
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,727
Date uploaded in London – 12 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சப்தரிஷிகள் வரிசையில் நான்காவது ரிஷி!
ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி – பல்துறை கண்ட வித்தகர் – சப்தரிஷிகளின் வரிசையில் நான்காவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி. 1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி ஆர் எஸ் எஸ்ஸின் பிரசாரகராக ஆகி திருமணம் செய்யாமலேயே தன் வாழ்க்கையை சங்கப் பணிக்கு அர்ப்பணித்தார் அவர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் விதர்பா பகுதியில் வர்தா மாவட்டத்திலுள்ள ஆர்வீ நகரில் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் நாளன்று பாபுராவ் தாஜீபா தெங்கடி என்பவருக்கும் ஜானகீ பாயி அம்மையாருக்கும் தத்தோபந்த் தெங்கடி பிறந்தார்.
இள,மையிலேயே சுறுசுறுப்பாகவும் தேசபக்தியுடனும் திகழ்ந்த தெங்கடி மிக இளம் வயதிலேயே வானர சேனை என்று ஒரு சேனையை அமைத்தார்.
படிப்பில் சூரராகத் திகழ்ந்த இவர் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டம் (எல் எல் பி) மற்றும் முதுகலை (எம்.ஏ) பட்டங்களைப் பெற்றார்.
குருஜி கோல்வல்கரின் தொடர்பில் வந்த அவர் ஏராளமான இயக்கங்களை நிறுவினார். பாரதிய மஸ்தூர் சங் (1955ல் நிறுவப்பட்டது), பாரதிய கிஸான் சங் (1979ல் நிறுவப்பட்டது), ஸ்வதேசி ஜாகரன் மஞ்ச் உள்ளிட்ட பல இயக்கங்களை ஆரம்பித்தார். அத்துடன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் இணை நிறுவனராகவும் திகழ்ந்தார்.
தெங்கடி பாரதிய ஜனசங்கத்தின் சார்பில் இரு முறை ராஜ்ய சபை உறுப்பினராகத் திகழ்ந்தார்.
தொழிலாளர் மேம்பாடு, மாணவர் மேம்பாடு என பல துறைகளிலும் அவர் ஆற்றிய பணியைப் பார்த்து நாடே வியந்தது.
பிரதமர் வாஜ்பாயி அவர்களின் ஆட்சிக் காலத்தில் 2003ம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்க மத்திய அரசு முன்வந்தபோது அதைப் பெற அவர் மறுத்து விட்டார்.
சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் முன்னுரைகளை எழுதியுள்ளார்.
சங்கேத ரேகா மற்றும் தேர்ட் வே என்ற அவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் புத்தகங்களாயின.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருடனும் அன்புடன் பழகி வந்த அவரை அனைவரும் மதித்துப் போற்றினர்.
தனது வாழ்நாளில் ரஷியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.
1989ம் ஆண்டிற்குள் பொதுவுடமை வாதம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கணித்து கூறியபடியே கம்யூனிஸம் ஒரு முடிவுக்கு வந்தது.
நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது தலைமறைவாகி இயக்கத்தைத் திறம்பட வழிகாட்டி அவர் நடத்தினார்.
தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான போனஸ் வழங்கப்படவேண்டும் என்று குரலெழுப்பி அதற்காகப் போராடி வெற்றி பெற்றார் அவர்.
அவரது வாழ்க்கையில் ஏராளமான அதிசயிக்கவைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1989ம் ஆண்டு தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சி மஹாபெரியவரை சந்திக்கச் சென்றார். அப்போது மௌனவிரதம் மேற்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்த பெரியவாள் இவருடன் மட்டும் பேசியதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஶ்ரீ தெங்கடி அவர்கள் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதியன்று புனேயில் காலமானார்.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் நான்கு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த மூன்று ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 64 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466