
பாரதி பழகுவோம்
உங்களுக்குப் பிடித்த ‘ஐயோ’ பாடல் எது?
Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.
Wriiten by S NAGARAJAN
Date : 9 September 2015
Post No. 2141
Time uploaded in London: – காலை 10-10
By ச.நாகராஜன்
என்ன கேள்வி இது?
இது என்ன சார், கேள்வியே சற்று விபரீதமாய் இக்கிறது? யாருக்காவது ஐயோ பிடிக்குமா?
ஐயோ, ஐயோ. அந்த ‘ஐயோ’வைச் சொல்லவில்லை சார் இந்த ஐயோ கொஞ்சம் வேறு மாதிரி! ஆனாலும் கட்டுரையின் கடைசியில் நீங்கள் நினைக்கும் அந்த ‘ஐயோ’வும் வருகிறது.
உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? கீழே அறிஞர்களும் பக்தர்களும் ரசித்த பாடல்கள் பல உள்ளன! பாருங்கள், படியுங்கள், பின்னர் தேர்ந்தெடுங்கள்!
அழியா அழகுடையான்
முதலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல். இதன் சிறப்பை எடுத்துக் கூற ஒரு பெரும் நூலே எழுத வேண்டும். சந்த அமைப்பு, பொருளின் ஆழம், நாடகக் காட்சி, சொல்லாட்சி, உவமைத் திறன், அடுக்கிக் கொண்டே போய் க்ளைமாக்ஸ் காண்பிப்பது என இப்படி இந்தப் பாடலைத் திறனாய்வு செய்வதற்கான அம்சங்களைக் கூறிக் கொண்டே போகலாம்! ரசிக்கும் வரை ரசியுங்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் இலக்கியத்தின் சிகரமான பாடல்களில் சத்தியமாக இதுவும் ஒன்று. ஏன், உயர்வு நவிற்சி அணி இல்லாமல் தமிழ் இலக்கியத்தின் என்பதை உலக இலக்கியத்தின் என்று கூட சுலபமாக மாற்றிச் சொல்லி விடலாம். அப்படி ஒரு தகுதி கொண்ட பாடல் இது.
வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப்
பொய்யோவெனும் இடையாளொடும் இடையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்!
லட்சுமணன் சீதையுடன் ராமபிரான் சென்ற காட்சி! சூரியனின் ஒளியே வேத புருஷனான ராமனின் மேனி ஒளியில் மங்கியதாம். அவன் மை வண்ணனா, மரகத நிறத்தவனா? அவனுக்கு உவமையாகக் கடலைச் சொல்வதா, மழை முகிலைச் சொல்வதா, பொறுக்க முடியாத வர்ணனை நிலையில் ஐயோ என்று கம்பன் மயங்குகிறான். இதன் அருமையை எழுத சில வரிகள் போதாது; இடம் கருதி அடுத்த பாடலுக்குப் போவோம்.
சிந்தை கவர்ந்த செய்யவாய்
திருப்பாணாழ்வார் ஜாதியில் தாழ்ந்தவர் என்று மக்களால் ஒதுக்கப்பட்டாலும் கூட இறைவனின் நீதியால் உயர்ந்தவர். ஶ்ரீரங்கத்தில் லோகசாரங்கர் என்னும் கோவில் பட்டர் அவரை ஒதுக்கித் தள்ளுகிறார். பக்தர் என்பதால் அவர் மீது பட்ட அடியை இறைவன் தானே ஏற்க, லோகசாரங்க பட்டர் மனம் வருந்தி அவரை இறைவன் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறார். இறைவனைத் தரிசித்த ஆழ்வார் உணர்ச்சிப் பெருக்கால் பாடல் மழை பொழிகிறார். அவற்றில் இரு பாடல்கள்!
கையினார் சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள்முடியெம்
ஐயனார் அணியரங்கனார் அரவினணை மிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

இன்னொரு பாடல்:-
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான அரங்கத்தரவினணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
மாயனார் செய்யவாய் சிந்தை கவர்ந்ததையும் நீலமேனி நெஞ்சினில் நிறை கொண்டதையும் உணர்ந்த ஆழ்வார் அதைச் சொல்ல வார்த்தையின்றி ஐயோ என வர்ணனையின் உச்சிக்குச் செல்கிறார்.
கம்பனின் கவித்திறத்தின் முடிவும் ஒரு ஐயோ! ஆழ்வார் இறைவனை நெஞ்சில் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கின் முடிவும் ஒரு ஐயோ!
கருட உற்சவமும் எலி மேல் அமர்ந்த யானையும்
இனி கவிமழை பொழியும் காளமேகப் புலவரின் பாடல்களுக்கு வருவோம்.
கருட உற்சவத்தைச் சேவித்து அவர் இகழ்வது போலப் பாடிய பாடல் இது:-
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர் தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ!
பருந்து எடுத்துப் போகிறதே பார்!
அவரே காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இது:-
மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? – மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ!
எலி இழுத்துப் போகின்றது, ஏன்?
பருந்து எடுத்துப் போன விதத்திற்கும் எலி இழுத்துப் போனதற்கும் ஒரு ஐயோ போடும் போது பாடலின் சுவை கூடி விட்டது, இல்லையா?
இப்படி ஐந்து ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

இன்னும் ஒரு ஐயோ பாடலை உலக நலத்தையே சிந்திக்கும் தாயுமானவர் பாடி இருக்கிறார். இதோ அது:-
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா
ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!
சிவ வெள்ளம் பொங்கித் ததும்புகையில் சவ வெள்ளமாகக் குவிகிறீர்களே! எடுத்த தேகம் விழும் முன் அகண்டாகார சிவ வெள்ளத்தில் சேர வாரும் ஜெகத்தீரே, பூரணமாய் ஏக உருவாய் கிடக்குது ஐயோ! என்று புலம்பி நம்மைக் கூவி அழைக்கிறார். இரக்கம் மேலிட்டு அவர் கூவும் கூவலைப் போன்று நலம் ததும்பும் கூவல் இன்னும் ஒன்று மாதிரிக்குக் கூட இல்லையே!
இப்படி ஆறு ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.
சூதும் பாவமும் பண்ணினால் ஐயோவென்று போவான்!
இன்னொரு பாடல். மகாகவி பாரதியாரின் புதிய கோணங்கிப் பாடல்.
பெரிய பாடல் முழுவதுமாக இங்கு தரப்படவில்லை. முக்கியமான சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:-
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி சக்தி மா காளி,
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!
தரித்திரம் போகுது; செல்வம் வளருது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
உங்கள் முன் ஏழு ஐயோ பாடல்கள் உள்ளன. ஒன்று கவிதா நயத்தின் சக்கரவர்த்தியான ராம பக்த கம்பன் பாடியது. இலக்கிய சிகரத்தின் ஏற்றத்தைக் காண்பிக்கும் ஐயோ அது
இன்னொரு உத்தம பக்தன் கண்ணாரத் தன் தெய்வத்தை தரிசித்து நெஞ்சு நெகிழ்ந்து உள்ளம் கசிந்து உணர்வூறச் சொன்ன இரண்டு ஐயோ. அது பக்தி பரவசத்தின் உச்ச உணர்வின் வெளிப்பாட்டைக் காண்பிக்கும் ஐயோ!
அடுத்து கவிஞனான சிலேடைப் புலவன் காலத்திற்கேற்ப இகழ்கிறார்போலப் புகழ்ந்து அனைவரையும் ரசிக்க வைத்து ரஸனையின் உச்சத்தில் இறை நினைப்பைத் தந்த இரண்டு ஐயோ! கவிதா மேதா விலாசமும் அனைவரையும் ஈர்க்கும் வேடிக்கை விநோதமும் கலந்த ஐயோ அது.
அடுத்து இரக்கக் கடலில் ஊறி இருக்கும் தாயுமானவர் கூறுவது. சிவ,
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா
ஏக உருவாய்க் கிடக்குதையோ, அதை அனுபவியுங்களேன் என்று
இரக்கம் ததும்பக் கூறும் ஐயோ அது.
அடுத்து தேசம் ஒன்றையே தன் தெய்வமாகப் பார்த்து பாவித்து தேசபக்தி ஒன்றையே உடலாக உயிராகக் கொண்ட கவிஞன், நாட்டின் தரித்திரத்திற்கும் இன்ன பிற தாழ்வுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்த ஆய்வின் முடிவு. படித்தவர் செய்யும் சூதிற்கு மன்னிப்பே இல்லை என்பது அவனது முடிவு. படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் எப்படிப் போவான் என்பதைச் சுட்டிக் காட்டும் ஐயோ அது. கவிதாசக்தி தெய்வீகம் கலந்த தேசபக்தியாக மாறி, கெட்ட கலியின் போக்கை மாற்ற, படிச்சவன் செய்யும் சூதிற்கு தரும் தண்டனை அந்த ஐயோ!
இதில் எமக்குப் பிடித்தது தேசத்தை முன்னேற்ற வழி சொன்ன கவிஞனின் ஐயோ! அந்த ஐயோ என்ற தீயினில் தீமைகள் தூசாகி அழியும்; புதிய கிருத யுகம் மலரும்; அப்போது அழியா அழகுடைய அண்ணலையும், நெஞ்சு நிறை கொண்ட நீலமேனியையும், கருட உற்சவ பெருமாளையும் எலி சுமந்த பிள்ளையாரையும் துதிப்பது எளிது; சிவானந்த வெள்ளத்தில் நீந்தித் திளைப்பதும் சுலபம் தான்!
தீய சக்திகள் ஐயோ என்று போகட்டும்; தெய்வத் திருநாடு செழிக்கட்டும்.
எமது தேர்வு ஒரு புறம் இருக்கட்டும்; உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? ஏன்??
தேர்ந்தெடுத்து விட்டீர்களா!
ஒரு வரி எழுதிப் போடுங்களேன் – விமரிசனப் பகுதியில்!
*********
படங்களுக்கு நன்றி; முக நூல் மற்றும் மலர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
You must be logged in to post a comment.