
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 26 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 14–06
Post No. 7019
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
பாக்யா 16-9-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினாறாம் கட்டுரை : அத்தியாயம் 432
ஐஸன்ஹோவர் பாக்ஸ்!
ச.நாகராஜன்
“எது முக்கியமோ அது பல சமயங்களிலும் அவசரமாக இருப்பதில்லை. அவசரமாக இருப்பதோ சில சமயங்களில் மட்டுமே முக்கியமானதாக இருக்கிறது” – ஐஸன்ஹோவர் – அமெரிக்காவின் 34வது ஜனாதிபதி
| அவசரமான வேலைகள் | அவசரமில்லாத வேலைகள் |
| செய் தானே செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடு. உடனடியாகச் செய் | முடிவெடு உடல் பயிற்சி, குடும்பத்துடன் இருத்தல், நீண்ட காலத் திட்டங்களை வகுத்தல் ஆகியவற்றைப் பட்டியலிடு. முடிவெடு |
| பிரித்து விடு அடுத்தவர்கள் செய்யக் கூடிய வேலைகளைப் பட்டியலிடு. உரிய நபர்களிடம் பிரித்துக் கொடு | நீக்கி விடு வெட்டி அரட்டை, தேவையற்ற டி.வி. நிகழ்ச்சிகளை இனம் கண்டு அவற்றை நீக்கி விடு |
உலகத்திலேயே பெருமைக்குரிய வேலை எது? உலகத்திலேயே கஷ்டமான வேலை எது? இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பது தான் அது. காலையில் எழுந்ததிலிருந்து உலகப் பிரச்சினைகள் அனைத்தும் வரிசையாக வரும். அனைத்திற்கும் சரியான தீர்வுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்! போரை உண்டாக்குவதா, அல்லது சமாதானத்தை நிலை நிறுத்துவதா இரண்டிற்கும் அவரே பொறுப்பு. அவர் ஒரே ஒரு பட்டனை அமுக்கினால் போதும் அணு ஆயுதப் போர் உருவாகும்!
இருநூறு வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் ஜனாதிபதி பதவியை ஏற்பது என்பது சாதாரணமானதல்ல, அவரே முப்படைகளுக்கும் தலைவர்.
இப்படிப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி உலகப் புகழைப் பெற்றவர் ஜனாதிபதி ஐஸன்ஹோவர். (தோற்றம் 14-10-1890 மறைவு 28-3-1969) . 1953ஆம் ஆண்டு முதல் 1961 முடிய அமெரிக்காவின் 34வது ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர் காலத்தில் தான் விண்வெளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. தென்கொரியப் போர் நடந்தது. மத்திய கிழக்கு உடன்படிக்கை உருவானது. சீனப் பிரச்சினை ஏற்பட்டது.
இவற்றை எல்லாம் அவர் எப்படி சமாளித்தார்? இதற்கு விடை அவர் தனக்காகவே உருவாக்கிக் கொண்ட ஐஸன்ஹோவர் பாக்ஸ் தான். இந்த வெற்றிக்கான பெட்டியை அனைவருமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் பெட்டியில் நான்கு பகுதிகள் உண்டு.
அர்ஜெண்ட் என்ற அவசரமான பாகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. செய் அல்லது அடுத்தவருக்குப் பிரித்து விடு. (Do and Delegate). அடுத்து அவசரம் இல்லாதது என்ற பாகத்திலும் இரு பகுதிகள் உண்டு. முடிவெடு அல்லது வேண்டாம் என்று நீக்கி விடு (Decide and Delete).ஆக இப்படி மொத்தம் நான்கு பகுதிகள் அந்தப் பெட்டியில் உண்டு.
தானே செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் ‘செய்’ என்ற பகுதியில் இடம் பெறும். ஜனாதிபதி தயாரித்துப் பேச வேண்டிய முக்கிய உரையைத் தயாரிப்பது அல்லது பேட்டி கொடுப்பது போன்றவை இதில் வரும்.
பல்வேறு வேலைகளுக்கான சரியான நபர்களை இனம் காண பேட்டியை எடுப்பது, அவர்களைத் தேர்ந்தெடுப்பது, ஜனாதிபதியின் வேலைகளைத் தரம் பிரித்து நேரம் ஒதுக்குவது போன்றவை உதவியாளர்களால் செய்ய முடியும். அதை உரிய நபர்களிடம் ஒப்படைப்பது ‘பிரித்து விடு’என்ற பகுதியில் இடம் பெறும்.
இரண்டாம் பாகத்தில் அவசரம் இல்லாதது என்பதில் எப்போது உடல் பயிற்சி செய்ய வேண்டும், குடும்பத்தினருடன் எப்போது நேரத்தைச் செலவழிக்கலாம், நீண்ட கால உத்தியாக நாட்டிற்காக என்னென்ன திட்டங்களைத் தீட்டி பயன்பெறச் செய்யலாம் என்பன போன்றவை இடம் பெறும். இவை பற்றி உரிய முடிவெடுக்க வேண்டும்; முடிவெடுத்ததை நிறைவேற்ற வேண்டும்.
அவசரம் இல்லாதது என்பதில் உள்ள நீக்கி விடு என்ற பகுதியில் டி.வி பார்ப்பது, தேவையற்ற தபால்களைப் பார்ப்பது, வெட்டி அரட்டை அடிப்பது போன்றவற்றை இனம் கண்டு அவற்றை நீக்கி விட வேண்டும்.
இப்படி ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அன்றாடம் இந்த ‘அஞ்சறைப் பெட்டியில்’ ( கடுகு, ஜீரகம், மிளகு, மஞ்சள், வெந்தயம் போடும் அஞ்சறைப் பெட்டி போல இருந்தாலும் இது நான்கு உள்ளறைகளைக் கொண்டதால் இதை நான்கறைப் பெட்டி என்றே சொல்லலாம்) செய்யவேண்டியவற்றை அவர் குறித்து வைத்துக் கொண்டார். வெற்றியும் பெற்றார்.ஏராளமான வேலைகளைச் செய்யும் பொறுப்பில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த ஐஸன்ஹோவர் பாக்ஸ் உத்தியை தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி தனக்கென ஒரு முன்னேற்றப் பாதைக்கான உத்தியைப் பல வெற்றியாளர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளரும், விஞ்ஞானியும், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவருமான (Founding father) பெஞ்சமின் ஃபிராங்ளின் நேரத்தைப் பொன் போல மதித்தவர். அவர் தனக்கென ஒரு உத்தியை உருவாக்கிக்கொண்டார். இதை பெஞ்சமின் ஃப்ராங்க்ளினின் 13 பண்புகள் திட்டம் (Franklin’s 13 Virtues System) என்று சொல்லலாம்.
தனது குணாதிசயத்தை அனைவரும் மெச்சும் வண்ணம் உருவாக்கிக்கொள்ள அவர் 13 பண்புகளை இனம் கண்டு ஒவ்வொரு வாரமும் ஒரு பண்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தி அதில் தவறினால் ஏன் தவறினோம், எத்தனை முறை தவறினோம் என்பதை அன்றாடம் இரவில் மதிப்பீடு செய்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். ஒரு வருடத்தின் 52 வாரங்களில் 13 வாரங்கள் என்பது நான்கு முறை வரும் என்பதால் இப்படி நான்கு முறை அவர் தன்னை மதிப்பீடு செய்து கொண்டார்; உயர்ந்தார்!

அந்த 13 பண்புகளின் பட்டியல் இதோ:
1) மிதமாக இருத்தல் (Temperance) உண்பதிலிருந்து எதிலும் அளவுடன் இரு. 2) மௌனம் (Silence) மற்றவருக்கும் உனக்கும் பயனளிக்காத சொல் எதையும் பேசாதே
3) ஒழுங்கு முறை (Order) எதிலும் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடி; அது அதை அதனதன் இடத்தில் வை. ஒவ்வொன்றிற்கும் உரிய நேரத்தை ஒதுக்கு
4) உறுதி எடுத்தல் (Resolution) எது எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய உறுதி பூண்; உறுதி பூண்டதை செய்து முடி.
5) சிக்கனமாய் இரு (Frugality) உனக்கும் மற்றவருக்கும் பயனற்றது என்றால் அதற்காகச் செல்வழிக்காதே; எதையும் வீணாக்காதே
6) உழைப்பு (Industry) நேரத்தை வீணாக்காதே. பயனுள்ள எதாவது ஒன்றில் ஈடுபடு; தேவையற்ற செயல்களை இனம் கண்டு அவற்றை நீக்கு 7)நேர்மை (Sincerety) எதிலும் நேர்மையாக இரு. செய்வதைச் சொல்; சொன்னதைச் செய்; எவரையும் ஏமாற்றாதே
8) நியாயம் (Justice) எவரையும் காயப்படுத்தாதே. மற்றவருக்கு உரியதைத் தருவதை உனது கடமையாகக் கொள்
9) எதிலும் எல்லை மீறாதே (Moderation) எதிலும் அளவோடிரு; எல்லை தாண்டிப் போகாதே. உனக்கு ஏற்படும் காயங்களைப் பொறு; தேவைக்கு மேல் வருத்தப்படாதே.
10) சுத்தம் (Cleanliness) எதிலும் சுத்தமாயிரு.உடல், உடை, இருப்பிடம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்
11) சாந்தம் (Tranquility) சிறு பிரச்சினைகளால் மனம் தளராதே. தவிர்க்கக் கூடிய பிரச்சினைகள், தவிர்க்க முடியாத விபத்துக்களில் அமைதியைக் கடைப்பிடி.
12) தூய்மை (Chastity) செக்ஸ் உறவை சந்ததி உருவாக்கவும், உடல்நலத்தைப் பேணும் வகையிலும் மட்டுமே கொள். உனக்கோ மற்றவருக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ அல்லது உன் மதிப்பையோ, மற்றவர் மதிப்பையோ கெடுக்கும் விதத்தில் அதைக் கொள்ளாதே.
13) எளிமை (Humility) இயேசு, சாக்ரடீஸ் போல இரு.
இதற்கான வாராந்திர அட்டை ஒன்றைத் தயார் செய்து அவர் தன்னை தினமும் மதிப்பீடு செய்து ஒவ்வொரு குணத்திலும் உயர்ந்து கொண்டே சென்றார்.
இந்த 13 குணங்களை ஒவ்வொருவரும் தனக்குத் தக தனக்கு வேண்டிய குணாதிசய திட்டமாக மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். உதாரணமாக ஃப்ராங்க் பெட்கர் (Frank Bettger) என்ற விற்பனையாளர் தனக்கு வேண்டியபடி இதை மாற்றி அமைத்து உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேன் என்ற உயர்நிலையை அடைந்தார்.
இப்படி ஒவ்வொரு வெற்றியாளரும் எதனால் வெற்றி பெற்றார் என்பதைத் தெரிந்து கொண்டு நாமும் அதை அப்படியே கடைப்பிடிக்கலாம்; அல்லது அவர்களது உத்தியைத் தெரிந்து கொண்டு நமக்கு உகந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம்.
இப்படி முன்னோர் காட்டிய வெற்றிப்பாதையில் பீடு நடை போட்டு வெற்றி பெற்றோர் ஏராளம்.
முயற்சியும் முனைப்புமே முக்கியம்.
வெற்றி பெறலாமே!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ப்ளூடோ கிரகத்தைச் சுற்றி வரும் உப கிரகத்தை 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் அமெரிக்க வானவியல் நிபுணரான ஜேம்ஸ் கிறிஸ்டி (James Christie) என்பவர். ஒரு நாள் கிறிஸ்டி தன்னிடம் குவிந்து கிடந்த ப்ளூடோ கிரகம் பற்றிய தனது பழைய போட்டோக்களை எடுத்து உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். அவை தப்பாக எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்று அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவை. ஏனெனில் அந்த கிரகம் ஒரு பக்கத்தில் நீண்டு விரிந்தது போலத் தோற்றமளித்ததால் அது போட்டோ எடுக்கப்பட்ட போது நடந்த தவறு என்று அவர் நினைத்திருந்தார்.
ஆனால் உன்னிப்பாக அவற்றை இப்போது கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு மின்னல் போல ஒரு கருத்துத் தோன்றியது. அந்த நீண்டு கிடந்த பகுதி உண்மையில் அதைச் சுற்றி வரும் சந்திரன் என்றும் அது சற்று மறைவாக இருந்ததானால் ஒரு பகுதி மட்டும் போட்டோவில் விழுந்து அப்படி கிரகத்தை நீட்டித்துக் காண்பித்திருக்கிறது என்றும் அவர் புரிந்து கொண்டார். பிறகென்ன?
மீண்டும் நன்கு ஆராய்ந்ததில் அவரது ஆய்வின் முடிவில் அவரது கருத்து உறுதியானது; ப்ளூடோ கிரகத்தைச் சுற்றி வரும் புது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு சரான் (Charon) என்று பெயர் சூட்டப்பட்டது. கிரேக்க புராணத்தில் ஸ்டிக்ஸ் (Styx) என்ற நதியின் வழியே ஆன்மாக்களை ஹேடஸ் (Hades) என்ற இடத்திற்கு இட்டுச் செல்லும் படகுக்காரனின் பெயர் தான் சரான். ஆனால் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் கிறிஸ்டியின் மனைவியின் பெயர் சார்லின் (Charlene). அவரைக் கௌரவிக்கும் வண்ணம் சரான் என்ற இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு ப்ளூடோ கிரகத்தைச் சுற்றி வரும் அந்தச் சந்திரனுக்குப் பெயராகச் சூட்டப்பட்டது.
***









































































































