
Written by London Swaminathan
Date: 19 NOVEMBER 2017
Time uploaded in London- 11-08 am
Post No. 4411
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

அமெரிக்காவின் சக்திவாய்ந்த பேச்சாளர் ராபர்ட் க்ரீன் இங்கர்சால் (1833-1899 ஆவார்). அவரது தந்தையோ கிறிஸ்தவ மதப் பிரசாரகர்; இவரோ கடவுளையும் பைபிளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்தவர். அவர் படிக்காத மேதை; கருணை வள்ளல்; மானுடத்துக்காகப் போராடியவர். அவருடைய பேச்சைக் கேட்கப் பெருங்கூட்டம் கூடும். ஆனால் பத்திரிக்கைகளோ அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்தன. அந்தக் காலத்தில் ஒரு டாலர் கட்டணம் கொடுத்து இவரது பேச்சைக் கேட்டனர். இது ரூ10,000 கொடுத்து ஒருவர் உரையைக் கேட்பது போல!
அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் இதோ!
தந்தைக்குப் பிறந்த ஐவரில் இவரும் ஒருவர். ஆனால் அதிகம் படிக்கவில்லை; ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றதால் வழக்கறிஞர் ஆனார்.
சுவாமி விவேகாநந்தரின் உரையைக் கேட்டு வியப்புற்றவர் இவர். இவரை நாத்தீகவாதி (atheist) என்று சொல்லாமல் ஆக்ஞேயவாதி (agnostic) என்றும் சுதந்திர சிந்தனையாளர் என்றும் அமெரிக்கர்கள் அழைத்தனர். புத்தரும் ஒரு ஆக்ஞேயவாதி; அதாவது கடவுளைப் பற்றியோ சடங்குகளைப் பற்றியோ கவலைப்படாதே; தூய வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்பவர் ஆக்ஞேயவாதி.
இவர் பைபிளில் உள்ள பல கதைகளையும் நம்பிக்கைகளையும் கண்டித்தார். தான் கூறும் பைபிளின் ஒரு அத்தியாயத்தை எந்த கிறிஸ்தவ மதபோதகராவது ஞாயிற்றுக்கிழமை பிராரத்தனையில் அப்படியே படித்துக் காட்டினால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் தருவதாக சவால் விட்டார். அந்தக் காலத்தில் ஆயிரம் டாலர் என்பது மிகப்பெரிய தொகை! யாரும் அந்த சவாலை ஏற்கவரவில்லை. பைபிளில் பல அபத்தக் களஞ்சியம் இருப்பதாக அவர் சாடினார். மோசஸ் செய்த பிழைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?
ஒருமுறை இவர் பெரிய மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்தார். எள் போட்டால் எண்ணை ஆகிவிடும் அளவுக்குக் கூட்டம். ஊசி விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அளவுக்கு அமைதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லோரும் ஆணி அடித்து சுவரில் மாட்டப்பட்ட படம் போல ஆடாமல் அசையாமல் சொற்பொழிவைச் செவிமடுத்த சமயம். ஒருவர் திடீரென்று எழுந்து அமைதியைக் குலைக்கும் வண்ணம், “அன்பரே உமக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?” என்று வினவினார்.
இங்கர்சாலும் சற்றும் தயங்காமல் “ஐயன்மீர்! எனக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு; குறிப்பாக சோப்புப் போட்டுக் குளிக்கும் ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு” என்று சொன்னார். உடனே பயங்கர கரகோசம் விண்ணைப் பிளந்தது!
ஞான ஸ்நானம் என்பது சர்ச்சுகளில் குழந்தைகளுக்கு பாதிரிமார்கள் செய்யும் புனிதச் சடங்கு; இதைத் தான் இங்கர்சால் கிண்டல் செய்தார்.
இங்கர்சாலின் பேச்சுகளில் சிரிப்பொலியும் கேட்கும்; அழுகை ஒலியும் கேட்கும்; நகைச் சுவையாகவும் உருக்கமாகவும் பேசவல்லவர் அவர். மக்களைச் சிந்திக்கத் தூண்டுபவர். ஆனால் தனக்குப் பிறகு ஒரு அமைப்போ, இயக்கமோ உருவாக விரும்பாதவர். சில அமெரிக்கர்கள், எழுத்தின் மூலம் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். இவர் பேச்சின் மூலம் சிந்தனையைத் தூண்டியவர்.
இந்திய பகுத்தறிவுவாதிகள் மாதிரி ஒழுக்கம் குறைந்தவர் அல்ல. நேர்மையானவர். இவர் தூயவர் என்பதால் இவர் சொல்லுக்கு மதிப்பு இருந்தது.

கோர்ட்டில்
ஒரு முறை, ஒரு சண்டையில், கோபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்ட ஒரு நல்லவரைக் கோர்ட்டில் வாதாடிக் காப்பாற்றினார். நீதிபதி முன்னே சென்று நின்று வாதாடத் துவங்கினார்: இப்பொழுது ஒரு வீட்டின் வழியே வந்தேன்; உள்ளே நுழைந்தேன். பெற்ற குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக இருந்த ஒருத்தியைப் பார்த்தேன்; தனது கணவர் ஒன்றும் அறியாத அப்பாவி; அவரைக் குழந்தையிடம் உடனே அனுப்புங்கள் என்று சொல்லி பெண்மணி அழுதாள்……………. இப்படி உருக்கமாக இங்கர்சால் தனது வாதத்தை முன்வைத்து முடிக்கும் முன்பாக திடீரென்று ஒரு ஜூரி (jury) கத்தினார், “அன்பரே அவரை உடனே விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம்” என்று
அவருடைய பேச்சாற்றலைவிட நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது என்றே சொல்ல வேண்டும்.
அவருடைய வீட்டிலுள்ளோர் சொன்ன ஒரு விஷயம்! அவரிடம் நாங்கள் பணம் கேட்போம் . எதற்காக?, எவ்வளவு வேண்டும்? என்று கேட்டதே இல்லை. இதோ இந்த மேஜை டிராயரில் பணம் உள்ளது என்பார் . நாங்கள் எடுத்துக் கொள்வோம். இது போல நிறைய தர்ம கைங்கர்யங்களையும் அவர் செய்திருக்கிறார்.
மத எதிர்ப்பு என்பது இவரது தொழில் அல்ல. அது தன்னிச்சையாக வந்தது. வக்கீல் தொழிலில் நிறைய பேரும் புகழும் பணமும் வந்தது.

வால்ட் விட்மன்
வால்ட் விட்மன் (Walt Whitman) என்ற புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், மானுட நண்பர் இவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஒரு முறை அவரைச் சந்திக்கச் சென்றார். அவருடைய வீடும், அவர் இருந்த அறையும் அலங்கோலமாகக் காட்சி அளித்தது. “வால்ட், நீங்கள் வாழ்க்கையில் ஒரு தப்பு செய்துவிட்டீர்கள்; கல்யாணம் கட்டாமல் இருந்து விட்டீர்களே; வீட்டில் ஒரு இல்லத்தரசி இல்லையே” என்றார்.
வால்ட் விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய இரங்கல் உரை அமெரிக்காவையே அசத்திவிட்டது. அப்படிப்பட்ட பேருரை; இரங்கல் உரை என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் கற்பித்தவர்.
இங்கர் சால், ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கரைத்துக் குடித்தவர்; பேசும்போதெல்லாம் செகப்பிரியரின் (Shakespeare) வாசனை சொற்களில் வீசும்.
பகுத்தறிவுவாதிகளில் ஒழுக்கமும் நேர்மையும் நிறந்தவர் என்பதால் இவருடைய சொற்பொழிவுகளுக்கு மகத்தான சக்தி இருந்தது. பகுத்தறிவு பேசி பணம் சம்பாதிக்கும் வர்கத்தில் சேராதவர்.

இங்கர்சால் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது; என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
TAGS:– ராபர்ட் இங்கர்சால், நாத்திகவாதி, பேச்சாளர், அமெரிக்க
—சுபம், சுபம்—-








































