Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-63; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,907)

Written by London Swaminathan

Post No. 15,907

Date uploaded in London –23 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 63

கோகுலம் திருவாய்ப்பாடி

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம்  ;இங்குதான்   கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது  விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.

மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.

தீர்த்தம் – யமுனா நதி.

விமானம் – ஹேமகூட விமானம்.

ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.

ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.

மங்களா சாஸனம் –

பெரியாழ்வார் – 14, 16, 132, 145, 231, 235, 237, 239, 263, 281

ஆண்டாள் – 474, 618, 630, 636, 638.

திருமங்கையாழ்வார் – 1021, 1392, 1435, 1993, 1994, 1995, 2673 (28)

மொத்தம் 22 பாசுரங்கள்.

கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் , நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன.

திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.

பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன.திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை நம்மாழ்வார் அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.

திவ்யதேச பாசுரங்கள்

துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.

132.  

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 

மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*

ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே

145.  

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*

மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!*

தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?

231.  

தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்*

நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்*

ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

235.  

பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்*

சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்*

எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*

237.  

வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்*

பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்*

எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

239.  

மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்*

படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்*

இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

263.  

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே*

கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற-

வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*

பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2) 

281.  

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*

அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப*

அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்*

செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.* 

474.  

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*

நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2)

618.  

நாணி இனி ஓர் கருமம் இல்லை*  நால்அயலாரும் அறிந்தொழிந்தார்*

பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்*

மாணி உருவாய் உலகு அளந்த*  மாயனைக் காணிற் தலைமறியும்*

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்*.  

630.  

ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்*

காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை*

ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய*

நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே*

636.  

அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை*

வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை*

வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்*

சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2) 

638.  

அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்*

குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?*

கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை*

மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.         

1993.  

தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி-

நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்*

தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.

1994.  

ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்-

தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்-

ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.

1995.  

அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி-

உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*

எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே

2685.  

ஆரால் கடைந்திடப் பட்டது*–அவன் காண்மின்*

ஊரா நிரை மேய்த்து உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தும்*

ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*

சீரார் கலைஅல்குல் சீரடிச் செந்துவர்வாய்*

வாரார் வனமுலையாள் மத்துஆரப் பற்றிக்கொண்டு*

ஏரார் இடைநோவ எத்தனையோர் போதும்ஆய்*

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை*

வேரார் நுதல் மடவாள் வேறுஓர் கலத்துஇட்டு*

நாரார் உறிஏற்றி நன்குஅமைய வைத்ததனைப்*

போரார் வேல்கண்மடவாள் போந்தனையும் பொய்உறக்கம்*

ஓராதவன்போல் உறங்கி அறிவுஉற்று*

தாரார் தடம்தோள்கள் உள்அளவும் கைந்நீட்டி*

ஆராத வெண்ணெய் விழுங்கி* — அருகுஇருந்த

கொண்டல் வண்ணனைக் * கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை, *

அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்

கண்ட கண்கள் *, மற்றொன்றினைக் * காணாவே. *

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-63; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் , கோகுலம் , திருவாய்ப்பாடி

—subham—

Leave a comment

Leave a comment