
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,932
Date uploaded in London – 1 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 2
ச. நாகராஜன்
அங்கே ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்று எம்ஜியாரின் மனைவி ஜானகியைச் சந்தித்தார். அப்போது அவரைப் பார்த்தவுடனேயே, “எங்கே, இங்கே? அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வந்தீர்களா” என்று ஜானகி அம்மா கேட்டதும் பாக்யராஜ் அவர்களுக்கு மனது ரொம்பவும் வலித்தது. காரணம் சென்னையிலிருந்து திருச்சியோ, கோவையோ வந்தது போல ஜானகி அம்மாள் கேட்டது தான். மேலும் அவர், “இங்கே விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய விசிட்டிங் பாஸ் இல்லாமல் தலைவரைப் பார்க்க இயலாது” என்ற போது ஏதோ அரசியல் நடக்கிறது என்பதை உணர்ந்து பத்தாயிரம் கி.மீ.க்கும் மேல் கடந்து வந்தும் தலைவரைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ! என்று எண்ணியபோது சோகம் பாக்யராஜ் அவர்களை அப்ப, அவரது கண்கள் கலங்கியது.
“தலைவரைப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள். நேரில் ஒருமுறை பார்த்து விட்டால் அந்த திருப்தியோடு சென்னை சென்று தலைவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தி தேவைப்பட்டால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன்” என்று எவ்வளவோ சொல்லியும் ஜானகி அம்மாள் யோசிப்பதாக கூறிவிட்டார். தலைவரை நாம் பார்க்காமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஜானகி அம்மாவுக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட பாக்யராஜ் மருத்துவமனையை விட்டு புறப்பட்டார்.
அங்கிருந்து வரும் வழியில் மனது சரி இல்லாமல் அங்குள்ள நம்ம வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அங்கே எம்ஜியாரின் குடும்ப நண்பரும் அமெரிக்க குடிவாழ் இந்தியரான ஜானகி என்ற பெண்மணி, பாக்யராஜ் அவர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு “தலைவரைப் பார்த்து விட்டீர்களா?” என்ற போது , “இன்னும் இல்லை. அனுமதி பாஸ் கிடைக்கவில்லை” என்று ஜானகி அம்மாள் கூறியதைச் சொன்னார்.
“பாக்யராஜ் சாருக்கு பாஸா? நீங்கள் வருவதுதான் ஜானகியம்மாளுக்கு நேத்தே தெரியுமே, எங்கிட்ட சொன்னாங்களே? ஏதோ தவறு நடக்கிறது. நான் ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிக்கிறேன்” என்றார்.
அப்போது தான் அங்கு நடைபெறும் அரசியலும், தான் புறக்கணிக்கப் படுவதும் பாக்யராஜ் அவர்களுக்குப் ஊர்ஜிதமானது.
இதற்கிடையில் மருத்துவமனையில் இருக்கும் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு உதவியாக இருந்த மாணிக்கம் மூலம் பாக்யராஜ் பார்க்க வந்ததாக தெரிந்ததும், அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். உடனே ஜானகியம்மாளிடம் பாக்யராஜ் அவர்களைப் பற்றி எம்.ஜி.ஆர். விசாரித்தார். அப்போது ஆர்வமில்லாமல் ஜானகி அம்மாள் ஏதோ கூறியதும் உடனே கோபப்பட்ட எம்.ஜி.ஆர். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் உதவியாளர் பி.ஏக்கன் அவர்களிடமும் உடனடியாக பாக்யராஜை வரவழையுங்கள் என்று உத்தரவுபோட அனைவரும் பரபரப்பாய் இயங்க ஆரம்பித்தனர். பாக்யராஜ் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அனைவரும் தொடர்பு கொண்டபோது , அவர் வெளியில் கோயிலுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். பாக்யராஜ் அவர்கள் மறுநாள் காலை அறைக்கு வந்தபோது ஒரே பரபரப்பாய் இருந்தது. ரிசப்ஷனில் ஏகப்பட்ட மெசேஜ் என்று தெரிவித்ததும், தலைவரைப் பார்க்க மருத்துவமனை நோக்கி ஓடினார் பாக்யராஜ்.
தான் நோய்வாய்பட்டு உடல்நிலை ஒத்துழைக்காமல் மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் தன்னை பல்லாயிரம் மைல் கடந்து வந்து பார்க்க வந்திருக்கும் தனது கலையுலக வாரிசு பாக்யராஜ் அவர்களைச் சந்தித்ததும் கரங்களைப் பற்றிக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்த எம்ஜியாரின் கண்களில் இருந்து தாரைதாரையாய் நீர் வடிந்தது. அதைப் பார்த்த புரட்சித்திலகம் பாக்யராஜ் அவர்களின் கண்களும் குளமாயின.
இப்போது ஜானகி அம்மாள், “தேர்தல் பிரச்சாரத்துக்கு பாக்யராஜ் செல்ல வேண்டும். ஆசி கூறுங்கள்” என்றார். எம்.ஜி.ஆர். ஆசிர்வதிக்க பாக்யராஜ் அவர்கள் சென்னை திரும்பினார்.
இங்கே…. சென்னையில் “எம்.ஜி.ஆர். இறந்து விட்டதாகவும் அவரை ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்கள், விரைவில் அவரை அமெரிக்காவிலிருந்து பிணமாக கொண்டு வருவார்கள் என்றும் அனுதாப அலை வீசவே இந்த நாடகம் என்றெல்லாம் பிரசாரத்தில் பேசப்பட்டது.
எம்ஜியாரின் உடல்நிலையைல் பற்றி தெரிந்து கொள்ள நேரில் சந்தித்துவிட்டு சென்னை வரும் பாக்யராஜ் அவர்களை எதிர்பார்த்து தமிழகமே அவரது வருகைக்காக காத்திருந்தது.
விமானநிலையத்தில் பாக்யராஜ் அவர்களை வரவேற்க கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பாக்யராஜ் ரசிக மன்றத்தினர் என எல்லோரும் சூழ்ந்து கொண்டனர். தலைவர் நலமாக இருக்கிறார் என்றும் தன்னுடன் நீண்ட நேரம் பேசினார் என்றும் கட்சியினர் மற்றும் தமிழக மக்களைப் பற்றி விசாரித்தார் என்றும் பாக்யராஜ் அவர்கள் தெரிவித்தபோது கட்சி தொண்டர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
*
பிறகு என்ன நடந்தது? கவிஞர் ரவிராஜ் அவர்கள் கூறுவதை மேலே பார்ப்போம்.
** தொடரும்