குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும் (Post.9072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9072

Date uploaded in London – –24 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச்  சொல்லும்போது  அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.

கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை   பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு  விட் ட  செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –

தென் பரதவர் மிடல் சாய ….………..

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை  இழைப் பொலிந்தாங்கு

அறா அ அறு  நகை இனிது பெற்றிகுமே —

இருங்கிளைத் தலைமை எய்தி

அரும்படர் எவ்வம் உழந்தன்  தலையே – 378

பொருள் :–

என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்

காதில் பூணத் தக்கவற்றை  விரலில் அணிபவரும் 

இடுப்புக்குரியவற்றை  கழுத்தில் அணிபவரும்

கழுத்துக்குரியவற்றை  இடையில்  அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?

இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்

, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது 

அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது

XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி

அரம்பையர் வெறுத்து நீத்த  அவிர்மணிக் கோவை ஆரம்

மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ

–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்

பொருள் :–

தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண்  குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .

இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .

Tags — குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு

–சுபம்–

புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —

 

புறநானூற்று அதிசயங்கள்

tamil puu parithal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1352; தேதி அக்டோபர் 17 2014.

சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.

கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.

இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.

இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:

1.இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு “அறநிலை” என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!

2.பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு.மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் ‘’பதினெண்கணம்’’ கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட “சுர – நர- கக — கோ- போகி- கந்தர்வ—தைத்யை”—என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள் :— அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.

2.இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும்— நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.

tamil-penkal

3.இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் — மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே “பொதியமும் இமயமும்” ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.

பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!

4.பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.

5.புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.

6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.

7.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் “கடல் மணலைவிட அதிகம்” என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.

8.மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்
நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)
நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன்,கடம்பன்),
நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)
என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.

queen

9.சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள் இருக்கின்றன. புறநானூற்றில் வெண்ணாகன், மருதன் இளநாகன் முதலிய பல நாகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதேகாலத்தில் மகாவம்சம் என்ற இலங்கை வரலாறும் பல நாக மன்னர்கள் பெயரைக் குறிக்கின்றன. இதேகாலத்தில் வடக்கில் குப்தர்கால கல்வெட்டுகளும் பல நாக மன்னர்கள், தளபதிகள் பெயரைக் குறிக்கின்றன. யார் இவர்கள் என்று நீண்ட காலமாக விடை எழுப்பியும் முடிவான ஒரு ஆராய்ச்சி நடக்காதது ஒரு பெரும் குறையே!

10.அந்தக் காலத்தில் நாடு முழுதும் தூதர் (ambassador) பதவி, பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படிக் காட்டு வழியாகச் சென்ற ஒரு பார்ப்பனனை கள்ளர்கள் கொன்றுவிட்டு வருத்தப்படும் செய்தியும் மற்றொரு பார்ப்பனனின் (பாடல் 305) திறமையான சொல்லும் செயலும் புறநானூற்றில் உள்ளன. அவன் போய் மன்னனிடம் ஒரு சில சொற்களையே சொன்னான். உடனே அந்த மன்னன் பயந்துபோய் படை எடுப்பு முஸ்தீபுகளை நொடிப் பொழுதில் நீக்கிவிட்டான். இரவு என்று பாராதும் அரண்மனைக்குள் புகுந்தானாம் அந்தப் பார்ப்பனன்! மதுரை வேளாசான் பாடிய பாடல் இது.

11.புறம் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிக் கபிலர் கூறுவதில் இருந்து தமிழர்கள் அதற்கு ஆயிரம் (கி.மு1000) ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியை ஆளத் தொடங்கியது தெரிகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் பல அரிய தகவல்களைத் தருகிறார். தமிழ் இனத்தின் வயது என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கொடுத்துவிட்டேன்.

12.பாடல் 182 இந்திரர் அமிழ்தம் பற்றியும் — பாடல் 191 நரைமுடி வராமல் இருக்கும் மர்மம் பற்றியும் — பாடல் 192 உலகமே ஒரு குடும்பம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றும் கூறுவதை தமிழ் கூறு நல்லுலகம் அறியும் என்பதால் விரித்துரைக்கும் தேவை இல்லை.

13.பாரி பற்றி கபிலர் பாடிய 109-ம் பாடலில் Point 1- பாய்ண்ட் 1, Point 2 பாய்ண்ட் 2, Point 3 பாய்ண்ட் 3 என்று இந்தக் காலத்தில் பெரும் மேடைப் பேச்சாளர்கள் பேசுவது போலப் பேசி (ஒன்றே, இரண்டே, மூன்றே) மூவேந்தர்களுக்கு சவால் விடுகிறார் அடுத்த பாடலில் பாரியிடத்தில் 300 ஊர்கள் இருந்ததும் அத்தனையையும் பரிசிலர்க்குக் கொடுத்ததையும் கூறுகிறார். ஒரு சிறிய மன்னனிடம் 300 ஊர்கள் என்றால் சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் எவ்வளவு ஊர்கள் இருந்திருக்கும்?

kannaki cooking

14.புறம் 55, 56, 58 ஆகிய மூன்று பாடல்களில் இந்துமதக் கடவுளரின் கொடிகள், வாகனங்கள், பெயர்கள் ஆகியன வருவது அக்காலத்திலேயே தமிழர்கள் உருவ வழிபாடு செய்ததையும் ஆன்மீகம் கொடி கட்டிப் பறந்ததையும் காட்டும்.

புறநானூற்றில் வானவியல்,சூரிய கிரகணம், விமானி இல்லாமல் பறக்கும் விமானம் முதலிய பல செய்திகள் இருப்பதைத் தனியான கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். புறநானூற்றும் பொன்மொழிகளையும் தனியே தொகுத்து அளித்து இருக்கிறேன். தமிழர்கள் பற்றி அறிய புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் படித்தால் போதும். ஒரு கலைக் களஞ்சியமே (என்சைக்ளோபீடியா) படித்த பலன் கிட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புலவர் பெருமை!!

contact swami_48@yahoo.com

அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்!

tamil kurathi

Compiled by London Swaminathan
Post No.1088; Dated 6th June 2014.

TAMIL TREASURE TROVE: 54 GOLDEN SAYINGS FROM PURANANURU
1.வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

tamil kottil

8.சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

9.நீ இருக்கும் வரை இனி நான் கூலிக்கு மாரடிக்கத் தேவை இல்லை
பீடில் மன்னர்ப் புகழ்ழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே! – (வாரி வழங்குகிறாய் மற்றவர்களைப் பொய்யாகப் புகழத்தேவையே இல்லை; வன் பரணர், புறம் 148)

10. பார்! மற்றவன் கொடுத்த யானை!
இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையுமல்லர்
இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு
ஈவோருண்மையும் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே- – (உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 162)

11.காசுக்காகப் பாடும் பரதேசி நான் அல்ல!
காணாது ஈத்தவிப் பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்தாயினும் இனிதவர்
துணை யளவறிந்து நல்கினர் விடினே – (காசுக்காகப் பாடும் ஆள் அல்ல; பெருஞ்சித்திரனார், புறம் 208

12..உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே –
( உன்னை விடக் கொடுப்போர் உண்டு; அவ்வையார், புறம் 206)

13.பிச்சை எடுப்பது இழிந்ததுதான்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயெனென்றல் அதனினுமிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று – ( தா என்பது இழிந்தது; வன்பரணர், புறம் 204)

tamil curiosity

14.நல்லவரை மட்டுமே பாடுவேன்
பெரியவோதினும் சிறியவுணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – (தகுதியற்றவரைப் பாடமாட்டோம்; மோசிகீரனார், புறம் 375)

15.புலவரைப் போய் உளவாளி என்று மடக்கிவிட்டாயே!
பெற்றது கொண்டு சுற்றமருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே – ( புலவர் வாழ்க்கை;கோவூர்க் கிழார் புறம் 47)

16.வரி விதிக்கும் போது அளவாக வரி விதி
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும் – (வரி விதிப்பு; பிசிராந்தையார், புறம் 184)

17.கோள் சொல்பவரை நம்பாதே
வழிபடுவோரை வல்லறிதி நீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய்கண்ட குற்றம் காணின்
ஒப்ப நாடி அத்தகவொறுத்தி – (கோள் சொல்பவரை ஒதுக்கி, குற்றவாளிகளை தண்டிப்பாய்; ஊன்பொதி பசுங்குடையார், புறம் 10

18.உழவர்களைப் போற்று
நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரமோம்பிக்
குடிபுறந் தருவை யாயினின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே – (உழவரை ஆதரி; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

19.பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் (தீயோரைப் பொசுக்கு)
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா மரபின் மடிவிலையாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்பார்க்கு இனனாகிலியர்—( கொடியோரை அழி; நாத்திகரை நம்பாதே; முதுகண்ணன் சாத்தனார், புறம் 29)

20.இன்று போல் என்றும் ஒன்றுபட்டு வாழ்க
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடநிலை திரியீராயின் இமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யாகாதே – (ஒற்றுமை வாழ்க; காரிக்கண்ணனார், புறம் 58)

21.நினைத்தேன், வந்தாய்! என்ன அதிசயம்!
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே – பொத்தியார், புறம் 217

22.குழல் இனிது, யாழ் இனிது என்பர், குழந்தை இல்லார்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே! – (குழந்தைகள் இல்லாத வாழ்வு இன்பம் தராது; அறிவுடைநம்பி, புறம் 188).

tamil lovers

23.ஈமக்கடன் நிகழ்த்த புதல்வன் பெற்ற பின் என்னிடம் வா!
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவணொழித்த அன்பிலாள
எண்ணாதிருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே பொத்தியார், புறம் 222

24.தைரியம் இருந்தால் போர் செய் அல்லது கோட்டையைத் திற
அறவையாயின் நினதெனத் திறத்தல்
மறவையாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகி
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதில் ஒருசிறை யொடுங்குதல்
நாணுத் தகவுடைத்துக் காணுங்காலே – புறம் 44, கோவூர்க் கிழார்

kannaki cooking

Following Thirty Golden sayings were already posted under June Calendar in Tamil

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (உன்னை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)

bow 3
Chera Emblem

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

fish 1
Pandya Emblem

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)
tiger drawing 1
Choza Emblem

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
(- எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192)

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

bow and arrow

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

thathrupam pen

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

Contact swami_48@yahoo.com

வீரத் தாயும் வீர மாதாவும்

 

படம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)

English version of this article is already posted in the blog: London Swaminathan)

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று சும்மாவா சொன்னார் பாரதி? வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

உலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

படம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.

போரில் இறந்தால் சொர்க்கம்

தமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்; (புறம்.62)

அவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என

வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)

பொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா! உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’  என்று பொருள்படப் பாடுகிறார்.)

பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)

படம்: கிட்டூர் ராணி சென்னம்மா

 

ரத்த கோஷம் !!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):

அஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்!

காளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.

சங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

*************