WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,439
Date uploaded in London – – 13 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 12-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திங்களூர்
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரகங்களில் மனதிற்கு அதிபதியான சந்திர பகவானின் சிறப்புத் தலமான திங்களூர் திருத்தலம் ஆகும். தமிழகத்தில், திருவையாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது.
இங்குள்ள கைலாச நாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும்
இறைவனின் திருநாமம் : ஸ்ரீ கைலாச நாதர்
அம்மன் : பெரியநாயகி ஸ்தல வ்ருக்ஷம் : வில்வ மரம்
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி விசேஷ மூர்த்தி: சந்திர பகவான்
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவாகவே அதை சிவபிரான் குடித்து தன் கண்டத்தில் அடக்கினார். அப்போது விஷத்தின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கமுற்றனர். அந்த விஷத்துடன் எழுந்து வந்த சந்திர பகவான் தேவர்களின் மயக்கத்தை நீக்கினார். ஆகவே இத்தலம் திங்களூர் என்னும் பெயரைப் பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தின் போது 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். அதற்கு மறுநாள் பௌர்ணமி பிரதமை அன்று மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளி லிங்கத்தின் மீது படும்; அன்று சந்திர பூஜை நடக்கும். இங்கு சந்திர பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது.
இங்கு தான் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் பிறந்தார்.
இங்குள்ள ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது என்ற போதிலும் தெற்குப் பக்க வாயிலே பிரதான வாயிலாக உள்ளது. கர்ப க்ருஹத்தில் கைலாச நாதர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். அம்மன் பெரிய நாயகி தெற்குப் பார்த்துக் காட்சி அளிக்கிறார். வெளி பிரகாரத்தில் வலம் வரும் போது விஷம் தீர்த்த விநாயகர், சுப்ரமண்யரை தரிசிக்கலாம். இன்னும் தக்ஷிணாமூர்த்தி, கஜலெக்ஷ்மி, பைரவர் உள்ளிட்ட சந்திகளும் இங்கு அமைந்துள்ளன.
கோவிலுக்கு முன்பு சந்திர தீர்த்தம் அமைந்துள்ளது.
சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு நீராடி விட்டு இறைவனை தரிசிப்பது மரபு. திங்களூரில் சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் பால் பெரும் அன்பு கொண்டவர். அவர் பெயரால் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அனைவருக்கும் சேவை செய்து வந்தார். ஒரு சமயம் அங்கு விஜயம் செய்த திருநாவுக்கரசர் தனது பெயர் கொண்ட தண்ணீர்ப் பந்தல், அன்னதான சாலை, மருத்துவ சாலை ஆகியனவற்றைக் கண்டு வியப்புற்று இதை அமைத்தவர் யார் என்று கேட்க அனைவரும் அப்பூதி அடிகள் பற்றிக் கூறினர். அவரது இல்லம் சென்றார் நாவுக்கரசர். அவரைக் கண்ணுற்ற அப்பூதி அடிகளார் மனம் மிக மகிழ்ந்து அவருக்கு அமுது படைக்கத் தயாரானார். வீட்டிலிருந்த தன் மூத்த மகனை அழைத்து வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப, அவன் வாழை இலை பறிக்கும் போது, அவனை ஒரு நாகம் தீண்டி அவன் இறந்தான். துக்கம் தாளாத அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதை நிறுத்தாது, மகனின் சவத்தை மூடி விட்டுப் பரிமாறலானார். மகனுக்குத் திருநீறு இட வேண்டும், அவன் எங்கே என்று கேட்டார் நாவுக்கரசர். அப்பூதி அடிகளார் புலம்பி அழுதார். உடனே நடந்ததை அறிந்த அப்பர் பிரான் அவனது சவம் அருகே சென்று ‘ஒன்று கொலாம்’ என்று தொடங்கும் ‘விஷம் தீர்த்த திருப்பதிகத்தைப்’ பாடினார். அவன் உடனே உயிர்த்தெழுந்தான். அனைவரும் மகிழ்ந்தனர். இந்த வரலாற்றைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் 45 பாடல்களில் மிக அழகுற விளக்குகிறார்.
இந்த ஆலயத்தில் உள் மண்டபத்தில் இடப்புறம் அப்பூதி அடிகள், அவர் மனைவியார், மகன் மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோரின் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு தரிசிக்கலாம்.
‘சந்த்ரமா மனஸோ ஜாத’ என்று புருஷ ஸூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம் மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். ஜனன லக்னத்தின் படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில் சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி உள்ளது. இதையே தான் ‘விதி கெட்டா மதியைப் பாரு’ என்ற முது மொழி உணர்த்துகிறது.
தென்கிழக்கு திசை சந்திரனுக்கு உரியது. உகந்த நிறம் வெள்ளை. மூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தைத் தருபவன் என்று சந்திரனை யஜுர் வேதம் புகழ்கிறது. முத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினமாகும். வெள்ளை குதிரை சந்திரனின் வாகனம். மலர் – வெள்ளை அரளி மலர். அதி தேவதை நீர்; ப்ரத்யதி தேவதை கௌரி. நெல்லும் பச்சரிசியும் சந்திரனுக்கு உகந்த தானியம். சமித்து – எருக்கு.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பெரிய நாயகியும் ஸ்ரீ கைலாஸ நாதரும், சந்திர பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
ததிசங்க துஷாராபம் க்ஷீ ரோதார்ணவ சம்பவம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம் ||
தயிர், சங்கு பனி போன்ற வெண்மையானவன். பாற் கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன் என்று வேதத்தால் அழைக்கப்படுபவன். சிவனின் ஜடாமகுடத்தின் ஆபரணம். அந்த சந்திரனை நமஸ்கரிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
TAGS- சந்திரன் ,திங்களூர், கைலாச நாதர் கோவில் ,அப்பூதி அடிகள்
You must be logged in to post a comment.