Written by London Swaminathan
Post No. 15,672
Date uploaded in London –29 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சாரங்கபாணி கோயில் , கும்பகோணம்
திவ்யதேசம்- திருக்குடந்தை / பாஸ்கர க்ஷேத்திரம்
மூலவர் – சாரங்கபாணி / ஆராவமுதன் / அபர்யாப்தாம்ருதன் / உத்தானஸாயி / ஆராவமுதாழ்வான்
உத்ஸவர்- ஆராவமுதன்
தாயார் – கோமளவல்லி / படிதாண்டாப்பத்தினி
கிடந்த திருக்கோலம்; திசை- கிழக்கு
மூலவர் – ஆதிசேஷசயனம் , திருமழிசையாழ்வாருக்காகக் ‘கிடந்தாவாறெழுந்’ திருக்க முயலும் நிலையிலிருப்பதால் ‘உத்தாநசாயீ’ என்றும் அழைக்கப்படுகிறார்.
***
பாசுரங்கள்- 51
மங்களாசாசனம்- திருமங்கையாழ்வார் 25; நம்மாழ்வார் 11; திருமழிசையாழ்வார் 7; பெரியாழ்வார் 3; பூதத்தாழ்வார் 2; பேய் ஆழ்வார் 2; ஆண்டாள் 1
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோவில் சுமார் 1 1/2 மைல் தூரம். பல ஊர்களிலிருந்தும் பஸ்கள் வருகின்றன.
தீர்த்தம் – ஹேமபு ¢ஷகரிணி ‘பொற்றாமரை) , காவிரிநதி, அரசலாறு.
விமானம் – வைதிக விமானம் (வேத வேத விமானம்) .
ப்ரத்யக்ஷம் – ஹேமமஹரிஷி.
விசேஷங்கள் – பெருமாளுக்கெதிரே நதிதேவதைகள் வணங்குகின்றனர். இங்கேதான், ஸ்ரீமந்நாதமுனிகள் “ஆராவமுதே” என்று தொடங்கும் திருவாய்மொழிகளைக் கேட்டு, திவ்யப்ரபந்தத்தையே தொகுக்க ஆரம்பித்தார். ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு, ஸ்ரீ மந்நாத முனிகள், “ஆராவமுதாழ்வான்” என்ற திருநாமம் சாற்றியருளினார்.
ஹேமரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஐதீஹம்.
பெருமாளின், அழகிய, பெரிய சித்திரைத்தேர் ப்ரஸித்தி பெற்றது. பெருமாள் ஸந்நிதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது. ஆயிரம் இதழ் கொண்ட பெற்றாமரை குளத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டதால் கோமலவல்லி என்று பெயர் சூட்டினர். திருமால், ஆராவமுதன் என்ற திருநாமத்துடன் யானைகள், குதிரைகள் பூட்டிய தேரில் வைகுண்டத்தில் இருந்து வந்து தாயாரைத் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
ராமஸ்வாமி கோவிலும் சக்ரபாணி கோவிலும் இவ்வூரில் உள்ளன. சக்கரபாணி அஷ்ட புஜங்களுடன் விளங்குகின்றார். இவருக்கும் இவரது தமையனாரெனக் கருதப்படும் சாரங்க பாணிக்கும் சேர்ந்து பல உத்ஸவங்கள் நடக்கின்றன.
திருமங்கையாழ்வார் அருளிய பாசுரம் (பெரிய திருமொழி):
“வளரும் வண்மையால் வையம் காக்க நின்ற
வாமனன் என்றும், கோவலன் என்றும்,
கிளரும் நான்மறைப் பொருள்கள் யாவும் ஆனான்
கேடிலான், குடந்தை ஆவியே.”
சக்ரபாணி மற்றும் சாரங்கபாணி ஆகிய இரு கோவில்களும் அருகருகே அமைந்து, குடந்தையின் (கும்பகோணம்) புகழைப் பாடுகின்றன.
பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
கையில் சாரங்கம் என்னும் வில்லினை ஏந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி (சாரங்கம்- விஷ்ணுவின் வில்; பாணி- கை) என்ற பெயர் உண்டாயிற்று.
மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது.
கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு சாரங்கபாணி தலையைத் தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சிணாயன வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்குத் திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் இக்கோவில் மிகப் பழமை வாய்ந்ததாகும். கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், மண்டபங்கள், ராஜ கோபுரங்கள், சோழர்களால் கட்டப்பட்டுள்ளன.
கோவிலின் ராஜகோபுரம் 11 நிலைகளுடன், 173 அடி (53 மீ) உயரம் கொண்டது. மேலும் 5 சிறிய கோபுரங்கள் உள்ளன. பொற்றாமரைக் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்: லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. அவருக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்தபோது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார்.
தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.
மறைந்து போயிருந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஸ்ரீ நாதமுனிகள் இந்தத் தலத்தின் பெருமாளை வேண்டி, அவரது அருளால் பிரபந்தங்களை மீட்டெடுத்தார்.
.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்! என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், அப்படியே காட்சி கொடு! என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.
நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ஓராயிரத்துள் இப்பத்தும் என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா! என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ****.
பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :
திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், பாதாள சீனிவாசர் சன்னதி என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
***
முக்கியப் பாசுரங்கள்
நம்மாழ்வார் (திருவாய்மொழி 5.8 – 11 பாசுரங்கள்):
“ஆராவமுதே! அடியேனின்னம் உழல்வேனோ?
நீராயலைந்து கரையுருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரிவீசுஞ் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலந் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!”
(திருக்குடந்தை ஆராவமுதனின் அழகையும், கருணையையும் கண்டு, இனி இவரைப் பிரிய மனமின்றிப் பாடியது).
திவ்யதேச பாசுரங்கள்
175.
ஒன்றே உரைப்பான்* ஒரு சொல்லே சொல்லுவான்*
துன்று முடியான்* துரியோதனன் பக்கல்*
சென்று அங்குப் பாரதம்* கையெறிந்தானுக்குக்*
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா
கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.
188.
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே!*
மடம் கொள் மதிமுகத்தாரை* மால்செய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.
628.
பால் ஆலிலையில் துயில் கொண்ட* பரமன் வலைப்பட்டு இருந்தேனை*
வேலால் துன்னம் பெய்தாற் போல்* வேண்டிற்று எல்லாம் பேசாதே*
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்* குடந்தைக் கிடந்த குடம் ஆடி*
நீலார் தண்ணந் துழாய் கொண்டு* என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே*
807.
இலங்கை மன்னன் ஐந்தொடுஐந்து* பைந்தலை நிலத்துக,*
கலங்க அன்று சென்றுகொன்று* வென்றிகொண்ட வீரனே,*
விலங்குநூலர் வேதநாவர்* நீதியான கேள்வியார்,*
வலங்கொளக் குடந்தையுள்* கிடந்தமாலும் அல்லையே?
991.
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளையத்*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்*
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
1078.
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
1450.
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட* தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ* நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
1526.
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (2)
1538.
கிடந்த நம்பி குடந்தை மேவி* கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி* எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
2673.
காரார் வரைகொங்கை கண்ணர் கடலுடுக்கை*
சீரர் சுடர்சுட்டி செங்களுழிப் பெராற்று*
பெரார மார்பின் பெருமா மழைக்குந்தல்*
நீராரவெலி நிலமங்கை என்னும்* இப்
பாரோர் சொலப்பட்ட மூன்னன்றெ* (2) — அம்மூன்றும்
3310.
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!*
3320.
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*.
—-subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-8; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், சாரங்கபாணி கோயில் , கும்பகோணம்