WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,901
Date uploaded in London – 22 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
என் புருஷன் தான் ஒசத்தி!
ச. நாகராஜன்
என் புருஷன் தான் ஒசத்தி!
சதுர் சகி மே பர்த்தா யத் லிகதி தத் பரோ ந வாசயதி |
தஸ்மாத் அபி அதிக: மே ஸ்வயம் அபி லிகிதம் ஸ்வயம் ந வாசயதி ||
இரண்டு பெண்மணிகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முதலாமவள் சொன்னாள்: என் புத்திசாலி புருஷன் எழுதுவதை அவரைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக அடுத்தவள் சொன்னாள்: என் புருஷன் தான் இதுல ஒசத்தி. அவர் எழுதுவரை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது.
இது எப்படி இருக்கு!
இந்த சுபாஷிதத்தின் பொருள்: ஒரு பெண்மணி அடுத்தவளிடம் சொன்னாள்: “என் பிரியமான தோழியே! என் கணவரானவர், அவர் எழுதுவதை அடுத்தவர் யாரும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதும் திறமைசாலி!” இதற்கு அடுத்த பெண்மணி கர்வத்துடன் பதில் கூறினாள்: “எனது புருஷன் இன்னும் அதிக திறமைசாலி. ஏனெனில் அவர் எழுதுவதை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது!”
இலக்கியம், இசை ஆர்வம் இல்லாதவன் மிருகம் தான்!
சாஹித்யசங்கீதகலாவிஹீன: சாக்ஷாத் பசு: புச்சவிஷானஹீன: |
த்ருணம் ந காதன் அபி ஜீவமான: தத் பாகதேயம் பரமம் பசூணாம் ||
எந்த ஒரு மனிதனுக்கு இலக்கியம், சங்கீதம் மற்றும் இதர கலைகளில் ஆர்வம் இல்லையோ அவன் கொம்புகளும் வாலும் இல்லாத மிருகத்திற்குச் சமானம். அந்த மனிதன் புல்லைத் தின்னாமல் இருப்பது மிருக உலகத்தின் அதிர்ஷ்டம் தான்!
பதினாறு வயது மகனை நண்பனாக பாவித்து நடத்து!
லாலயேத் பஞ்சவர்ஷாணி தச வர்ஷாணி தாடயேத் |
ப்ராப்தே து ஷோடஷே வர்ஷே புத்ரம் மித்ரமிவாசரேத் ||
ஐந்து வருடங்கள் வரை குழந்தையை அன்புடன் வளர்க்க வேண்டும். அடுத்த பத்து வருடங்கள் தேவையென்றால் கண்டித்து தண்டனை கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் எப்போது அவன் பதினாறு வயதை அடைகிறானோ அப்போது மகனை நண்பனாக மதித்து நடத்த வேண்டும்.
குழந்தையைப் படிக்க வைக்காத தாயும் தந்தையும் எதிரிகளே!
மாதா சத்ரு: பிதா வைரீ யேன பாலோ ந பாடித: |
ந ஷோபதே சபாமத்யே ஹம்ஸமத்யே பகோ யதா ||
தங்கள் குழந்தைகளை சரியாகப் படிக்க வைக்காத தாய் குழந்தைக்கு எதிரி; தந்தை ஒரு பகைவன். அப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்த நிலையில் நல்ல அன்னங்களுக்கு இடையே அவலட்சமாண குஞ்சுகளாகக் காட்சியளிப்பது போல (சமுதாயத்தில்) இருக்கும்.
தர்ம வழியில் நின்று பொருள் சம்பாதிக்கும் ஒரு புத்திரனே உத்தமம்!
பஹுபிர்பத கிம் ஜாதை: புத்ரைதர்மார்தவர்ஜித: |
வரமேகம் பதி தரு: யத்ர விஸ்ரமதே ஜன: ||
தர்மத்தைக் கடைப்பிடிக்காமலும், பொருளைச் சம்பாதிக்காமலும் பல புத்திரர்கள் இருந்து என்ன பிரயோஜனம்? அதற்கு பதிலாக ஒரே மரமாகத் தனித்து சாலையோரத்தில் இருந்து வழிப்போக்கர்களுக்கு நிழலுடன் தங்குமிடம் அளிக்கும் மரமாக (தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பொருளைச் சம்பாதிக்கும்) ஒரே புத்திரன் இருப்பது சாலச் சிறந்தது.
**