. அஹோபில மடத்தில், தேவனார் விளாக அழகியசிங்கர் என்ற ஆச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது.

*****

Picture used from a website;thanks.

நைமிசாரண்யம்    பாசுரங்கள் 

998.  

வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*

அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*

ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*

வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

999.  

சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து*

புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா*

அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!* 

வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    

1000.  

சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்*

காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*

வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*

வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!  

1001.  

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*

நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து*

எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*

நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   

1002.  

இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று*

நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*

கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*

நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

1004.  

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்*

துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*

வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!           

1007.  

ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*

இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்*

ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)     

–subham—

Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-59; திவ்யதேசம்- நைமிசாரண்யம் , லண்டன் சுவாமிநாதன் படங்கள், வடநாட்டுத்திருப்பதி, Part 59.

Leave a comment

Leave a comment