
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,735
Date uploaded in London – 14 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஆறாவது ரிஷி!
ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி – அசாத்திய சாதகர் – சப்தரிஷிகளின் வரிசையில் ஆறாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி.
1924ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கிருஷ்ணப்பா அவர்களுக்கும் சுந்தரம்மா அம்மையாருக்கும் மைசூரில் சூரியநாராயணராவ் பிறந்தார்.
பங்களூரில் ஶ்ரீராம் நகரில் சங்க ஷாகா ஆரம்பிக்கப்பட்ட போது அதில் சேர்ந்தார் சூரிஜி.
பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் 1942ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பங்களூருக்கு சங்க நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை புரிந்தார். அப்போது அவரைப் பார்த்த சூரிஜி அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1943ல் விஸ்தாரக்காகப் பொறுப்பேற்றார். 1946ல் பி.எஸ்.ஸி கணிதத்தில் பட்டம் பெற்றார். உடனே சங்க பிரச்சாரக்காக ஆனார். அன்றிலிருந்து அவர் மறையும் வரை சங்கம் வளர அரும்பாடு பட்டு பணியாற்றினார்.
1948ல் காந்திஜி கொலை வழக்கில் பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரின் உரைகளைக் கூறி சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றினார் அவர்.
1969ல் உடுப்பியில் விஸ்வஹிந்துபரிஷத் சார்பில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது. அதில் செயலாளராகப் பணி புரிந்து மாநாட்டை பெரும் வெற்றிகரமான மாநாடாக ஆக்கினார் சூரிஜி.
1970ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி தக்ஷிண க்ஷேத்ர சஹக்ஷேத்ர பிரசாரக்காக அவர் சென்னை வந்தார். அன்றிலிருந்து சென்னை நகரையே தலைமை மையமாகக் கொண்டு அவர் இயங்கலானார்.
1990ம் ஆண்டு சூரிஜி அகில பாரதீய சேவா பிரமுக்காகப் பொறுப்பேற்றார்.
சேவா பஸ்தி என்ற சேவை பெறும் பகுதிக்கான அமைப்பைத் தொடங்கி கிராமப்புறங்களிலும் சேவையைத் தொடங்க வைத்தார்.
ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களை ஆழப் படித்த காரணத்தினால் எந்தப் பகுதியையும் அவர் சுலபமாகச் சுட்டிக் காட்டி விளக்குவது அவர் பழக்கம்.
அவரிடம் கொடுக்கப்படும் ஆவணங்களை ஊன்றிப் படித்து பிழை திருத்தம் செய்வதில் அவர் வல்லவர்.
இத்தனை ஆண்டுகளில் சங்கத்தில் நீங்கள் கற்றது என்ன என்று ஒரு சிறுமி அவரைப் பார்த்துக் கேட்ட போது “இத்தனை ஆண்டுகளில் நான் கற்றது கீழ்ப்படிதல் தான்” என்றார் அவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டி ஒருவரைச் சிறந்த ஸ்வயம்சேவகராக ஆக்குவதே அவரது தனிச் சிறப்பாகும்.
அமெரிக்கா, டிரினிடாட், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, நார்வே, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரில் காலமானார்.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
இந்த நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் ஆறு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஏழாவது ரிஷியான இராம.கோபாலன் அவர்கள் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

Picture– நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன்
*****
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
**