
Research article written by London swaminathan
Date: 20 May 2016
Post No. 2826
Time uploaded in London :– 15-36
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணாத ஒரு வழக்கு இந்து மத இலக்கியங்களில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்து பிறந்து அவனருளால் பாணினி, அகத்தியன் ஆகிய இருவரால் இலக்கணம் வரையப்பட்டதால் இந்த வழக்கு நீடிக்கிறது. இரண்டு மொழிகளும் இன்னென்ன சொற்களைக் கொண்டே ஒரு நூல் துவக்கப்பட வேண்டும் என்று சொல்லும். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப் பட்டு வந்துள்ளது.
தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரிய, திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை மொழியியல் ரீதியாக முன்பே நிரூபித்துவிட்டேன்.

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–
ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா
கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ
–பாதஞ்ஜலதர்சனம்
பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.
பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.
‘அத ரிக் வேத:’
‘அத ஸ்ரீமத்பகவத் கீதா’
என்று நூல்கள் ஆரம்பமாகும். நூலின் உள்ளே கடவுள் வாழ்த்து என்ற துதி இருக்கும். அதில் கடவுளின் பல பெயர்கள் வரும். கடவுள் வாழ்த்தே இல்லாவிடினும்
‘அத யோகானுசாசனம்’ (பதஞ்சலி யோக சூத்ரம்)
‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாசா’ (பிரம்ம சூத்ரம்)
அமரகோசம் என்னும் நிகண்டும் ‘அத’ சப்தத்தை மங்கல சொல்லாகப் பட்டியலிட்டுள்ளது.
ஓம்காரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மூல மந்திரத்திலிருந்துதான் பிரபஞ்சமே உற்பத்தியாகியது. இதை மாண்டூக்ய உபநிஷத் நன்கு விளக்கும். நவீன விஞ்ஞாமும் சப்தத்திலிருந்து பிரபஞ்சம் எல்லாம் உருவானதை ஒப்புக் கொள்கிறது.
‘அத’ என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள். அ –என்னும் எழுத்துதான் உலகின் பழைய மொழிகளின் முதல் எழுத்து. ரிக் வேதம் முதலான புனித நூல்கள் அக்னி என்று அ- வில் துவங்கும் அல்லது ஓம் என்னும் மந்திரத்துடன் துவங்கும்.
பழங்காலத்தில் குருமார்கள் மேடையில் அமர்வர். சிஷ்யர்கள் கீழே அமர்வர். குரு, ‘அத வால்மீகி ராமாயண’, ‘அத மஹா பாரத’ என்று உபதேசிக்கத் துவங்குவார்.
முடிவில் ‘சுபம்’ என்றோ ‘சாந்தி’ என்றோ சொல்லி முடிப்பார். உலகில் வேறு எங்கும் காண முடியாத அற்புத இலக்கிய வழக்கு இது.

கடவுளை நேரிடையாக குறிப்பிடாவிட்டால், ‘லோகம்’, ‘விஸ்வம்’, ‘ஸ்வஸ்தி’ போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவர்.
விஷ்ணு சஹஸ்ர நாமம், ஓம் ‘விஸ்வம்’ என்று துவங்கும்.
தமிழ் வழக்கு
சம்ஸ்கிருதம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய தமிழும் இதை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால் தமிழில் பெரிய பட்டியல் உள்ளது.
ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் என்சைக்ளோபீடியா) வழங்கும் பட்டியல்:–
சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், புகழ், மலை, மதி, நீர், ஆரணம்(வேதம்), சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி (சூரியன்), அமிர்தம் ஆகியனவும் இவை தொடர்பன சொற்களும்.
தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் காப்பியம் ‘எழுத்து’ என்ற சொல்லுடன் துவங்கும்.
ஆயினும் பெரும்பாலான நூல்கள் ‘உலகம்’ என்ற சொல்லுடன் துவங்கும். முன்காலத்தில் இதை ‘லோகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் என்று கருதினர். ஆனால் எனது ஆராய்ச்சியில் இது இரு மொழிகளுக்கும் பொதுவான சொல் என்பது கண்டறியப்பட்டுளது. (ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழ்-சம்ஸ்கிருத மூல மொழியே காரணம்).

‘உலகம் உவப்ப வலனேர்பு’
சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ – என்று துவங்கும்
மற்ற நூல்களின் முதல் வரிகள்:–
‘உலகந்திரியா’ (மணிமேகலை),
‘உலகம் மூன்றும்’ (வளையாபதி),
‘உலகெலாம் உணர்ந்து’ (பெரிய புராணம்),
‘உலகம் யாவையும்’ (கம்ப ராமாயணம்)
‘நனந்தலை உலகம்’ (முல்லைப் பாட்டு),
‘மூவா முதலா உலகம்’ (சீவக சிந்தாமணி),
‘நீடாழி உலகத்து’ (வில்லி பாரதம்),
‘வையகம் பனிப்ப’ (நெடுநல் வாடை),
‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’ (சிறு பாணாற்றுப்படை),
‘மாநிலஞ்சேவடியாக’ (நற்றிணை)
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மாநிலம், வையகம், உலகம் – ஆகியன ஒரு பொருளுடைத்து.
ஒரு நூலை மங்கலச் சொல்லுடனே துவங்க வேண்டும் என்பது,
“வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண, இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர்” என்னும் சூத்திரத்தில் உளது.

பழங்கால சம்ஸ்கிருத, பிற்கால தமிழ் கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்தி’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும்.
பழைய தமிழ் திரைப்படங்கள், நூல்கள் எல்லாம் ‘சுபம்’, அல்லது ‘ஓம் சாந்தி’, ‘ஓம் தத்சத்’ என்று முடியும்.
பிரிடிஷ் லைப்ரரியில் நான் காணும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாவல்கள், நாடகங்களிலெல்லாம் இதைக் காண்கிறேன். வடமொழி நாடகம் அனைத்தும் ‘ஸ்வஸ்தி’ வாசகத்துடன் முடிவடையும். காளிதாசன் போன்ற உலக மகா கவிஞனும் கூட கடவுள் வாழ்த்துடன் துவங்கி, ஸ்வஸ்தி வாசகத்துடன் முடிக்கிறான்.
தமிழ் வேதமாகிய திருக்குறள் ‘அகர’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும். ‘அ’ – என்ற சொல் அவ்வளவு புனிதமானது. உலகிலேயே மிகவும் பழைய சமய நூலான ரிக் வேதம் அக்னி – என்ற ‘அ’-காரத்துடன் துவங்கும்.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் காவியம், ‘திங்கள், ஞாயிறு, மாமழை’ — ஆகிய மூன்றையும் வாழ்த்தித் துவங்கும்.
தொல்காப்பிய சூத்திரத்தில் கடவுள் வாழ்த்து பற்றிக் கூறுகையில், “கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பார். அந்தக் ‘கொடிநிலை’, ‘கந்தழி’, ‘வள்ளி’ இதுதான் என்று சில உரையாசிரியர் பகர்வர். எப்படியாகிலும் இம்மூன்றும் மங்கலச் சொல் பட்டியலில் உள்ள சொற்களே!
உலகில் வேறு எங்குமிலாத இந்த மங்கலச் சொல் வழக்கு இந்து இலக்கியத்தில் மட்டும் இருப்பது பாரதீயப் பண்பாட்டின் தனிப்பெரும் முத்திரை ஆகும்!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
–சுபம்–








































You must be logged in to post a comment.