ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)

TWO TAMIL FILMS PORTRAY TAMIL POET OTTAKKUTHAR.

Written by London Swaminathan

Post No. 16,160

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PProject Madurai website has full story of Ottakkuthar

1

ஒட்டக்கூத்தர் யார் ? எப்போது வாழ்ந்தார் ?

2

ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று மஹாராணி சொன்னது ஏன்?

3

அவர் எழுதிய நூல்களின் பெயர் என்ன ?

4

ஒட்டக்கூத்தர் எழுப்பிய கோயில் எங்கே உள்ளது ?

5

நெய்த்தானத்திலுள்ள சிவபெருமானைப் போற்றி இவர் பாடிய பிரபல பாடலின் வரிகள் என்ன ?

6

இவர் பாடிய வேறு நூல்கள்  யாரைப் பற்றியவை?

7

ஒட்டக்கூத்தருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்துக்கும் என்ன சம்பந்தம் ?

8

இந்தப் புலவர் இலக்கணப் பிழைகள் செய்த போலிக் புலவர்களைக் கண்டித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன ?

9

தவறான புலவர்களின் குடுமியை முடிந்து அவர்களை ஒட்டக்கூத்தன் வாட்டி வதைத்தான் என்பதை படிக்காசுப்  புலவர் எப்படிக்   குறிப்பிட்டார் ?

10.

ஒட்டக்கூத்தர் “ஈட்டி எழுபது” என்னும் நூலைப் பாடினாரா?

*********************

விடைகள்

1.விக்கிரம சோழன்இரண்டாம் குலோத்துங்க சோழன்இரண்டாம் இராசராச சோழன் ஆகிய சோழப் பெருமன்னர் மூவர் காலத்திலும் ஒட்டக்கூத்தர் அவர்கட்குக் கல்வி கற்பித்த ஆசிரியராய்ப் பின் அரண்மனைப் புலவராய் இறுதியில் ஞானாசிரியராய் விளங்கித் தம் தொண்ணுற்றேழாவது வயதில் சிவகதி அடைந்த்தார். கூத்தரின் பிறப்பிடம் மலரி என்றும் சீர்காழியென்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன;  காலம் 12 ஆம் நூற்றாண்டு. ஒட்டக்கூத்தர் கைக்கோளார் என்று கூறப்படும் செங்குந்தர் மரபில் தோன்றியவர். சைவ சமயத்தவர்; சக்தி வழிபாட்டில் நாட்டம் மிக்கவர்; தம் நூல்களில் திருமாலைப் பற்றிய பெருமைகளைக் கூறி வணங்குதலால், சமயப் பொதுமை உடையவர்;சிறந்த முருகபக்தர். தக்கயாகப் பரணியில் கோயில் பாடியது என்ற பகுதியில் திருஞானசம்பந்தர் வரலாறு காணப்படுகின்றது. இங்கே திருஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே கூத்தர் காட்டுகின்றார்.

***

2.பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்துபின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள். உடனே  குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.

ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,  ஒரு பாட்டுப்பாடி கதவைத் திறந்து விடுங்கள் மஹாராணி என்றார் ; இந்தப் புலவர்தானே எனது குருவாகிய புகழேந்திப் புலவரைச் சிறையில் அடைத்தவர் என்று மேலும் கோபமுற்று இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டாள்; உடனே ஊர் முழுதும் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற செய்தி பரவியது; பின்னர் மன்னன், புகழேந்திப் புலவரை விடுதலை செய்தான் 

3.எழுதிய நூல்கள் மூவருலா (விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா), குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் .

***

4.கூத்தனூரில் இவர் சரஸ்வதி தேவிக்கு எழுப்பிய கோயில் இருக்கிறது; பல கோயில்களில் சரஸ்வதிக்குச் சந்நிதி இருந்தாலும் தமிழ்நாட்டில் கலைமகளுக்கு நிறுவப்பட்ட தனிக்கோயில் இது ஒன்றுதான்.

***

5.நெய்த்தானப் பெருமானை ஒட்டக்கூத்தர் பாடியதாகப் பின்வரும் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் காணப் படுகின்றது. இப் பாடலில் அமைந்துள்ள அரிய பொருள், வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

விக்கா வுக்கா வித்தா விப்போய்

விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்

இக்காயத்தா சைப்பா டுற்றே

இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்

அக்காடப் பேய் தொக்கா டச்சூ

ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்

கெக்கா டக்கா னத்தா டப்போம்

நெய்த்தா னத்தா னைச்சே வித்தே. [87]

பொருள் :

“விக்கித் தளர்ந்து உயிர் உடலை விட்டுப்போய் விட்டால், உறவினர் பிணத்தைத் தகனஞ் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர். இத்தகைய இயல்புடைய உடம்பில் பற்றுவைத்து, செல்வத்தைத் தேடிச் சம்பாதித்து வீட்டிற்கொண்டு வைக்கின்றவர்களே! தாம் அணிந் திருக்கும் எலும்பு மாலை அசையும் பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும், சடையிற் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும், திருக்கைகளில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு அசையவும், அச் சுடுகாட்டினிடத்தில் நடனஞ் செய்கின்ற அந்தப் பெருமை பொருந்திய நெய்த்தான மென்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு நிலையான கதியைப் பெறுவீராக.”

***

6.விக்கிரமசோழன் உலா- விக்கிரம சோழனைப் புகழும் நூல்;

குலோத்துங்க சோழன் உலா: இது, இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாவது சிறப்பான நூலாகும்.

இராசராசன் உலா: இது, மூன்றாவது உலாவாகும். பிரமன் தொடங்கி இரண்டாம் இராசராசன் வரை உள்ள வரலாறு உள்ளது ; இவ்வுலாவிற்கு, இம்மன்னன், கண்ணி தோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகச் சங்கர சோழனுலா கூறுகிறது.

தக்கயாகப்பரணி:  இதுவும் இராசராசனைச் சிறப்பித்து எழுதப்பட்டது. பண்டைய பரணி நூல்களில் கலிங்கத்துப்பரணிக்கு அடுத்த பழமையும் சிறப்பும் உடையது இந்நூல்.

உத்தரகாண்டம்: இராமர் பட்டம் சூட்டிக் கொள்வதுடன் இராமாயணம் முடிவுறும். அதன் பின்பு நடந்த செய்திகளைக் கூறுவது உத்தர ராமாயணம். இது, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது 

***

7.ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்றும், அம்பலக்கூத்தர் என்றும், ஆனந்தக் கூத்தர் என்றும் குறிப்பர் ஒரு சாரார்.

டாக்டர் மு. வரதராசனார் எழுதிய  ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் ஒட்டக்கூத்தர் பெயர்க்காரணம் பின்வருமாறு சுட்டப் படுகின்றது

“அவர் (ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டோடு பெற்றிருந்த தொடர்பு காரணமாக ஒட்ட (ஒரிசா நாட்டு) என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார் முதற் குலோத்துங்கனின் கலிங்க வெற்றிக்குப் பிறகு, தமிழர் கலிங்க நாட்டோடு – ஒரிசாவோடு– நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடும். எனவே அம்முறையில் சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராகவும், ஆசிரியராகவும், இலக்கியச் செம்மலாகவும் விளங்கிய ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டிற்குப் பன்முறை சென்று வந்திருக்கலாம். அதுவும் அரசியற் பணியின் பொருட்டுச் சென்று வந்திருக்கலாம். இக்காரணம் பற்றி இவர் ‘ஒட்டக்கூத்தர்’ என்று அழைக்கப்பட்டார்.–[88]. தமிழ் இலக்கிய வரலாறு பக். 157.

***

8.பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே

தாட்டுக் கடற்புலி யஞ்சலன் றோவறுத் துக்கிடந்த

சூட்டுக் கதிர்க ணிலத்தடங்கா மற் றொகுத்துமள்ளர்

மேட்டுக் குவாலிடும் பொன்னிநன் னாடுடை வேற்கண்டனே.

என்னும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிற் [94] காணப்படுகின்றது. இப் பாடலின் கொளு, ‘அது கவிகளை அறுத்த போது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக்கூத்தர் பாடியது’ என்று அமைந்துள்ளது.

***

9.தனிப்பாடல் திரட்டில் ‘பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடியது’ என்ற தலைப்பில் கீழ்க்காணும் பாடல் காணப்படுகின்றது.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னிங்கில்லைக்

குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி

எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை

இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு

வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை

விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித்

தெட்டுதற்கோ வறிவில்லாத் துரைகளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே. [98]

‘போலிப் புலவர்களைப் பற்றிப் பாடியது’ என்ற தலைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது.

***

10.அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை,  “அவர் (ஒட்டக்கூத்தர்) அம்மரபின் (செங்குந்தர் மரபு) பெருமை விளங்க ஈட்டியெழுபது என்னும் நூலினைப் பாடியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர். மு. இராகவையங்கார் அவர்கள், “இப்புலவர் (ஒட்டக்கூத்தர்) பாடிய நூல்களிலே ஈட்டியெழுபது என்பதும் ஒன்று. இஃது இவரது குலப் பெருமைகளையெல்லாம் கம்பீரமாக விளக்குவது.” என்று குறிப்பிடுவர்.

–Subham—

Tags- ஒட்டக்கூத்தர் பாடல்,  10 கேள்விகள் , ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

Leave a comment

Leave a comment