துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 23 (Post.15,989)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,989

Date uploaded in London –   17 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 23 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

சுக்ரீவ அறிமுகம் 

உடனே ஹனுமன் தான் வந்த காரியத்தை ஸ்ரீ இராமனுக்குத் தெரியப் படுத்தினார்.

नाथ सैल पर कपिपति रहई। सो सुग्रीव दास तव अहई॥1

तेहि सन नाथ मयत्री कीजे। दीन जानि तेहि अभय करीजे॥

सो सीता कर खोज कराइहि। जहँ तहँ मरकट कोटि पठाइहि॥2

“ஐயனே! இந்த மலையில் வானர அரசனான சுக்ரீவன் இருந்து வருகிறான். அவன் உங்கள அடியார்களுள் ஒருவன். அவனுடன் நட்புக் கொண்டு  அவருக்கு அபயம் அளித்து அவரது  பயத்தைப் போக்குவீராக. அவர் ஆங்காங்கே கோடிக்கணக்கான வானரங்களை அனுப்பி அன்னை சீதையைக் கண்டுபிடிக்க உதவுவார்.

இந்த உலகில் நண்பன் இல்லாதவன் ஆபத்துக்களை கடக்க முடியாது

एहिं तन राम भगति मैं पाईताते मोहि ममता अधिकाई ॥

जेहि तें कछु निज स्वारथ होईतेहि पर ममता कर सब कोई ॥

இந்த உடலில் நான் ராம பக்தியைப் பெற்றேன்.

அதனால் எனக்கு இந்த உடலின் மீது அதிகமான பாசம் ஏற்பட்டது.

யாருக்கு எதிலிருந்து சுயநலன் கிடைக்கிறதோ,

அவர்களுக்கு அதில் பாசம் ஏற்படுவது இயல்பே.”

உடலினுள் ராமன் உறைந்ததால்,

உயிரினும் மேலான பாசம் வந்தால்,

பயனளிக்கும் பொருளில் பாசம் கொள்வார்,

பக்தியால் பாசம் பிறந்ததாலே.

 ஹனுமனுக்கு மனதில் ஒரு சந்தேகம் பிறந்திருக்கும் நாம் சுக்ரீவனைப் பற்றிச் சொல்லுகிறோமே. அந்த சுக்ரீவன் வாலிக்குப் பயந்து மலையில் நாட்டை இழந்து வாழ்கிறான். இவனுடன் நட்புக் கொள்ளுங்கள் . கோடிக்கணக்கான வானர வீரர்களைக் கொண்டு சீதையைத் தேட உதவுவான்  என்று சொல்கிறோமே. சுக்ரீவன் இப்போது இருக்கும் நிலையில் எவ்வாறு உதவுவான் என்று சந்தேகம் இராமனுக்கு வந்தால் என்ன சொல்வது? என்று யோசனை செய்தவாறே கவனமாக வார்த்தைகளைக் கையாள்கிறான். துளசிதாசர் தீன் என்று வார்த்தைப் பிரயோகம் செய்கிறார். அதாவது பாதிக்கப்பட்ட என்று சொல்கிறார். அதையும் சொல்லிவிட்டு கோடிக்கணக்கான வானர வீரர்களை விட்டுச் சீதையைத் தேட  உதவுவான் என்றும் சொல்வதன் நோக்கம் சுக்ரீவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் மிக நல்லவன். அரசனாக இருந்தவன் என்று சுக்ரீவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் இராமனுக்கு வரவேண்டும் என்று பாடுபடுகிறான். 

पाट कीट तें होइ तेहि तें पाटंबर रुचिर।

कृमि पालइ सबु कोइ परम अपावन प्रान सम॥

பட்டு (பட்டாடை) ஒரு பூச்சியிலிருந்து உருவாகிறது, அந்த பூச்சியிலிருந்து வந்த பட்டு ஆடை அழகாகத் தோன்றுகிறது. அந்த பூச்சி அசுத்தமானது. ஆனாலும்  அந்த பூச்சியை எல்லோரும் வளர்க்கிறார்கள். அதுபோல சுக்ரீவன் இன்று பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் பின்னால் பயனுள்ளவனாக இருப்பான் என்று அவனது பேச்சு பொருள்படுகிறது.

அதுபோல

प्रीति बिरोध समान सनकरिय नीति असि आहि ।

जौँ मृगपत्ति बध मेडुझन्हिअल कि कहइ कोउ ताहि ॥ 

அதுபோல அன்பும் விரோதமும் தனக்குச் சமமானவர்களுடனேயே வைக்கவேண்டும் என்பதே உலக நீதி. சிங்கம் தவளையைக் கொல்வதால் சிங்கம் பலசாலி என்று யாரும் கூறமாட்டார்கள் என்ற நியதியில் தாங்கள் சுக்ரீவன் என்ற அரசனுடனேயே நட்புக் கொள்வதே உலக நியதி என்ற தொனியில் ஹனுமன் பேசுகிறான்.

 இவ்வாறு கூறிவிட்டு இராமன் இலக்ஷ்மணன் இருவரையும்  தோளில் சுமந்து சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றான். 

இங்கு சுக்ரீவனை ஹனுமன் कपिपति வானர அரசன் என்று அழைக்கிறான்/ எந்த சுக்ரீவன் என்ற கேள்வி எழாமலேயே மலைகளில் வசிக்கும் சுக்ரீவன் என்று அடையாளப்படுத்தி விட்டான். வாலிதான் வானரங்களின் அரசன். பிறகு எப்படி சுக்ரீவனை வானர அரசன் என்று அழைக்கிறான் ஹனுமன்.?  இங்கு வாலி இறந்தாதக் கருதி சுக்ரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக முடி சூட்டி மகிழ்ந்தனர் அங்குள்ள அமைச்சர்கள். வாலி சுக்ரீவனை அடித்துத் துரத்தினாலும் ஜாம்பவான், ஹனுமான் நளன் நீலன் போன்ற அமைச்சர்கள் சுக்ரீவனுக்கு ஆதரவு தெரிவித்து அவனுடன் வந்துவிட்டனர். ஆதலால் அவனை இன்னும் அரசனாகவே கருதுகின்றனர். வனத்தில் சூர்ப்பனகையிடம் இராமனைப் பற்றித் தெரிவிக்கும்போது இலக்ஷ்மணன், கைகேயி அவனை வனத்திற்கு அனுப்பிய பிறகும் “प्रभु समरथ कोसलपुर राजा। அவனை கோசல நாட்டின் அரசன் என்றே சொல்கிறான்.

 அடுத்து ஹனுமன் இராமனிடம் சுக்ரீவனிடம் நட்புக் கரம் நீட்ட வேண்டும் என்று சொல்லப் போகிறான். பொதுவாக எவருமே தனக்குச் சமமானவருடன் தான் நண்பனாக இருக்க விரும்புவார். இராமன் அயோத்தியின் அரசன். அப்படி என்றால் சுக்ரீவனையும் ஒரு நாட்டின் அரசன் என்று அறிமுகப் படுத்தினால் தான் இராமன் நட்புக்கரம் நீட்ட வ்ரும்புவான் என்று நினைத்தே ஹனுமன் அவ்வாறு சொன்னான்.

 ஹனுமன் இராமனிடம் வானரர்களின் அரசன் சுக்ரீவன் உங்கள் அடியார்களில் ஒருவன் सो सुग्रीव दास तव अहर्डड என்று சொல்கிறான். இங்கு ஒரு கேள்வி சுக்ரீவன் இன்னும் இராமனைப் பார்க்கவேயில்லை. அப்படி இருக்க ஹனுமன்  சுக்ரீவன் இராமனின் அடியார்களில் ஒருவன் என்று எப்படிக் கூறுகிறான்?

 இங்கு எல்லோரையும் பால காண்டத்திற்கு அழைத்துச் செல்கிறேன். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று இராவணனால் ஏற்பட்டுள்ள துன்பத்தை விவரித்தனர். 

निज लोकहि बिरज्चि गेदेवन्ह इहइ सिखाइ।

बानर-तनु धरि धरि महिहरि-पद सेवहु जाइ ॥१८७॥

 அப்பொழுது பிரம்மா அவர்களிடம்  மகாவிஷ்ணு பூமியில் மானிட அவதாராம் எடுக்கப் போகிறார். தாங்கள் எல்லோரும் வானர உருவரும் எடுத்து பூமிக்குச் சென்று அவருக்குச் சேவை செய்யுங்கள் என்றார்.. ஹனுமன் இராமரிடம் சுக்ரீவன் உங்கள் பக்தர். பிரம்மாவின் கட்டளையை ஏற்று हारे मारग चितवहिं मति धीरा। உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று சொல்வதாகப் பொருள். 

**

Leave a comment

Leave a comment