WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,906
Date uploaded in London – 23 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி!
ச. நாகராஜன்
எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை சுபாஷிதங்கள். தனது அரசியல் ஆதாயத்திற்காக எதிரி முகாமிற்குச் செல்பவர்களின் கதியை நாம் இன்று அப்பட்டமாகக் காண்கிறோம், இல்லையா!
இதோ சில சுபாஷிதங்கள்
பிடிக்காத உண்மைகளைக் கேட்பவர் அரிது!
சுலபா: புருஷா ராஜன், சததம் ப்ரியவாதின: |
அப்ரியஸ்யாபி பதயஸ்ய, வக்தா ஸ்ரோதா ச துர்லப: ||
ஓ, ராஜனே! எப்போதும் இனிமையாகப் பேசுபவர்களை (மந்திரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள்)க் காண்பது மிகவும் சுலபம். ஆனால் மனதுக்குப் பிடிக்காத சத்யத்தைப் பேசுகின்றவர்களைக் காண்பது கஷ்டம். அது போலவே அவற்றை காது கொடுத்துக் கேட்பவர்களையும் காண்பது கஷ்டமே!
ஆத்மாவிற்காக தேசத்தையே தியாகம் செய்யலாம்!
த்யஜேதேகம் குலஸ்யார்தே, க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
க்ராமம் ஜனபதஸ்யார்தே, ஆத்மார்தே ப்ருதிவீம் த்யஜேத் ||
ஒருவன் தனது குடுபத்திற்காக ஒருவரைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம். ஆத்மாவிற்காக ஒரு தேசத்தையே தியாகம் செய்யலாம்.
புத்திசாலி ஒரு தேசத்தையே அழிக்கும் வல்லமை படைத்தவன்!
ஏகம் ஹன்யான்ன ஹன்யாத் வா இஷுர்முக்தோ தனுஷ்மதா |
புத்திர்புத்திமதா யுக்தா ஹந்தி ராஷ்ட்ரம் சனாயகம் ||
ஒரு வில்லாளியின் அம்பானது வில்லிலிருந்து விடுபட்டவுடன் ஒருவரைக் கொல்லலாம் அல்லது கொல்லாமல் போகலாம். மாறாக, ஒரு நல்ல புத்திசாலியின் (ராஜதந்திரியின்) புத்தி, ஒரு பெரும் ராஷ்ட்ரத்தை அதன் தலைவர்களுடன் அழிக்க முடியும்.
சொந்தக் குழுவை விட்டு எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி!
ய: ஸ்வபக்ஷம் பரித்யஜ்ய, பரபக்ஷம் நிஷேவதே |
ஸ: ஸ்வபக்ஷே க்ஷயம் யாதே, பஸ்சாத் தைரேவ ஹன்யதே ||
தனது சொந்த குழுவை விட்டு விட்டு எதிரியின் குழுவிற்குச் செல்லும் ஒருவனது விதி இரண்டு மடங்கு அழிவைத் தரும். முதலில் அவனது குழுவானது வலுவிழந்து தோல்வியை அடையும். பிறகு எதிரிகளால் அவனும் அழிக்கப்படுவான்.
செல்வந்தனும் தொழிலாளியும்!
ஶ்ரீமந்த: ஸ்ரமவந்த: ச நைவ துல்யா: கதாசன |
பாந்தி ரத்னோபலை: ஏகே ஸ்ரமவாரிகணை: பரே ||
ஒரு செல்வந்தனுடன் ஒரு தொழிலாளியை எப்போதுமே ஒப்பிட முடியாது. செல்வந்தனானவன் ரத்னங்களால் ஜொலிக்கப்படுவான். தொழிலாளியோ வேர்வைத் துளிகளால் ஜொலிக்கப் படுவான்.
**