

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,988
Date uploaded in London – 17 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பூமியில் ஒட்டாது; விண்வெளியில் ஒட்டும்!
12-7-2026 தினமணி கதிரில் வெளியாகியுள்ள கட்டுரை!
பூமியில் ஒட்டாத தகடுகள் விண்வெளியில் ஒட்டுவதன் மர்மம்!
ச. நாகராஜன்
பூமியில் இரண்டு இரும்புத் தகடுகளை ஒன்றுடன் ஒன்று உராசினால் ஒன்றும் ஏற்படுவதில்லை.
ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் இரு தகடுகளை ஒன்றுடன் ஒன்று வைத்தால் அவை உருகி ஒரே தகடாக ஆகி விடும்.
இது என்ன விந்தை? இது உண்மை தான்.
இந்த நிகழ்வுக்குப் பெயர் கோல்ட் வெல்டிங் (Cold Welding) என்று பெயர்.
விண்வெளியில் விண்கலங்களைச் செலுத்தி வந்த பொறியியல் வல்லுநர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்தது.
இதற்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னால் விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை என்பது தான்!

தகடுகளில் அணுக்களின் அணிக்கோவையானது ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தாலும் வெளிப்புறத்தைப் பார்த்து இருக்கும் பக்கத்தில் ஒட்டி இருப்பதில்லை. ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தது என்றால் அவை இன்னொரு தகட்டின் எலக்ட்ரான்களுடன் சேரத் தயார்!
பூமியில் ஒவ்வொரு உலோகத் தகடும் ஆக்ஸிஜன் படலத்தால் பூசப்பட்டிருக்கிறது. இவை ஒரு ஆக்ஸைடு அடுக்கை உருவாக்குவதால் இன்னொரு தகடுடன் சேரும் போது இவை ஒன்றாக இணைவதில்லை.
விண்வெளியிலோ ஆக்ஸிஜனே இல்லை. அங்குள்ள குளிர்ச்சியும் கதிரியக்கமும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. சூரிய மண்டலத்தில் ஏற்படும் வெடிப்புகளில் கதிரியக்கமும் தகடுகளைச் சுத்தப்படுத்துகின்றன.
இதை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பணி புரியும் விஞ்ஞானியான ஜூலியா க்ரீர் லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விளக்கினார்.விண்வெளியில் அனைத்து உலோகமுமே கோல்ட் வெல்டிங்கிற்குத் தயார் தான்!
இரண்டு உலோகத் தகடு துண்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டுமாறு வைத்தால் அல்லது தேய்த்தால் ஆக்ஸைடு லேயர் இல்லாத காரணத்தினால் ஒன்றுடன் ஒன்றான இணைப்பு உடனடியாக ஏற்பட்டு விடுகிறது.
இது விண்கலங்களை தயாரிக்கும் பொறியியல் வல்லுநர்களை கவலையுறச் செய்தது. ஒரு கதவானது திறக்காமலே போகலாம் எந்த ஒரு பொருளும் ஒட்டிக் கொண்டு இயங்காமல் போகலாம்.
உதாரணமாக ஒரு உலோக ஸ்க்ரூவை வைத்து ஒரு கதவைப் பொருத்தினால் பிறகு அதைக் கழட்டவே முடியாது. ஸ்க்ரூ கதவுடன் ஒட்டிக் கொள்ளும்.
1991ல் ஒரு விண்கலத்தில் ஆண்டென்னா திறக்கவே இல்லை.
சில உலோகங்கள் ‘போக்கிரி உலோகங்களாக’ இருக்கின்றன. தங்கமும் பிளாட்டினமும் இந்த வகையைச் சேர்ந்தவை. அவற்றில் ஆக்ஸைட் லேயர் பூமியில் கூட இல்லை. ஆகவே இவற்றிற்கு கோல்ட் வெல்டிங் என்ற நிகழ்வே சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் இவை மிகவும் மிருதுவானவை என்பதால் வெல்டிங் இல்லாமலேயே ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விடக் கூடியவை.
சரி, இந்த கோல்ட் வெல்டிங்கை -விண்வெளி ஒட்டுதலை – தவிர்ப்பது எப்படி?
இதற்கு விஞ்ஞானிகள் சில உத்திகளைக் கண்டு பிடித்தனர். ஒன்று அனொடைஸிங் (Anodizing) என்னும் வழிமுறை. இதன் மூலம் ஆக்ஸைட் படலத்தை முடக்கி விடலாம். இன்னொரு முறை உராய்வை நீக்கும் மசகு பொருள்களை உலோகத் தகடுகள் மீது பூசி விடுவது. மாலிப்டெனம் டிசுல்ஃபைட் போன்ற ல்யூப்ரிகண்ட் இதற்காகப் பயன்படுத்தப்படுக்கிறது.
இன்னொரு முறையும் உண்டு. இதன்படி ஒரே உலோகங்களைச் சேர்க்காமல் வெவ்வேறு உலோகங்களைச் சேர்ப்பது. அதாவது தங்கத்தை மாலிப்டெனம் வகையுடன் சேர்ப்பது. இதனால் அணு அமைப்பானது வேறு படுவதால் இவை ஒட்டிக் கொள்ளாது.
விண்கலத்தை ஏவும் முன்னர் அதிர்வினால் ஏற்படும் பாதிப்புகளையும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இப்படி எல்லாம் செய்தாலும் சில சமயம் உலோகம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறது! பூமியில் கூட இப்படி ஒட்டிக் கொள்ளும் போல்ட்டுகளை ஓட்டை போட்டுத் தான் எடுக்க வேண்டி இருக்கிறது.
விண்கலத்தை விண்வெளியில் ஏவிப் பறக்கவிடுவது என்றால் சும்மாவா என்ன?
**