Written by London Swaminathan
Post No. 15,910
Date uploaded in London –24 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துவாரகா
தாயார் : ஸ்ரீ கல்யாண நாச்சியார்
மூலவர் : கல்யாண நாராயணன்
திருத் துவாரகை, மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில் 73-வது திவ்ய தேசமாகும். குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் தலம், ‘ஜகத் மந்திர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது முக்தி தரும் ஏழு மோட்ச நகரங்களில் ஒன்றாகும்.
மூலவர் கல்யாண நாராயணர் (துவாரகாதீசன்) கருப்பு நிறத்தில், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
தாயார்: கல்யாண நாச்சியார் (ருக்மணி தேவி).
தீர்த்தம்: கோமதி நதி மற்றும் சமுத்ர சங்கமம்.
விமானம்: ஹேமகூட விமானம்.
பாசுரங்கள்: பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
துவாரகாதீசர் கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது மற்றும் நான்கு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆலயம் 16-ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது.இங்குள்ள 56 படிகளைக் கடந்து ‘சொர்க்க துவார’ (Swarga Dwar) வழியாக கோயிலுக்குள் செல்ல வேண்டும்.மூலவருடன் பலராமர், பிரத்யும்னன், அநிருத்தன் மற்றும் பல தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் ஒன்றான ‘துவாரகா பீடம்’ இங்கே அமைந்துள்ளது.
துவாரகா ரயில் நிலையம் அருகில் உள்ளது. அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.விமான நிலையம்: ஜாம்நகர் விமான நிலையம் (சுமார் 137 கி.மீ) மற்றும் போர்பந்தர் விமான நிலையம் அருகிலுள்ளது.
உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர், துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியது.துவாரகா கோவிலுக்கு இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. இதன் வட வாசலை மோட்ச வாசல் என்று அழைக்கின்றனர். இந்த வாசல் வழியாக சென்றால் மூலஸ்தானத்தை அடையலாம். மற்றொரு வாசலான தெற்கு நுழைவு வாசலுக்கு சொர்க்க வாசல் என்று பெயர். இதன் வழியாக சென்றால் கோமதி நதியை அடையலாம். செளலக்கிய முறையிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இது சுண்ணாம்புக்கல் மற்றும் மணல்கற்களால் கட்டுப்பட்டுள்ளதாகும். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இக்கோவில் 78.3 மீட்டர் உயரம் கொண்டதாகும்.துவாரகா கோவிலின் கருவறையில் அமைந்துள்ள மூலவர் விக்ரஹம் சாளகிராமத்தால் ஆனது. பார்ப்பதற்கு இது கருங்கல்லால் ஆன விக்ரஹம் என்றே காட்சி தோன்றும். துவாரகா கோவிலின் உச்சியில் ஆரஞ்சு, மஞ்சள், நீலம் என பல வண்ணங்கள் கலந்த கொடி ஒன்று எப்போதும் பறந்து கொண்டே இருக்கும். இது சூரியன், சந்திரன் இங்கு வசிப்பதன் அடையாளமாக உள்ளது. இந்த கொடியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது.
கிருஷ்ணனின் கையில் எப்போதும் ஓயாது சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது பல அசுரர்களை போரில் வென்று, வதம் செய்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இந்த சுதர்சன சக்கரம் பல நூற்றாண்டுகளாக துவாரகா கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து புராணங்களின் படி, கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்கும் மேல் கிருஷ்ணன் துவாரகையை ஆட்சி செய்துள்ளார். துவாரகையில் கிருஷ்ணன், ருக்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ருக்மணி, கிருஷ்ணன் எட்டு மனைவிகளில் ஒருவர்.பஞ்ச துவாரகா என்று, ஐந்து கிருஷ்ணர் கோவில்களை உள்ளடக்கிய பயணம் ஒன்று சொல்வதுண்டு, அவற்றில், இந்த கோமதி துவாரகா என்னும் துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில் ஆகியவை உள்ளன. இவற்றில் நாத் துவாரகா (ஸ்ரீநாத் ஜீ), காங்கோர்லி (துவாரகீஷ்) என்ற இரண்டும் ராஜஸ்தானில் உள்ளன. மற்றவை குஜராத்தின் மற்ற பகுதிகளில் உள்ளன.இதனை தவிர, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா என்ற நான்கினை சேர்த்து நவ துவாரக என்றும் கூறப்படுகிறது.
துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் மட்டுமே குறிக்கும். இங்கு அவனது அஷ்ட மகிஷிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணன் சன்னதிக்கு எதிரே அவன் தாயார் தேவகிக்கு ஒரு சன்னதி உண்டு. அதிகாலையில் எம்பெருமான் கண் விழிப்பது தாயின் திருமுகத்தில் தான்.
.க்ருஷ்ணனுக்குச் செய்யும் உணவும் அலங்காரமும் விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரண்மனையில் கொடுப்பது போல், 56 வகை உணவுகள் கொடுத்து ஒவ்வொரு மணியும் உடை மாற்றுகிறார்கள்.
காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். காலை 7.30 க்குள் தீர்த்தமும் பிரசாதமும் அமுது செய்த படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சர்க்கரை பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு பலவகை பழங்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு செய்யப்படும் திருவாராதனத்திற்கு போக் என்று பெயர், ஒரு நாளைக்கு பண்டா போக், ஸ்நான் போக், ஷ்ருங்கார் போக், ராஜ் போக், உத்தப்பன் போக், சயன் போக் என்று ஆறு காலங்கள். மதியம் உணவிற்கு பிறகு சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர்.
இங்கே, யாத்ரீகர்கள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக வருவதால் எந்நேரமும் இந்த திருக்கோவில் கலகலப்புடன் இருக்கிறது. இங்கு பெண்கள் ஆயர்ப்பாடி கோபிகைகள் போல் ஆடை அணிந்து வருவது ஒரு சிறப்பு,
இந்த கோவில் ஐந்து நிலைகளைக் கொண்டது, மற்றும் 72 சுண்ணாம்பு தூண்களில் உள்ளன. மேலும், இங்கு கோபுரத்தின் மொத்த உயரம் 157 அடி.
கோகுலாஷ்டமி அன்று ஆண்களும் பெண்களுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பானைகளை சுமந்து பாவன் பேடா என்ற நடனம் ஆடுவார்கள்.
காலையில் பால கிருஷ்ணனாகவும், மதியம் மஹாராஜாவாகவும் இரவில் எல்லோரும் வணங்கும் பூஜிக்கும் தெய்வமாகவும் அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு முறை ஆர்த்தி நடக்கும் போது அங்குள்ள பக்தர்கள் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது கண் கொள்ள காட்சியாக உள்ளது.
இங்கு கோமதி நதி கடலில் கலக்கும் இடத்தில துவாரகசிலா எனப்படும் தெய்வீக கற்கள் கிடைக்கின்றன. இது சாளக்ராமம் போல் வைத்து வீட்டில் பூஜை செய்கிறார்கள்.. இவற்றை தாயார் வடிவம் என்றும் போற்றுகிறார்கள். துவாரகசிலா மகாலட்சுமியின் அம்சம்.
பம்பாய், ஆமதாபாத், வீராம்காம், ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஓகா துறைமுகம் செல்லும் ரயில்பாதையில் துறைமுகத்துக்கு சுமார் 20 மைலில் துவாரகா ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்து 1 1/2 மைல் வண்டியில் போய், கோவிலை அடையலாம்.
ஜராஸந்தன், ஜனங்களுக்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்க, ஸ்ரீ க்ருஷ்ணன் சமுத்திர ராஜனிடம் இடம் கேட்டு, வாங்கி, விச்வகர்மாவைக் கொண்டு துவாரகையை ச்ருஷ்டித்ததாக ஐதீஹம். மோக்ஷத்துக்கு த்வாரமாக இருப்பதால் த்வாரகை என்ற பெயர் உண்டாயிற்று. கோவிலிலிருந்து பலபடிகள் இறங்கிச் சென்றால் எதிரே கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்திலிருந்து பஸ்ஸில் ஓகா துறைமுகம் சென்று, அங்கிருந்து விசைப்படகில் பேட் த்வாரகா (தீவு துவாரகை) என்ற தீவுக்குப் போகலாம். இதுதான் க்ருஷ்ணன் திருமாளிகை. சுமார் 1.500 க்ருஹங்கள் இங்கே இருக்கின்றன. காலை 5 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸேவையாகும். இங்குள்ள மூலவர் (த்வாரக் நாத்ஜீ) சங்குசக்ர கதாதாரியாக ஸேவை ஸாதிக்கிறார். மூன்று மைல் தூரத்தில் சங்க தீர்த்தம் அற்புதமாயிருக்கிறது. அலங்காரம் நம் எதிரிலேயே நடக்கிறது
****
பாசுரங்கள்
333.
பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்* புணர்முலைவாய்மடுக்க-
வல்லானை* மாமணிவண்ணனை* மருவும்இடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு* பௌவம்எறிதுவரை*
எல்லாரும் சூழச்சிங்காசனத்தே* இருந்தானைக்கண்டாருளர்.
398.
திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து* தன்மைத்துனன் மார்க்காய்*
அரசினையவிய அரசினையருளும்* அரிபுருடோத்தமன் அமர்வு*
நிரைநிரையாக நெடியனயூபம்* நிரந்தரம் ஒழுக்குவிட்டு* இரண்டு-
கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை* கண்டமென்னும் கடிநகரே.
507.
சுவரில் புராண! நின் பேர் எழுதிச்* சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்*
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்* காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா*
அவரைப் பிராயம் தொடங்கி* என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்*
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்* தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.
541.
ஆவல் அன்பு உடையார்* தம் மனத்து அன்றி-
மேவலன் விரை சூழ்* துவராபதிக்-
காவலன்,கன்று மேய்த்து விளையாடும்*
கோவலன்வரில்* கூடிடு கூடலே!*
625.
கூட்டில் இருந்து கிளி எப்போதும்* கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்*
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்* உலகுஅளந்தான்! என்று உயரக் கூவும்*
நாட்டில் தலைப்பழி எய்தி* உங்கள் நன்மை இழந்து தலையிடாதே*
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்* துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்*.
1504.
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி* முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்* இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய* வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
1521.
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே.
2452.
சேயன் அணியன்* சிறியன் மிகப்பெரியன்*
ஆயன் துவரைக்கோனாய்* நின்ற மாயன்* அன்று
ஓதிய* வாக்குஅதனைக் கல்லார்* உலகத்தில்
ஏதிலர்ஆம்* மெய்ஞ்ஞானம் இல்.
3260.
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்கு ஆசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.
Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-64; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் , துவாரகா, துவாரகை, துவரை
To be continued………………………