Written by London Swaminathan
Post No. 15,905
Date uploaded in London –22 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திரு வட மதுரை (மதுரா)
தாயார் : ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
மூலவர் : கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
மூலவர் பாலகிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தீர்த்தத்தின் பெயர் கோவர்த்தன தீர்த்தம்.
108 வைணவ திவ்ய தேசங்களில், நூறாவது திருத்தலமாக அமையும் இது, டெல்லியிலிருந்து சுமார் 161 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தருக்கிலான் ஆகி, தான் தீங்கு நினைந்த, கருத்தைப் பிழைப்பித்துக், கஞ்சன் வயிற்றில், நெருப்பென்ன நின்ற நெடுமால், கண்ணனாக அவதரித்த இந்தத் திருத்தலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது.
பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் 50 பாசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய தலம் மதுரா.
மதுரா நகரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் இலவணாசுரன் என்னும் அரக்கன் கொடுமைகள் பல செய்து வரவே முனிவர்கள் இராமபிரானை அணுகினர். இராமர் தனது இளவலான சத்ருக்னரை அனுப்பி மது என்னும் நகரத்தின் அரசனாக இருந்த இலவணாசுரனை அழிக்கச் செய்தார். அசுரனை வதம் செய்த சத்ருக்னர் அங்கு யமுனா நதி தீரத்தில் அர்த்த சந்திர வடிவத்தில் மதுரா நகரை உருவாக்கினார். இந்த நகரத்தை சத்ருக்னரின் வமிசாவளியினர் ஆண்டு வந்தனர். பின்னர் யது வம்சத்தினர் இதை ஆளத் தொடங்கினர்.
***
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:
என்று குறிப்பிடப்படும் ஏழு மோக்ஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று.
இங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிருந்தாவனில் தான் கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்தது. 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இன்னொரு புனித யாத்திரை தலம் கோவர்தன் ஆகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
ரிக் வேதம் குறிப்பிடும் ஐந்து வமிசங்களில் யது வம்சமும் ஒன்று. அதில் அவதரித்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம், கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆல்யங்கள் உள்ளன.
உலகில் உள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள கர்பக்ருஹத்தில் தான் சிறையில் கிருஷ்ணர் அவதரித்தார். காலப் போக்கில் இந்த ஜென்மஸ்தானம் ஒரு அழகிய ஆலயமாக உருவாகி விட்டது.
கம்ஸனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த இறுதிப் போர் நடந்த இடமும் இங்கு தான் உள்ளது.
யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள விஷ்ராம் கட்டில் (Vishram Ghat) தான் கம்சனை வதம் செய்த பின்னர் கிருஷ்ணர் வந்து ஓய்வு எடுத்தார்.
ஆண்டு தோறும், ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ணரின் அவதாரத் திருநாள், இங்கு வெகு விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.
முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது .
******
திவ்யதேச பாசுரங்கள்
264.
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்* தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-
பொட்டத் துற்றி* மாரிப் பகை புணர்த்த* பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை*
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை* வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குறமகளிர்-
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)
265.
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்* வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப* மதுசூதன் எடுத்து மறித்த மலை*
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி* இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
274.
அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு* அரவப்-பகை ஊர்தி அவனுடைய*
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்* பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்*
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
478.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.
538.
மாட மாளிகை சூழ்* மதுரைப் பதி*
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு*
ஓடை மா* மத யானை உதைத்தவன்*
கூடுமாகில்* நீ கூடிடு கூடலே!*
539.
அற்றவன்* மருதம் முறிய நடை-
கற்றவன்* கஞ்சனை வஞ்சனையிற்*
செற்றவன் திகழும்* மதுரைப் பதிக்*
கொற்றவன் வரில்* கூடிடு கூடலே!*
560.
கதிர் ஒளித் தீபம்* கலசம் உடன் ஏந்திச்*
சதிர் இள மங்கையர்* தாம் வந்து எதிர்கொள்ள*
மதுரையார் மன்னன்* அடிநிலை தொட்டு*
எங்கும் அதிரப் புகுதக்* கனாக் கண்டேன் தோழீ! நான்*
617.
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா* மாதவன் என்பது ஓர் அன்புதன்னை*
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்* ஊமையரோடு செவிடர் வார்த்தை*
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்* பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி*
மற் பொருந்தாமற் களம் அடைந்த* மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்*. (2)
646.
பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த* பரமன்தன்னைப்*
பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை* விட்டுசித்தன் கோதை சொல்*
மருந்தாம் என்று தம் மனத்தே* வைத்துக் கொண்டு வாழ்வார்கள்*
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்* பிரியாது என்றும் இருப்பாரே* (2)
1512.
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே.
1527.
மன்னும் மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன்உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே. (2)
3675.
பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்* போற்றிஎன்றுஏற்றுஎழுவர்*
இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்* என்னே என்பாரும்இல்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர்அரணே.
3676.
அரணம்ஆவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பர்ஆவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்துஎன்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர் சதிரே.
Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-62; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்,திரு வட மதுரை ,மதுரா.
–subham–