ஜாதகாலங்காரம் தந்த குஜராத் ஜோதிடர் கணேசர்!

ச.நாகராஜன்

கணேசரின் பிறந்த ஊரும் காலமும் 

ஜாதகாலங்காரம் என்ற புகழ் பெற்ற ஜோதிட நூலைத் தந்த கணேசர் அல்லது ஸ்ரீ கணபதியை ஜோதிடர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர். ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நூலில் ஏழாவது அத்தியாயத்தில் இவர் தம்மைப் பற்றி வெகு சுருக்கமாக நான்கே செய்யுள்களில் கூறுகிறார்.இந்த அத்தியாயத்தின் பெயர் வம்ச வருண அத்தியாயம். அதில் இவர் தன்னைப் பற்றிக் கூறுவதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.

 

“புகழ் பெற்ற இந்த உலகில் குஜராத் மன்னரின் அரசவையில் கன்ஹாஜி என்ற ஜோதிடர்களுக்குள் மகேந்திரனாக விளங்கிய பிரபல மேதை இருந்தார். அவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று புத்திரர்கள் பிறந்தனர்.மூத்தவரான சூர்யதசா மிகவும் புத்திசாலி. சிறந்த ஜோதிடருமாவார். அவருக்கு அடுத்துப் பிறந்தவர் கோபாலர்.அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர், மூன்றாமவரான ராமகிருஷ்ணர் ஜோதிடர்களிலெல்லாம் சிறந்தவராக விளங்கினார். இதில் கோபாலருக்கு மகனாகப் பிறந்தவர் கணேசர்.இவர் சாலிவாகன சகாப்தம் 1535ல் (கி.பி, 1613) பாத்ரபத மாதத்தில் ப்ரத்னபுரத்தில் இதை இயற்றினார்.” இப்படி இவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

 

ப்ரத்ன என்றால் சூர்யன் என்று பொருள். ஆகவே இவர் தாபீ நதிக்கரையில் அமைந்திருந்த சூரியபுரத்தில் இருந்து இதை எழுதினார் என்று தெரிய வருகிறது. சிவ பண்டிதர் என்னும் குஜராத் பிராமணரிடமும் ஜோதிடக் கலையை தான் கற்றதாக அவரே தெரிவிக்கிறார். அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கியவரான இவரை லாபஜி என்று அனைவரும் அன்போடு அழைத்தனராம்.

ஜாதகாலங்காரம்

இந்த நூல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அனைவராலும் படிக்கப்பட்டு போற்றப்பட்டது. காரணம் மிகவும் ரத்னச் சுருக்கமாக எளிமையாக இந்த நூல் அமைந்திருப்பதினால் தான். ஜோதிடத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் முதலில் கற்க ஏற்ற நூல் இது. சுமார் 110 சுலோகங்கள் கொண்டது இது. ஸ்ரக்தரா விருத்தத்தில் அமைந்துள்ள இந்த நூலை தமிழ். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம். ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்று வாங்கிப் படிக்க முடியும்!

 

ஏழு அத்தியாயங்கள்

இந்த நூலில் உள்ள ஏழு அத்தியாயங்கள் இவை தான் 1) சம்ஜ்ஞா அத்யாயம் 2)பாவ அத்யாயம் 3) யோக அத்யாயம் 4) விஷ கன்யா அத்யாயம் 5) ஆயுர்த்தாய அத்யாயம் 6)வ்யதியய பாவ பலாத்யாயம் 7)வம்ச வருண அத்யாயம்

 

சம்ஜ்ஞா அத்தியாயத்தில் லக்னத்திலிருந்து ஒவ்வொரு பாவமாக அது எதைக் குறிக்கும் என்பதை விளக்குகிறார். லக்னத்திற்கு மூர்த்தி, அங்கம் தனு உதயம் என்று பெயர்கள் உண்டு என்பதையும் இரண்டாம் இடத்திற்கு ஸ்வ, கோச, அர்த்த,குடும்ப தன என்ற பெயர்கள் உண்டு என்பதையும் சொல்லி அதன் அர்த்தமான செல்வம்,புதையக் போன்ற சொற்களால் அதை விளக்குகிறார். இப்படிப்பட்ட விளக்கம் தான் ஜோதிடம் கற்க விரும்புவோரை இந்த நூலின் பால் கவர்கிறது. அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும் கிரகத்திற்கான பலன்களைத் தெளிவாகச் சொல்கிறார்.இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரி வரியாக ஒவ்வொரு விஷயமாக இவர் விளக்கிச் சொல்வது கற்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். ஜோதிடத்தை படிப்படியாக எளிமையாகக் கற்க ஏற்ற நூல் இது.

கணபதி அல்லது கணேசர் இயற்றிய ஜாதகாலங்காரம் ஜோதிடம் கற்பதில் விக்னம் நீங்கி பிள்ளையார் சுழி போடுவதற்கான சிறந்த நூல்!

*****************

பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

 

பயமே இல்லாத பாரதி!

(All Quotes in English are words of Swami Vivekananda. All quotes in Tamil are words of Subramanya Bharathi: Swami)

பாரதியின் தேசபக்திப் பாடல்களும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்களும் பிரபலமான அளவுக்கு அவருடைய தெய்வ பக்திப் பாடல்கள் பிரபலமாகவில்லை. கண்ணன் பற்றிய பாடல்கள் மட்டும் ஓரளவுக்குப் பரவின. அவர் ஞானம் பற்றியும் பயம் ஒழிப்புப் பற்றியும் பாடிய பாடல்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. இது பற்றி அதிகம் விளக்குவதற்குப் பதிலாக அவருடைய வரிகளைப் படித்தாலே புரியும். இதையே சுவாமி விவேகனந்தரின் வீர வசனங்களிலும் காணும்போது மெய்சிலிர்க்கிறது.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

 

Fear is death, fear is sin, fear is hell,
fear is unrighteousness, fear is wrong life.
All the negative thoughts and ideas that are in
the world have proceeded from this evil spirit of fear.

—Swami Vivekananda

“அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்” (புதிய ஆத்திச்சூடி)

****

 

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

Be a hero. Always say, “I have no fear.”
Tell this to everyone — “Have no fear.” –Swami Vivekananda

 

“இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே

எதற்குமினி உலைவதிலே பயன் ஒன்றில்லை;

முன்னர் நமது இச்சையினாற் பிறந்தோம் இல்லை;

முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை;

மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே

வையத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்!”

 

“The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”– Swami Vivekananda

 

பேய்கள் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“நெஞ்சு பொறுக்குகுதில்லையே—இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சிஅஞ்சிச் சாவார்—இவர்

அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!

வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.”

 

Be strong! Don’t talk of ghosts and devils. We are the living devils. The sign of life is strength and growth. The sign of death is weakness. Whatever is weak, avoid! It is death. If it is strength, go down into hell and get hold of it! There is salvation only for the brave.—–Swami Vivekananda

“அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டாரடீ—கிளியே

ஊமைச் சனங்களடி!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் இல்லா

மாக்களுக்கோர் கணமும்—கிளியே!

வாழத் தகுதி உண்டோ?”

****

பயம்தான் பேய்

“பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

 

மரணம் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”

 

“Many times I have been in the Jaws of death, starving, footsore, and weary; for days and days I had had no food, and often could walk no farther; I would sink down under a tree, and life would seem to be ebbing away. I could not speak, I could scarcely think, but at last the mind reverted to the idea: “I have no fear nor death; never was I born, never did I die; I never hunger or thirst. I am it! I am it! The whole nature cannot crush me; it is my servant. Assert thy strength, thou Lord of lords and God of gods! Regain thy lost empire! Arise and walk and stop not! ” And I would rise up, reinvigorated; and here I am today, living! Thus, whenever darkness comes, assert the reality, and everything adverse must vanish.

Fear not, and it is banished. Crush it, and it vanishes. Stamp upon it, and it dies.”

Swami Vivekananda

 

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்”

****

“சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு

மாயையே—இந்தத்

தேகம் பொய் என்றுணர் தீரரை என்

செய்வாய்1—மாயையே”

****

“காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்

காலருகே வாடா—சற்றே உனை மிதிக்கிறேன்”

****

நிலவைப் பற்றிப் பாடும் பாடலில் கூட

“அச்சப் பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளயும் களியாய்

வாராய், நிலவே, வா” – என்று பாரதி பாடுகிறார்.

 

நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda

Pictures from Dinamalar and Facebook. Thanks. Contact: swami_48@yahoo.com

வீட்டுக்கு வந்த அன்னியன்!

பார்த்ததில்ரசித்தது! படித்ததில்பிடித்தது!!

வீட்டுக்கு வந்த அன்னியன்!

.நாகராஜன்

‘வேதாந்த கேசரி’ (Vedanta Kesari) என்ற ஆன்மீகப் பத்திரிக்கையை ராமகிருஷ்ண மடம் பல காலமாக வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவோம். அதில் 2012 செப்டம்பர் இதழில் வெளிவந்துள்ள வீட்டுக்கு வந்த அன்னியனைப் படித்தவர் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதன் தமிழாக்கச் சுருக்கம் தான் இது!

நான் பிறந்த சில வருடங்களுக்குப் பிறகு எனது தந்தை ஒரு அன்னியனைச் சந்தித்தார். எங்கள் ஊரோ சின்ன ஊர்.அதில் அவனை அதுவரை யாரும் அங்கு பார்த்ததில்லை!

அவனைப் பார்த்த மாத்திரத்தில் என் தந்தையாருக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது! அப்படி ஒரு மாய ஜாலக்காரன் அவன்! வீட்டிற்கு அழைத்தார். அவனும் உடனே வந்து விட்டான். வந்தவன் போகவே இல்லை!

நான் வளர வளர எங்கள் வீட்டில் அவன் இருப்பதைப் பற்றி கேள்வி எதையும் நான் எழுப்பவில்லை. எனது இளம் வயதில் தனியொரு இடத்தை அவன் பிடித்து விட்டான்! எனது தந்தையும் தாயும் எனக்கு அவ்வப்பொழுது நல்லது கெட்டதை இனம் காணச் சொல்லித் தருவார்கள். அம்மா இது நல்லது இது கெட்டது என்று சுட்டிக் காட்டிச் சொல்லித் தருவாள்.தந்தையோ கீழ்ப்படிவது எப்படி என்பதைச் சொல்லித் தருவார்! ஆனால் அன்னியனோ! அவன் தான் எனக்கு எல்லாக் கதைகளையும் சொல்வான். மணிக்கணக்காக அவன் கூறும் காமடி சம்பவங்கள், மர்மக் கதைகள், சாகஸக் கதைகள் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தும்; மெய் சிலிர்க்க வைக்கும். ஆவென்று வாய் பிளந்தவாறே அவற்றைக் கேட்டு ஆனந்திப்பேன். அரசியல் நிகழ்வுகளா, வரலாறா, விஞ்ஞானமா எது வேண்டுமானாலும் கேட்கலாம்.அவனுக்கு எல்லாவற்றிற்கும் விடை தெரியும்.அவனுக்கு இறந்தகாலம் அத்துபடி. நிகழ்காலமோ கேட்கவே வேண்டாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூட அவன் கணித்துச் சொல்வதுண்டு!

அவன் எங்களை ஒரு சமயம் புட்பால் (Foot Ball Finals) விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றான். ஒரு சமயம் அழுதேன் ஒரு சமயம் சிரித்தேன். எப்படிப்பட்ட விளையாட்டு அது! விளையாட்டு முழுவதும் ஒரே சத்தம் தான்! என் தந்தை கூட அந்தச் சத்தத்தை ரசித்தார். கண்டிக்கவே இல்லை என்னை!

ஆனால் சில சமயம் என் அம்மா மட்டும் அவன் எங்களுடன்  பேசிக்கொண்டிருக்கும் போது சமையலறைக்குள் தஞ்சம் புகுந்து விடுவாள். ஒரு வேளை அமைதி அவளுக்கு அங்கு தான் கிட்டியதோ என்னவோ! இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த அந்நியனை எப்படி விரட்டுவது என்று சமையல் அறைக்குள் அவள் யோசித்திருப்பாளோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

எனது தந்தை கட்டுப்பாடானவர். அறநெறிகளில் எதையும் யாரும் எப்போதும் மீறக் கூடாது. ஆனால் அந்த அந்நியன் மட்டும் இதைக் கேட்க மாட்டான்.அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவனுக்கு மட்டும் கிடையாது.ஆபாசமாகப் பேசுவது என்பது என் வீட்டில் முற்றிலுமாகத் தடுக்கப்பட்ட விஷயம். வெளியிலிருந்து வந்தவர்கள் கூட என் வீட்டில் கண்ணியமாகத் தான் பேச வேண்டும். ஆனால் அந்நியனோ சில சமயம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி விடுவான். என் தந்தைக்கோ முகம் சிவக்கும். என் அம்மாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்னும், என்றாலும் அந்நியனை அவர்கள் திட்டியதே இல்லை! மது பானத்தைப் பற்றியும் சிகரெட் பற்றியும் அவன் சொல்வதுண்டு! செக்ஸைப் பற்றியும் விலாவாரியாக அவன் சொல்வான்! சில சமயம் அப்பட்டமாக அவன் விஷயங்களைக் கூறி விடுவான். சில சமயம் பூடகமாக விளக்குவான். சில சமயம் அவன் சொல்வதைக் கேட்டால் மிகவும் தர்மசங்கடமாக இருக்கும்!

 

இப்போது தான் எனக்குப் புரிகிறது. எனது ஆரம்ப காலத்தில் அவனது செல்வாக்கு என் மீது அதிகப்படியாகவே இருந்திருக்கிறது என்று! காலம் செல்லச் செல்ல எனது பெற்றோர் எதையெல்லாம் நல்லவை என்று கருதினார்களோ அவற்றிற்கு எதிரான கருத்துக்களை அவன் முன் வைத்தான். ஆனாலும் கூட என் பெற்றோர் அவனை வெளியில் போ என்று சொல்ல முன்வரவில்லை!

 

என் வீட்டிற்குள் அந்நியன் வந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. எங்களில் ஒருவனாக அவன் கலந்து விட்டான் என்றாலும் கூட முன்பிருந்த கவர்ச்சி அவனிடம் இப்போது இல்லை. என் வயதான பெற்றோர் ஒடுங்கிக் கிடக்கும் அறையில் ஒரு மூலையில் இப்போதும் கூட அவனுக்கு இடம் உண்டு. அவன்பேசுவதை இப்போது கூடக் கேட்க ஆட்கள் உண்டு.

 

 

அவன் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா?

அவனை நாங்கள் டிவி (Television) என்று அழைக்கிறோம்!

அவனுக்கு இப்போது ஒரு மனைவி வேறு வந்து விட்டாள்!

அவளை நாங்கள் கணினி (Computer)  என்று அழைக்கிறோம்!

அவர்களுக்குக் குழந்தைகள் வேறு பிறந்து விட்டன.

முதல் குழந்தையின் பெயர் செல் போன் (Cell Phone)!

இரண்டாவது குழந்தையின் பெயர் ஐ பாட் (I Pod)!

மூன்றாவது குழந்தையின் பெயர் இண்டர் நெட் (Internet)!

 

படித்தது பிடித்திருந்தால் நன்றி வேதாந்த கேசரிக்கு.தமிழில் குறையிருந்தால் அது என்னுடையது (By S Nagarajan! )

*********************

 

திருநெல்வேலி தந்த ஜோதிட விற்பன்னர்

பலதீபிகா அருளிய மந்த்ரேஸ்வர்!

By .நாகராஜன்

திருநெல்வேலி தந்த ஜோதிட விற்பன்னர் 

அற்புதமான ஜோதிட விற்பன்னராக 13ம் நூற்றாண்டில் திகழ்ந்தவர் மகாமுனிவர் மந்த்ரேஸ்வரர். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பஞ்சகிரி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் மார்க்கண்டேய பட்டர். இந்த கிராமத்தில் இருந்த சிவாலயத்தில் உள்ள அம்பிகையின் பெயர் சுகந்த குந்தளாம்பாள்.இறைவனின் திருநாமம் குலசேகர பெருமாள்! சுகந்த குந்தளாம்பாளை இடைவிடாமல் துதித்து வந்த மந்த்ரேஸ்வரர் சகல கலைகளிலும் சிறந்த விற்பன்னரானார். ஜோதிடத்தில் தலை சிறந்த வித்தகரானார்.

 

வாழ்க்கையின் பின் பகுதியில் மகாமுனிவராகத் திகழ்ந்த இவர் பாரதமெங்கும் பயணம் மேற்கொண்டார். பத்ரிகாசிரமம், மிதிலா ப்ரதேசம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பெரும் ஞானம் பெற்றார். சாஸ்திரம், வேதாங்கம் உள்ளிட்ட அனைத்திலும் வல்லவரானதால் மந்திரங்களில் சித்தி அடைந்த சித்தரானார். ஆகவே மந்த்ரேஸ்வர் என்ற பெயரைப் பெற்றார். இறுதி நாட்களில் திருநெல்வேலிக்கே திரும்பி வந்தார். யோக முறைப்படி தன் உயிரை நீத்து சமாதி அடைந்தார்.

பலதீபிகா

இவர் எழுதிய பலதீபிகா என்ற ஜோதிட நூல் ஜோதிடர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறது. ஜோதிட ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் சிறந்த நூலாகவும் இது அமைகிறது. இந்த நூலில் அவர் வராஹமிஹிரர்,அத்ரி. பராசரர், சாணக்யர், மயன், யவனாசார்யர், சத்யாசார்யர் உள்ளிட்ட பெரும் மேதைகள் கூறுவதை மேற்கோள் காண்பிப்பதிலிருந்தே அனைத்து நூல்களையும் படித்துக் கரை கண்ட மாமேதை அவர் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

பலதீபிகா ஒரு ஜோதிடக் களஞ்சியம்.இந்த நூலில் கிரகங்களின் குணாதிசயங்கள், ராசி மண்டலப் பிரிவுகள், ஷட்பல நிர்ணயம், தொழில் மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் விதம்யோகங்களைக் கண்டறியும் முறைகள், மஹா ராஜயோக விளக்கம், சூரியன் உள்ளிட்ட நவகிரகங்களின் பலாபலன்கள், மேஷத்திலிருந்து மீனம் முடிய உள்ள லக்னங்களின் பலன்கள், ஏழாம் இடமான களத்ரபாவம், பெண்களின் ஜாதகங்கள், குழந்தைப் பேறு, ஜனனம், மரணம், நோய்கள் ஆகியவை ஏற்படும் விதம், பாவங்களின் பலன்களை அறிந்து சொல்லும் முறை,கிரக சேர்க்கைகளுக்கான பலன்கள், தசா புக்தி, அந்தரங்களின் பலன்கள், அஷ்டக வர்க்க பலன்கள் உள்ளிட்ட அனைத்து ஜோதிட விஷயங்களும் தெளிவுற அழகாக விளக்கப்பட்டுள்ளன.இருபத்தியெட்டு அத்தியாயங்கள் உள்ள இந்த நூலில் கடைசி அத்தியாயத்தில் ஆறு ஸ்லோகங்கள் உள்ளன.இதில், தான் இயற்றிய பலதீபிகாவில் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதைச் சொல்கிறார்.பின்னர் ஐந்து மற்றும் ஆறா¡ம் ஸ்லோகத்தில் பின் வருமாறு கூறுகிறார்:

ஸ்ரீசாலிவாடி ஜாதேன மயா மந்த்ரேஸ்வரேன வை                           தைவஜ்ஞேன த்விஜாக்ரேன சத்தாம் ஜ்யோதிர்வித்யாம் முதே                 சுகுந்தளாம்பாள் சம்பூஜ்ய சர்வாபீஷ்ட ப்ரதாயினீம்                                  தத் கடாக்ஷ விசேஷன க்ரிதா யா பலதீபிகா

இதன் பொருள் :-சாலிவாடி கிராமத்தில் பிறந்த மந்த்ரேஸ்வரராகிய நான் ஜோதிடர்களின் மகிழ்ச்சிக்காக சுகுந்தகுந்தாளாம்பாளை வணங்கி அவள் ஆசியுடன் இந்த நூலை இயற்றியுள்ளேன். அவள் அனைவருக்கும் ஆசி நல்கட்டும்.

திருநெல்வேலி என்பதன் வடமொழியாக்கமே ஸ்ரீசாலிவாடி என்பதாகும் ஸ்ரீ என்றால் திரு; சாலி என்றால் நெல்; வாடி என்றால் தோட்டம் ஆக திருநெல்வேலியை அழகுற ஸ்ரீசாலிவாடி என்று மகான் மந்த்ரேஸ்வரர் குறிப்பிடுகிறார்.

புத்திரப்பேறு அடைய பரிகாரங்கள் 

இந்த நூலின் விசேஷமே இது அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது என்பது தான். மனித குலத்தின் மீது மிகவும் பரிவு கொண்ட மகான் மந்த்ரேஸ்வர் என்பதற்கு ஆதாரமாக அவர் கூறும் பல பரிகாரங்களைச் சுட்டிக் காட்டலாம்.

 

உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்களின் துக்கம் சொல்லி மாளாது. அவர்கள் துயர் நீங்கி புத்திர பாக்கியம் பெற பன்னிரெண்டாம் அத்தியாயம் 24ம் சுலோகத்தில் வழி கூறுகிறார்!

 

ராமேஸ்வரத்தில் புனித நீராடுவது, புனித நூல்களைப் படிப்பது,சிவனைத் துதிப்பது,விஷ்ணுவை உரிய முறையில் ஆராதிப்பது, தர்மங்களை தவறாது செய்வது,  இறந்தவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடன்களைச் செய்வது, நாகதேவதையை பிரதிஷ்டை செய்வது ஆகிய இவை பிள்ளைப் பேறு அடைவதற்கான வெவ்வேறு வழிமுறைகளாகும்.

இப்படி மனிதாபிமானத்தை உள்ளடக்கி இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் அறிய வழி வகுக்கும் நூலை இயற்றியவர் மந்த்ரேஸ்வர் என்பதை உணர்ந்து அவரை வணங்கி அவர் நூலைப் படிப்போர் ஜோதிட திலகமாக ஆவது உறுதி!

This is part of Ancient Astrologers Series written by my brother S Nagarajan, Engineer,Bangalore. More of his articles are available in this blog .Please read them if you are interested in Astrology and Astronomy: swami

************************

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர்-(2)

 

By ச.நாகராஜன்

 

நவரத்தினங்களில் ஒருவர்

வராஹமிஹிரர் விக்கிரமாதித்தனின் அரசவையில் முக்கிய இடம் பெற்றிருந்ததை வரலாறு உறுதிப்படுத்துகிறது. விக்கிரமாதித்தனின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுவதற்கான முக்கியமான காரணம் அவன் அரசவையை அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களான மகாகவி காளிதாஸர்,தன்வந்தரி,க்ஷபனாக்,அமரசிம்மர்,சங்கு,வேதாளபட்டர்,

கட் கர்பர்,வராஹமிஹிரர்,வரருசி ஆகிய நவரத்தினங்கள் அலங்கரித்தது தான்!

 

வராஹமிஹிரர் நூல்கள்

வராஹமிஹிரர் எழுதியுள்ள பல நூல்களில் ப்ருஹத் ஜாதகம், ப்ருஹத் சம்ஹிதா, யோக யாத்ரா, பஞ்ச சித்தாந்திகா, ப்ரஸ்ன வல்லபா, லகு ஜாதகா ஆகியவை மிக முக்கியமானவை. இவரது நூல்கள் இவர் ஒரு ரிஷி மட்டுமல்ல. ஒரு சிறந்த விஞ்ஞானியும் கூட என்பதை நிரூபிக்கின்றன. ப்ருஹத் ஜாதகம் மற்றும் ப்ருஹத் சம்ஹிதாவில் பூகோளம், நட்சத்திரத் தொகுதிகள், தாவரவியல், மிருகவியல், வானவியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானம் பற்றிய வியக்கத்தகும் உண்மைகளை விளக்குகிறார். வ்ருக்ஷ ஆயுர்வேதா என்ற சிகிச்சை முறை மூலம் தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் அதைத் தீர்க்கும் விதம் பற்றியும் கூட அவர் விரிவாக விளக்குகிறார்.

 

.தனது தீவிர ஆராய்ச்சி மற்றும் தீர்க்கதிருஷ்டியின் மூலம் இவர் கண்டுபிடித்த உண்மைகள் பல! பஞ்ச சித்தாந்திகா என்ற அபூர்வமான நூல் சூர்ய,ரோமக,பௌலீஸ, வசிஷ்ட. பைதாமஹ சித்தாந்தங்களை எடுத்துரைக்கிறது. ஐந்து சித்தாந்தங்களின் சுருக்கத் தொகுப்பாக இருப்பதால் பஞ்ச சித்தாந்திகா என்ற பெயரை இந்த நூல் பெற்றது.ஹிந்துக்களின் வானவியல் அறிவை விளக்கும் இது பிரமிக்க வைக்கும் ஒன்று என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்!சந்திரனும் இதர கிரகங்களும் சுய ஒளியால் பிரகாசிக்கவில்லை; சூரியனின் ஒளியாலேயே பிரகாசிக்கின்றன என்ற உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் இவரே!

 

சில கணித சூத்திரங்களையும் இவரே உலகுக்கு முதலில் அறிவித்துள்ளார்.திரிகோணமிதியின் இன்றைய கண்டுபிடிப்புகளை (sin2 x + cos2 x = 1 உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகள்) அன்றே இவர் ரத்தினச்சுருக்கமாக சூத்திர வடிவில் கூறி விட்டார்..மாஜிக் ஸ்குயர் எனப்படும் மந்திர சதுரங்களை (pandiagonal magic square of order four -டு தி ஆர்டர் ஆ•ப் •போர் – அதாவது வர்க்கத்தின் நான்கு மடங்கு என்ற அளவில்) இவர் விரிவாக விளக்கி இருப்பது நவீன கணித மேதைகளை வியப்புற வைக்கிறது.

 

நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிக் கூட வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குரு த்வ ஆகர்ஷண் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது குருவினால் ஈர்க்கப்படுதல் என்பது இதன் பொருள். சூரியனை நடு நாயகமாகக் கொண்டு  சூரியனின் ஆகர்ஷணத்தால் இதர கிரகங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு இருப்பதை அவர் கண்டறிந்து அதை குருத்வாகர்ஷன் என்று பெயரிட்டார்!

ஆர்யபட்டரின் சீடர்

இவருக்கு முன்னால் தோன்றிய ஆர்யபட்டர் வானவியலிலும் கணிதத்திலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதையாகத் திகழ்ந்தார்.கி.பி,476ல் பிறந்த இவர் 550 முடிய  வாழ்ந்ததாகவும் இவரின் சீடரே வராஹமிஹிரர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.ஆர்யபட்டரிடம் வானவியல்,கணிதம் ஆகியவற்றை நன்கு பயின்ற வராஹமிஹிரர், அவரது புலமையை வெகுவாக வியந்து பாராட்டியதோடு அவரது சூத்திரங்களை தனது கணிதத் திறமையால் இன்னும் துல்லியமாக ஆக்கினார்!

வானவியலை ககோள சாஸ்திரம் என நமது பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ககோள சாஸ்திரம் நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ககோள சாஸ்திரத்தில் நிபுணராகத் திகழ்ந்த ஆர்யபட்டர் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.ஆர்யபட்டர் எழுதிய அற்புதமான நூல் ஆர்யபட்டீயம்! இந்த நூலுக்குப் பல மேதைகள் விரிவாக விளக்கவுரைகள் எழுதி உள்ளனர்.

 

ஆர்யபட்டரின் கண்டுபிடிப்புகள்

பூமியின் சுற்றளவை 39968.0582 கிலோமீட்டர் என்ற அளவுக்கு இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். நவீன சாதனங்களுடன் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை 40075.0167 கிலோமீட்டர்கள் என இப்போது கணித்துள்ளனர்! ’பை’ எனப்படும் கணிதக் குறியீட்டின் அளவையும் .கிரஹணங்களைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் துல்லியமாக அவர் குறிப்பிடுகிறார். ‘காலக்ரியா’ என்ற அவரது அற்புதமான நூல் அனைத்து விவரங்களையும் விளக்குகிறது. இந்த நூலை அவர் தனது 23ம் வயதிலேயே எழுதி உலகத்தையே பிரமிக்க வைத்தார்!

 

மேலை நாடுகளுக்கு ஆர்யபட்டரே வழிகாட்டி

ஆர்யபட்டரின் அனைத்து நூல்களும் 13ம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்படவே மேலை நாடுகளில் ஹிந்து முறையிலான வேத ஜோதிடமும் அதன் அடிப்படையான வானவியல் கணிதமும் பரவலாயிற்று, அதுவரை முக்கோணங்களின் பரப்பளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திகைத்திருந்த அவர்கள் ஆர்யபட்டரின் சூத்திரங்களால் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பிரமித்தனர்!

 

வராஹமிஹிரரின் புதல்வர்

ஆர்யபட்டரும் வராஹமிஹிரரும் வானவியலையும் ஜோதிடத்தையும் ஒரு புதிய பரிமாணத்திற்கு ஏற்றி வைத்த போது வராஹமிஹிரரின் புதல்வரும் தன் பங்கிற்கு ஜோதிடக் கலை வித்தகராக ஆனார்.

வராஹமிஹிரரின் புதல்வரான ஹோராசரர் ப்ரஸ்ன சாஸ்திரம் பற்றி ஷட்பஞ்சசிகா என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வராஹமிஹிரரின் நூல்களுக்கு விளக்கவுரையாக அவரது நூல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி உஜ்ஜயினி வாழ் ஜோதிடமேதைகள் வேத ஜோதிடத்திற்கு விஞ்ஞான முறையில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்ததோடு அதை உலகெங்கும் பரப்பினர்!

-வராஹமிஹிரர் வரலாறு முற்றும்

 

 

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1)

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1) by ச.நாகராஜன்

 

Picture: Sun Dial at Ujjain Observatory

This is part of S Nagarajan’s Series on Ancient Astrologers of India. Please read his earlier posts on Astronomers, Astrologers,Stars and Astrology.

 

காலம் பிறக்கும் நகரமான உஜ்ஜயினியின் ரகசியம்

 

புகழோங்கிய பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி. இந்த முக்கிய கேந்திரத்தின் முக்கிய புள்ளியைக் கண்டு பிடித்த நம் முன்னோர்  சரியாக அந்தப் புள்ளியில் மகா காலேஸ்வரரின்  லிங்கத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்து புராணம் விவரிக்கும் மேருவிற்கு செல்லும் தீர்க்க ரேகை உஜ்ஜயினியை ஊடுருவிச் செல்கிறது.ஹிந்து வானவியல் நிபுணர்களின் க்ரீன்விச் உஜ்ஜயினி நகரம் தான்! கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் கலை பூமியாகத் திகழ்ந்த இந்த நகரத்தில் தான் உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் அரசோச்சி வந்தான்.இங்கே உள்ள வானவியல் கட்டிடங்கள், மஹாகாலேஸ்வரர் ஆலயம், நவகிரஹ ஆலயம் முதலிய இடங்களை விளக்கத் தனி நூல் தான் எழுதப்படவேண்டும்!

ஏழு மோட்சபுரிகளுள் ஒன்று

 

‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’ என்ற சுலோக கூற்றின் படி அவந்தி ஏழு மோட்சம் தரும் இடங்களில் ஒன்று என்பது அடுத்த ரகசியம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான லிங்கம் அவந்தியிலேயே அமைந்துள்ளது. இதன் தலை நகரமான உஜ்ஜயினி கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த புண்ணிய பூமி!  இந்த அபூர்வ பூமியின் வரலாறில் புதைந்துள்ள இன்னொரு ரகசியம் தான் அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரரின் வரலாறு!உஜ்ஜயினியில் தான் வராஹமிஹிரர் வளர்ந்தார்;வாழ்ந்தார்; அந்த நகருக்கு ஒரு புதிய அந்தஸ்தையும் தன் ஜோதிட ஆற்றலினால் தந்தார்!

Picture: Ancient Ujjain Observatory

வராஹமிஹிரர் என்ற பெயர் வரக் காரணம்

     வராஹமிஹிரர் என்ற பெயர் அவருக்கு வந்ததற்கு காரணமே ஒரு சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வு தான்! உஜ்ஜயினியில் ஆதித்ய தாஸர் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் வராஹமிஹிரர். சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார் அவர்.

விக்கிரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர். ஒரு சமயம் மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான்.மிக கவனமாக ஜாதகத்தைக் கணித்து அந்த ஜாதகத்திற்குரிய பலனை வராஹமிஹிரர் சிந்தித்து உணர்ந்தார்.மன்னனை நோக்கிய அவர், “அரசே! இந்த ராஜகுமாரனுக்கு  அற்ப ஆயுளே உள்ளது. இவனது பதினெட்டாம் ஆண்டில் இவனுக்கு ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.

 

அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான். பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும் அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். “கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள். என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா?” வராஹமிஹிரர் வருத்தத்துடன். “அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “ என்று கூறினார்.

 

மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து. “உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது நேரம் ஆகி விட்டது. வாருங்கள். அவன் அரண்மனைக்குப் போகலாம்” என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம்.

 

அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது  மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததைப் பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது இது தான்: நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை  கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு  அது வரை கண்டிராத பலத்த காற்று வீசவே அது  ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான்.

 

எண்பது வயது வாழ்ந்த ஜோதிட மேதை

வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

 

வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு ஜோதிட அறிவையும் . உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும்  அவரது நூல்கள் மூலம் காண முடியும்.

 

-வராஹமிஹிரர் வரலாறு தொடரும்

 

ராமாயண வினா—விடை (க்விஸ்)

Ramayana Quiz in Tamil

இந்துக்களின் இரண்டு இதிஹாசங்கள் ராமயணமும் மஹா பாரதமும் ஆகும். ராமாயணத்தை ஆதிகாவியம் என்பர். வடமொழியில் இதை வால்மீகி எழுதினார். தமிழில் கம்பர் எழுதினார். உலகில் சுமார் 300 வெவ்வேறு ராமாயணங்கள் இருக்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளில் ராமனின் செல்வாக்கு அபாரமானது.

“ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ” என்று வள்ளுவர் கூறுவது ராம பிரானை மனதில் வைத்துத்தான் என்றே நான் கருதுகிறேன். மனிதர்களில் ‘சூப்பர்மேன்’ ராமன். கெட்டுப்போகவும் வழிதவறிப் போகவும் வாய்ப்பு கிடைத்தும்,அவன் கெட்ட வழியில் செல்லவில்லை. மாபெரும் பேரரசனின் மகனாகப் பிறந்தும் பாமர மனிதன் படும் துன்பம் எல்லாம் பட்டதோடு தன் மனைவியையும் படவைத்தான். அவனது இரண்டு தம்பிகளான பரதனும் லெட்சுமணனும் ராமனைவிட குணத்தில் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டனர் உங்களுக்கு எந்த அளவுக்கு ராமாயண விஷயங்கள் நினைவில் நின்றன என்பதைச் சோதித்துப் பாருங்களேன்:

30 க்கு 30=நீங்கள் ராமாயணப் புலி; 30 க்கு 20= ராமாயணப் பசு! 30க்கு 10= நீங்கள் ராமாயணப் பூனை! 30க்கு 5 மதிப்பெண்கள்= நீங்கள் ராமாயணப் “புளி”!!—இடித்த புளி!

1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?

2.லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனிவியர் பெயர் என்ன?

3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?

4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?

5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?

6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?

7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?

8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?

9.சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?

10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?

11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?

13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?

14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?

15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?

16. ராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?

17.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?

தமிழ்பிராமின்.காம் திரு. சமரபுங்கவன் தொகுத்த மேலும் சில கேள்விகள் இதோ:-

18.வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?

19.தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?

20.ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?

Paruthiyur Sri Rama Lakshmana Idols

21.அனுமனின் தந்தை யார்?

22.ராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?

23. ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?

24.கைகேயியின் தந்தை யார்?

25.ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?

26.வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?

27.ராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?

28.ராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?

29.இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?

30.வாலியின் மகன் பெயர் என்ன?

விடைகள்:

1.சதாநந்தர் 2. முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி 3. நளன் நீலன் ஆகிய வானர சகோதரர்களை 4.விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை 5.விஸ்ரவஸ் என்ற முனிவர், கைகசி என்ற அரக்கி 6.மகோதரன், மால்யவான் 7.ரிக்ஷராஜன் 8.மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான் ராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.9.கபந்தன் என்னும் அரக்கன் 10.தாரா, ருமா 11. இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள் 12.அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் 13.ரிஷ்யஸ்ருங்கர் 14.ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம் 15. ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.16.ஐந்து கிரகங்கள் 17. இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம் 18. சாந்தி 19.சுதர்சனன் 20.சம்பாதி 21.கேசரி 22.புலஸ்த்ய ரிஷி 23.மதங்க முனிவர் 24. அஸ்வபதி 25.தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர் 26.சுயஜ்னன் 27.நந்திக்ராமம் 28.சூடாமணி 29.இந்திரஜித்- லெட்சுமணன், கும்பகர்ணன்- ராமன் 30.அங்கதன்

உங்களுக்கு மேலும் தமிழ் இலக்கியம் ,இந்துமதம் பற்றி வினா விடைகள் (க்விஸ்) வேண்டுமானால் என்னுடைய முந்தைய 13 பதிவுகளைக் காணுங்கள்:

(1).Lord Sri Rama- World’s Best PR Man (2).Quiz on Hymns in English and Tamil (3).27 star quiz (4).Hindu Picture Quiz (5,6,7,8). Hindu quiz parts 1,2,3,4 (9) Quiz on Saivaite Saints in Tamil (10,11,12) Tamil Quiz Parts 1,2,3 (13) Interesting Logo Quiz

Pictures are taken from Facebook and other websites. Thanks.

ஒரு வேளை உண்பான் யோகி

Greatest ascetic of this century, Kanchi Shankaracharya, who lived 100 years.

 

ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்

ஒரு மனிதனோ பிராணியோ நீண்ட காலம் வாழும் ரகசியம் என்ன? அது சாப்பிடும் உணவு காரணமா? மூச்சு விடும் வேகம் (அளவு) காரணமா? காம (செக்ஸ்) உணர்வுகள் காரணமா? சுத்தமான காற்று காரணமா? அதன் எடை காரணமா? மரபணுக்கள் காரணமா? இந்த ஆராய்ச்சிக்கு நேரடியான விடை கிடையாது. ஆயினும் உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

 

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

 

இந்தப் பாடல் நமக்குக் கற்பிக்கும் விஷயம் என்ன? ஒருவன் அதிகம் உண்டால் ஆயுள் குறையும். அதுவும் ஆரோக்கியக் குறைவான உணவு உண்டால் இன்னும் ஆயுள் குறையும். இப்போது மருந்துகள் மூலம் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது உண்மதான். ஆனால் அவர்களுடைய வாழ்வோ நரக வாழ்வு. இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம். சுருங்கச் சொன்னால் நடைப் பிணம்.

ஆமைகளை ஆயுளுடன் தொடர்பு படுத்தியும் யோகிகளுடன் தொடர்பு படுத்தியும் வரும் கீதை, குறள் பாடல்களை ஆங்கிலக் கட்டுரையில் கண்டோம் (காண்க: The Tortoise Mystery: Can we live for 300 years?)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

 

வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.

“யதா சம்ஹரதே சாயம் கூர்ம அங்கானீவ ஸர்வச:

இந்த்ரீயாணி இந்த்ரியார்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா” (கீதை 2-58)

பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.

இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.

திருமூலர் இவர்களுக்கு எல்லாம் ஒருபடி கூடுதலாகப் போய் ஆமையைவிட இன்னும் ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழலாம் என்கிறார் (2264 & 2304)

 

A simple Yogi, Sri Ramana maharishi, who lived over 70 years

 

மனிதனும் செக்ஸும்

ஒரு மனிதன் பாலுறவில் ஈடுபடும்போது அவன் சுவாசம் இருமடங்காகிறது. அதாவது நிமிடத்துக்கு 30 முறை. ஒரு சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 5000 முறை உடலுறவு கொள்கிறான் அல்லது விந்துவை வெளிவிடுகிறான். . ஆனால் யோகிகள் 48 ஆண்டு வரை பிரம்மசர்யம் காக்கிறார்கள். இது வடமொழி நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் (திருமுருகாற்றுப்படை) வரும் செய்தி.

கடவுள் (பிரம்ம தேவன்) ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கோடி மூச்சு என்ற ‘பாங்க் பாலன்ஸுடன்’ (மூச்சு வங்கிக் கணக்குடன்) நம்மை பூமிக்கு அனுப்புகிறான். வேகமாகச் செலவிடுவோர் விரைவில் பரலோகம் சேருவர். மெதுவாக முச்சுக் காற்றை விடுவோர் நீண்ட காலம் வாழ்வார்கள். இதை முறையாகக் கற்றுக் கொடுப்பதுதான் தியானமும் பிராணாயாமமும். ஆனால் விஷயம் தெரிந்தவர்களிடம் இதைக் கற்கவேண்டும்.

ஒரு சுவையான கணக்குப் போட்டுப் பார்ப்போம்: வேதங்கள் மனிதனுடைய ஆயுள் 100 என்று சொல்லுகின்றன. பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று.

 

நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் 100 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் 83 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் 750 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு ஒரு முறை சுவாசித்தால் 1500 ஆண்டு வாழலாம்.

ரிஷி, முனிவர்கள் இப்படிச் செய்ததாகவும் காட்டில் அவர்கள் மீது பாம்புப் புற்றுகள் வளர்ந்ததாகவும் படிக்கிறோம். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாகவும் படிக்கிறோம். இப்போது லண்டன் பத்திரிகைகளில் மனிதனை 1000 ஆண்டு வாழச் செய்யும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக மரபணு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்!

 

Sri Shanthananda who lived like a Rishi.

 

பிராணிகள் மூச்சு விடும் அளவு

ஒரு நிமிடத்துக்கு………

மனிதன் 15 முறை சுவாசிக்கிறான் –சராசரி ஆயுள் 100 வயது

ஆமை 5 முறை சுவாசிக்கிறது—150 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை

பாம்பு 8 முறை சுவாசிக்கிறது– 30 ஆண்டு (உணவு வேட்டை ஆடுகையில் 15 முறையாக அதிகரிக்கும்)

யானை 12 முறை சுவாசிக்கிறது—90 ஆண்டு

குதிரை 19 முறை சுவாசிக்கிறது— 50

பூனை 25 முறை சுவாசிக்கிறது—13 ஆண்டு

நாய் 29 முறை சுவாசிக்கிறது—14 ஆண்டு

புறா 37 முறை சுவாசிக்கிறது—9 ஆண்டு

முயல் 39 முறை சுவாசிக்கிறது–8 ஆண்டு

திமிங்கிலம் 6 முறை சுவாசிக்கிறது –111 ஆண்டு

யானை 4,5 (படுத்த நிலையில்) முறை சுவாசிக்கிறது —70 ஆண்டு

குதிரை 8-15 முறை சுவாசிக்கிறது —50 ஆண்டு

சிம்பன்சி குரங்கு -14 முறை சுவாசிக்கிறது -40 ஆண்டு

குரங்கு—32- முறை சுவாசிக்கிறது –18-23 ஆண்டு

மூஞ்சுறு—170 முறை சுவாசிக்கிறது — 1 ஆண்டு

வீட்டு எலி- 95-160 முறை சுவாசிக்கிறது—2 முதல் 3 ஆண்டு

 

பிராணிகளின் ஆயுட்காலம்

ஆப்பிரிக்க சாம்பல் கிளி— 50 ஆண்டு, அமேசான் கிளி—80 ஆண்டு,இந்திய கிளி—80 ஆண்டு, முதலை— 45 ஆண்டு, நீரில் மட்டும் வாழும் முதலை—68

அமெரிக்க பெட்டி ஆமை- 125, தவளை, தேரை -15

ராணி எறும்பு –3, வேலைக்கார எறும்பு- அரை ஆண்டு, வௌவால்—25, காண்டாமிருகம்—40, கரடி—40, ராணி தேனீ—5, வேலைக்கார தேனி—1, பாம்பு வகைகள்—20 முதல் 30, பசு மாடு—22, மான் –35, கழுதை—45, கழுகு—55, விலாங்கு மீன் –55, கேட் பிஷ் (மீன்) –60,ஆடு—15, ஆந்தை—68, கொரில்லா—20

சிம்பன்சி—40, குதிரை—40, குள்ள நரி—14, சிறுத்தை—17.சிங்கம்-35, கீரி—12

புறா-11, அணில்—16, புலி—22, அன்னம்—102, கங்காரு—9, கோவாலா—8

கலாபகாஸ் ஆமை–200

இந்தப் பட்டியலில் இருந்து ஒரு உண்மை புலப்படும். ராணித் தேனீயை விட வேலைக்காரத் தேனீயின் ஆயுள் மிக மிகக் குறைவு. ராணி எறும்பை விட வேலைக்காரத் எறும்பின் ஆயுள் மிக மிகக் குறைவு. வேகமாகச் செயல்படுவதால் இந்த இழப்பு. இதேபோலத்தான் வேகமாகப் பாயும் சிங்கம், புலி, சிறுத்தைகளின் ஆயுளும் குறைவு.

காய்கறி உணவையே மட்டும் சாப்பிடும் யானை, கிளி போன்றவை நீண்ட காலம் வாழ்கின்றன என்பதும் வியப்பான விஷயம். ஆனால் மூச்சு வேகம் மட்டுமோ, உணவு மட்டுமோ காரணம் என்று கருதிவிடக் கூடாது.

5000 ஆண்டுகள் உயிருடன் இருக்கும் மரம் பற்றியும் 450 ஆண்டுகள் கடலில் வாழும் கடல் மட்டி பற்றியும் நான் எழுதிய கட்டுரையையும் காண்க: Do Hindus believe in E.T.s and Alien Worlds? and Why Do Hindus Practise Homeopathy?

 

Contact swami_48@yahoo.com

*********

ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்!

(This article is part of Astrological Greats of Ancient India written by S Nagarajan. Please read his previous posts in this series) 

ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய குணாத்யர்!

by ச.நாகராஜன்

 

ப்ருஹத் கதா எழுதிய பேரறிஞர்

 

ஜோதிடக் கலை வளர்ச்சியில் சமணர்களின் பங்கு ஏராளம் உண்டு.நீதி நெறி நூல்களோடு ஜோதிட நூல்களையும் சமண அறிஞர்கள் நிறையவே எழுதி உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களைப் பற்றிய உண்மைகளை இன்றைய உலகம் அறியவில்லை. மிக பிரம்மாண்டமான அறிவுக் கதைக் களஞ்சியத்தின் ஆரம்பகர்த்தா ஒரு சமணரே என்பது வியப்பாக இல்லை?

 

குணாகரர் அல்லது குணாத்யர் என்ற பெயருள்ள இந்தப் பேரறிஞர் ப்ருஹத் கதா மற்றும் ஜோதிட நூலான ஹோரா மகரந்தம் ஆகிய நூல்களை இயற்றியவர். குந்தள அரசனான சதகர்ணியின் மந்திரியாக இவர் இருந்தார். இவரது வரலாறு மிக மிக சுவாரசியமானது.

 

ஹோரா மகரந்தம்

 

குணாகரர் தொன்று தொட்டு இருந்த அனைத்து ரிஷிகளின் நூல்களையும் இதர ஜோதிட மேதைகளின் நூல்களையும் ஒன்று விடாமல் கரைத்துக் குடித்தார். தேனீ எப்படி பல்வேறு மலர்களை நாடி மலர்களின் மதுவை அருந்தி தேனைத் தருகிறதோ அதே போல பத்ராயணர்,வசிஷ்டர், பராசரர் உள்ளிட்ட அனைத்து ரிஷிகளின் நூல்களிலும் உள்ள நல்ல நல்ல அம்சங்களையும் தொகுத்து ஒரு நூலைத் தயாரித்தார். அதற்கு மகரந்தம் என்ற  பொருத்தமான பெயரையும் தந்தார். இந்த ரிஷிகளின் ஸ்லோகங்களை சரளமாக அவர் ஆங்காங்கே எடுத்துக் காட்டி அவர் காலம் வரை இருந்த கருத்துக்களை அற்புதமாகத் தொகுத்து ஹோரா மகரந்தத்தை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கினார். ஜோதிடத்தில் வரும் கலைச் சொற்களின் விளக்கம், கிரஹங்களின் வலிமை, மனிதப் பிறவியல்லாதவற்றின் பிறப்புகள், மனிதப் பிறவியில் பிறக்கும் போது உள்ள நிலைகள், ஆயுள் பாவம், யோகங்கள், கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்கள், தசா புக்தி காலங்களும் அவற்றின் பலன்களும், கிரக சேர்க்கைகளும் அதனால் ஏற்படும் பலன்களும், கிரகங்களின் கிரணங்களால் ஏற்படும் பலன்கள் என இப்படி அபூர்வமான அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து விடுகிறார் குணாகரர் தனது நூலில்.இந்த நூல் இவர் அமைச்சராக இருந்த போதே எழுதப்பட்டது.

 

பைசாச மொழியில் ஏழு லட்சம் கதைகள்!

 

சம்ஸ்கிருதத்தையே தனது மொழியாகக் கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் திடீரென்று ஒரு சம்பவம் நேரிட்டது. ஒரு நாள் அரசவையில் பெரும் வாதப் போர் ஒன்று நிகழ்ந்தது. அதில் பங்கேற்ற குணாகரர் அதில் தோற்று விட்டார். இதனால் மனம் உடைந்த அவர் பதவியைத் துறந்து விட்டுத் தவம் செய்வதற்காக காடு சென்றார். வாதத்தில் தோற்றதை அடுத்து இவர் சம்ஸ்கிருத மொழியை விட்டு விட்டார். பைசாச பாஷை எனப்படும் ப்ராக்ருத பைசாச பாஷையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஒரு நாள் காட்டில் கணபூதி என்னும் கணம் ஒன்று கதைகளைச் சொல்ல ஆரம்பித்தது. பைசாச பாஷையைக் கேட்கும் திறன் கொண்டிருந்த குணாகரர் அதிசயமான அபூர்வமான அந்தக் கதைகளில் லயித்துப் போனார். ஒன்றல்ல, இரண்டல்ல ஏழு லட்சம் கதைகளை கணபூதி சொல்ல அவற்றை குணாகரர் கேட்டார். இந்தக் கதைகளினால் உத்வேகம் அடைந்த அவர் ஏழு லட்சம் கதைகளையும் தன் இரத்தத்தினால் பைசாஷ பாஷையில் எழுதி முடித்தார்! தான் எழுதியவற்றை அரசனுக்குச் சமர்ப்பிக்க எண்ணினார். ஆனால் அரசனோ சம்ஸ்கிருத பாஷையின் மீது அடங்காத காதல் கொண்டவன். அவன் பைசாஷ பாஷையில் இருந்த நூலை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். இதனால் வருத்தமுற்ற குணாகரர் தான் எழுதிய நூலின் ஓலைச் சுவடிகளை ஒரு பெரிய தீயை வளர்த்து அதில் ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தார். ஆறு லட்சம் கதைகள் தீக்கு இரையான சமயத்தில் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டும் கண்ணால் கண்டும் அவரது சீடர்கள் மனம் கலங்கி அழுதனர். இந்த சீடர்களில் தாவரங்களும் பைசாசங்களும்(பிசாசு அல்லது பேய் என்று வழக்கில் கூறப்படுவது) இருந்தன.  மனிதர்களும் இருந்தனர்.  ஆறு லட்சம் கதைகள் தீக்கு இரையாகி விட்ட செய்தி\யைக் கேட்ட மன்னன் மனம் கலங்கிப் பதறிப் போனான். குணாகரரை அணுகி அவரைத் தடுத்து நிறுத்தி ஒரு லட்சம் கதைகளைக் காப்பாற்றினான். இந்த ஒரு லட்சம் கதைகளே ப்ருஹத் கதா (பெரிய கதை நூல்) என்ற பெயரைப் பெற்று பெரும் புகழை அடைந்தது.

 

 

கதாசரித் சாகரமும், பஞ்சதந்திரமும்

 

பின்னால் பதினொன்றாம் நூற்றாண்டில் காஷ்மீரில் பிறந்த சோமதேவர் என்னும் பண்டிதர் 124 அத்தியாயங்கள் கொண்ட 22000 செய்யுள்கள் அடங்கிய  கதா சரித் சாகரம் என்ற நூலை ப்ருஹத் கதாவை அடிப்படையாகக் கொண்டே எழுதினார். பின்னர் பஞ்சதந்திரம் (ஹிதோபதேசம் உள்ளடங்கியது) இதே நூலை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது. இந்த கதைகளின் அற்புதத் தொகுப்பைக் கண்டு வியந்த சி.ஹெச்.டானி என்பவர் இதை ஆங்கிலத்தில் 1880-1884 ஆண்டுகளில் மொழிபெயர்த்தார். மேலை உலகம் இதைக் கண்டு வியந்தது.பின்னர் 1927ல் இவற்றைப் படித்து உத்வேகம் பெற்ற என்,எம்பென்ஜர் என்பவர் ஓஷியன் ஆப் ஸ்டோரீஸ் என்ற பெயரில் கதைக் கடலை மீண்டும் மொழி பெயர்த்தார்.பஞ்ச தந்திரம் முதலிய கதைகளோ கி,பி. 750ல் பெர்சிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் ஹீப்ரு,லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம்,பிரெஞ்சு, ஸ்பெயின் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவியது.

 

ஆக உலகிற்கே கதைச் செல்வத்தை வழங்கியவர் பாரதத்தைச் சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடரே என்பதையும் அவர் மகரந்தம் வழங்கிய மாமேதை என்பதையும் அறிந்து நாம் பெருமைப் படலாம்!

*****************

தீபாவளி ரகசியங்கள்

 

(The Englsih version of this article is already posted under Science Behind Deepavali in two parts. This is just a summary in Tamil: swami)

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? பலரும் கீழ்கண்ட காரணங்களைக் காட்டுவர். முதலில் அதைப் படித்துவிட்டு நான் கூறும் புதிய விஷயங்களையும் படியுங்கள்:

1.கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாளை நினைவுபடுத்தி தீபாவளையைக் கொண்டாடுகிறோம்.

2.தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடுவதால் தீபாவளி.

3.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது லெட்சுமி தேவி வெளிவந்த நாள் இது.

4.ராமபிரான், ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பிய நாள் இது.

5.பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசத்தை முடித்த நாள் இது.

6.சமண தீர்த்தங்கரில் ஒருவரான வர்த்தமான மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். ஆகையால் சமணர்களுக்கும் புனித நாள் இது.

7.சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இது. அனைவரும் குருவின் ஆசிர்வாதம் பெற வருமாறு குரு அமர்தாஸ் அறைகூவல் விடுத்த நாள் இது. ஆகையால் சீக்கியர்களுக்கும் புனித நாள்.

8.ஆர்ய சமாஜ ஸ்தாபகர் சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதி எய்திய நாள் இது.

9. இந்து மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறிய நாள் இது.

10.குஜராத்திகளுக்கும் வணிக சமூகத்தினருக்கும் புத்தாண்டும் புதுக் கணக்கு துவங்கும் நாளும் இது.

11. லெட்சுமி பூஜை குபேர பூஜை நடக்கும் நாள் இது.

இவ்வாறு பல காரணங்கள் கூறுகின்றனர். இவை அனைத்திலும் ஒரு உண்மை புலப்படும். இந்த எல்லா காரியங்களும் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடின உழைப்பைச் செய்தனர். ராமர் 14 ஆண்டுகளும் பாண்டவர்கள் 12+1 ஆண்டுகளும் வனவாசம் செய்த பின்னரே வெற்றி கிட்டியது. கடின உழைப்பின் மூலமே இருள் அகன்று ஒளி தோன்றும் என்பதே தீபாவளியின் கருத்து.

மத்தாப்பு, வெடி, சொக்கப் பனையின் காரணம்

தீபாவளி என்றால் வெடி மத்தாப்பு கொளுத்துகிறோம். ஏன்? சமூகவியல் அறிஞர்கள் இதற்குக் கூறும் காரணம்: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் குகையில் வாழ்ந்தபோது உணவு சமைக்கவும் மிருகங்களை அச்சுறுத்தி விரட்டவும், குளிர்காயவும் தீயே உதவியது. அது இன்னும் நமது மரபு அணுவில் இருக்கிறது. ஆகையால் தீ வைப்பதில் சிறுவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கும். இதை ‘பைரோமேனியா’ என்று அழைப்பர். இதைக் கட்டுபடுத்தாவிடில் கடை அடைப்பு, ஹர்த்தால், பந்த் போன்றவற்றில் இளஞர்கள் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு தீவைப்பர். ஆகவே கட்டுக் கடங்காத இளைஞர்களின் அபார சக்தியை வழிப்படுத்தவே முறையாக சொக்கப் பனை கொளுத்தல், வெடி வெடித்தல் ஆகியவற்றை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

உலகம் முழுதும் நவம்பர் மாதத்தில் சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம் உண்டு. பிரிட்டனில் தீபாவளியை ஒட்டி ‘கை பாக்ஸ் டே’ என்று கொண்டாடுவார்கள். அப்போது சொக்கப்பனை, வாணவேடிக்கை உண்டு.

மேலும் நவம்பர் மாததில் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகும். சொக்கப்பனை, லட்சக் கணக்கில் தீபம் ஏற்றுதல் ஆகியன இப்பூச்சிகளை அழிக்க உதவும். பூச்சிகள் தாமாகவே ஒளியை நாடி தீயில் விழுந்து மாய்த்துக் கொள்ளும். ஆக உலகம் முழுதும் சொக்கப்பனை உண்டு.

அக்கினியின் பெருமையை அறிந்தே உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதத்தை அக்னி (தீ) என்ற சொல்லில் துவங்கி அக்னி பகவான் பற்றிய பாடலுடன் முடிக்கின்றனர்.

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் முழு நிலவு நாளிலேயே வரும். தீபாவளி மட்டும், அமாவாசைக்கு முதல் நாள் துவங்கி 4 நாட்கள் நடப்பதால் விளக்கு ஏற்றுவதிலும் பொருள் இருக்கிறது. அதிலும் கூட மருத்துவ பயன் உடைய எண்ணெய்களையே பயன்படுத்துவர்.

கிறிஸ்துமஸ் மரம்

முன்காலத்தில் சாலைகளில் உள்ள மரங்களில் விளக்கு ஏற்றிவைத்து தீபாவளி கொண்டாடியதை கந்தபுராணம் விளக்குகிறது.. இதை மேல் நாட்டினர் இன்றும் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் காலத்தில் மரங்களை நட்டு அதில் விளக்கு ஏற்றுகின்றனர்.

பழைய கால தீபாவளி நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டது. சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசு கொடுக்கும் நாளாகவும், மஹாபலியை நினைவுபடுத்தும் நாளாகவும் எமதர்மராஜனைக் கொண்டாடும் நாளாகவும் நரக சதுர்த்தியாகவும் கொண்டாடப்பட்டது. இதுபற்றி காளிகாபுராணம், ஸ்கந்தபுராணம் முதலிய நூல்களில் காணலாம். இப்பொழுது கேரளத்தில் ஓணம் கொண்டாட என்ன காரணம் இருந்ததோ அது தீபாவளிக்குக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் தீபாவளி மாறிவிட்டது.

இனிப்புத் திருநாள்

உலகிலேயே அதிகமான, சுவையான உணவு வகைகளையும், திண்பண்டங்களையும் உடைய நாடு இந்தியா. ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு வகை உணவு. ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு வகை பிரசாதம்! இப்படி வகை வகையான இனிப்புகளை உடைய மதமோ நாடோ உலகில் இல்லை. 150 வகையான இனிப்புகளும், 25 வகை பாயசங்களும் சமையல் புத்தகத்தில் இருக்கின்றன! உலகில் சர்க்கரை நோய் அதிகம் உடைய நாடும் இந்தியாவே. ஆகையால் இனிப்புத் திருநாளில் இனிப்புகளை அளவோடு உண்டு வளமாக வாழ வேண்டும் அளவுக்கு மிஞசினால் அமிர்தமும் விஷமன்றோ.

தீபாவளியின் பொருளாதரத்தைக் கணக்கிற்கொண்டால் பல கோடிக் கணக்கான மக்களின் தொழிலுக்கும் பிழைப்புக்கும் ஆதாரமாக இருக்கிறது. அவ்வகையிலும் தீபாவளி பலருடைய இல்லங்களில் ஒளி விளக்கை ஏற்றுகிறது. அஞ்ஞான இருள் அகன்று ஞான ஒளி பிறக்கும் நன் னாள் இது. தீமை இருள் அகன்று நன்மை ஒளி பிறக்கும் நாள் இந்த இனிய தீபாவளி நாள். அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Pictures are taken from various websites and The Hindu. Thanks.