WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,014
Date uploaded in London – 25 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் 71 – தேவதைகள் நிமிக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் ஐம்பத்தேழாவது ஸர்க்கமாக அமைவது ‘வஸிஷ்டர் மித்திராவருணர்களுக்கு புத்திரனாக ஜனிப்பது’ என்னும் ஸர்க்கமாகும்.
ஶ்ரீ ராமர் லக்ஷ்மணருக்கு ராஜா நிமி பற்றிய வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.
நிமி இக்ஷ்வாகு வமிசத்தில் பன்னிரெண்டாவது தலைமுறை பிள்ளையாகப் பிறக்கிறார். அவருக்கு தீர்க்கசத்திரம் என்ற யாகத்தை நடந்த விருப்பம் உண்டாகவே அவர் வஸிஷ்டரை அழைக்கிறார். வஸிஷ்டரோ தான் இந்திரன் நடத்தும் ஒரு யாகத்தை நடத்த ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறார். உடனே நிமி ரிஷி கௌதமரை அழைத்து யாகத்தை முடிக்கிறார்.
பின்னர் வஸிஷ்டர் அவரைப் பார்க்க வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் கோபமுற்ற வஸிஷ்டர், ‘உனது உடலை விட்டு உயிர் பிரியட்டும்’ என்று சாபம் கொடுத்தார். நிமியும் பதிலுக்கு உமது உயிரும் உடலை விட்டு நீங்கட்டும் என்ற சாபத்தைக் கொடுத்தார்.
நிமியின் உயிர் நீத்த உடலை மக்களும், மந்திரிகளும், பிராமணர்களும் அழியாத வண்ணம் காப்பாற்றி வந்தனர்.
அப்போது பிருகு மஹரிஷி யாகம் முடிந்த மகிழ்ச்சியில் வாயுவாக இருந்த நிமியிடம் இப்படிக் கூறினார்:
அனயிஷ்யாமி தே சேதஸ்துஷ்டோஸ்மி தவ பார்திவ |
உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 12
தவ – உன் விஷயத்தில் துஷ்ட: – அகமகிழ்ந்தவனாக அஸ்மி – ஆகிவிட்டேன் தே – உன்னுடைய சேத: – ஜீவாத்மாவை தத: – மீளவும் அனயிஷ்யாமி – உண்டாக்குகிறேன்
இதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரும் நிமியினது ஜீவாத்மாவைப் பார்த்து, “அரசரே! உமது ஜீவாத்மா எங்கிருக்க வேண்டுமோ அது உன்னால் நிச்சயிக்கப்படட்டும்.விருப்பமான வரத்தை வேண்டுவீராக’ என்றனர்.
சுப்ரீதாஸ்ச சுரா: சர்வே நிமேஷ்சேதஸ்தாப்ருவன் | வரம் வஸ்ய ராஜர்ஷே க தே சேதோ நிரூஷ்யதாம் |
உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13
சுரா: – தேவர்கள் சர்வே ச – எல்லோரும் சுப்ரீதா: – அதிக ப்ரீதி அடைந்தவர்களாய் நிமே: – நிமியினது சேத: – ஜீவாத்மாவைப் பார்த்து ததா – இப்படி அப்ருவன் – சொல்லியருளினார்கள் ராஜர்ஷே – ‘அரசர் பெருமானே தே சேத: – உனது ஜீவாத்மா க – எங்கிருக்க வேண்டுமோ அது நிரூஷ்யதாம் – உன்னால் நிச்சயிக்கப்படட்டும் வரம் – விருப்பமான வரத்தை வஸ்ய – வேண்டுவீராக
ஏவமுக்த: சுரை: சர்வைநிமேஸ்சேதஸ்ததாப்ரவீத் | நேத்ரேஷு சர்வபூதானாம் வஸேயம் சுரசத்தமா: ||
உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 14
சுரை: – தேவர்கள் சர்வை: – எல்லோராலும் ஏவம் – இவ்வண்ணம் உக்த: – நியமனம் பெற்ற நிமே: – நிமியினது சேத: – ஜீவாத்மா ததா – அப்பொழுது அப்ரவீத் – இப்படி பதிலுரைத்தது சுரசத்தமா: – ‘ஹே! தேவோத்தமர்களே! சர்வ பூதானாம் – எல்லா பிராணிகளுடைய நேத்ரேஷு – நேத்திரங்களில் வஸேயம் – நான் வசித்திருக்க வேண்டுகிறேன்’’
பாடமித்யேவ விபுதா நிமேஸ்சேதஸ்ததாப்ருவன் | நேத்ரேஷு சர்வபூதானாம் வாயுபூதஸ்சரிஷ்யஸி ||
உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 15
ததா – அப்பொழுது விபுதா: – தேவர்கள் நிமே: – நிமியினது சேத: – ஜீவாத்மாவைப் பார்த்து இதி – இப்படி அப்ருவன் – நியமித்தருளினார்கள் பாடம் ஏவ- ‘அங்ஙனமே ஆகுக. வாயுபூத: – வாயு வடிவமாகி சர்வபூதானாம் – எல்லா பிராணிகளுடைய நேத்ரேஷு – நேத்திரங்களில் சரிஷ்யஸி – நீ ஸஞ்சரிக்கக் கடவை’
த்வத்க்ருதே ச நிமிஷ்யந்தி சக்ஷூம்ஷி ப்ருதிவீபதே | வாயுபூதேன சரதா விஸ்வமார்தே முஹுர்முஹு: ||
உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 16
ப்ருதிவீபதே – ஹே, பார்த்திவ வாயுபூதேன – வாயு வடிவமாக சரதா – சஞ்சரிப்பதால் த்வக்ருதே – உன் நிமித்தமாய் விஸ்ரமார்த ச – இளைப்பாறுதற்காகவே முஹு: முஹு: – அடிக்கடி சக்ஷூம்ஷி – கண்களை நிமிஷ்யந்தி – இமை கொட்டுவார்கள்
இப்படிக் கூறிவிட்டு தேவர்கள் தங்கள் இடம் சென்றனர். நிமியின் உடலை எடுத்து வந்து ரிஷிகள் மந்திரம் சொல்ல ஒரு புத்திரன் ஜனனமானான்.
அவரே ஜனகர் ஆவார்.
இந்த வரத்தில் தேகத்தை விட்டு நீங்கிய ஜீவாத்மாவுக்கு வரம் அளிக்கப்பட்டதைக் காண்கிறோம்.
**