
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,868
Date uploaded in London – 14 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
10-6-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!
உருவ வழிபாடு தேவையா, இல்லையா? – பாபா கொடுத்த ‘குதிரை’ உதாரணமும் ஆன்மீக உண்மையும்!
ச. நாகராஜன்
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் ரேபள்ளே நகரில் 2-12-1963 அன்று ஶ்ரீ சாயிபாபா விக்ரஹத்தை கோவிலில் ஸ்தாபித்து பகவான் ஆற்றிய உரை:
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! சாயி கட்டிடங்களிலோ, கல்லிலோ, செங்கல்லிலோ அல்லது சுண்ணாம்புக் கலவையிலோ வாழ்வதில்லை. அவர் இரக்கத்துடன் கூடிய உலகளாவிய அன்பெனும் மணம் வீசும் மென்மையான இதயங்களில் வாழ்கிறார்.
சமூகத்தில் உள்ள உபயோகமான சில வழிகளை விலக்கி மனிதனின் உள்ளுணர்வையும் உன்னத உணர்ச்சிகளையும் தூண்டும் கோவில்களும் விக்ரக ஆராதனையும் கொஞ்சம் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆகவே தான் இந்தியாவில் இறைவனை நோக்கி மனிதனை இட்டுச் செல்லும் வழி இன்னும் மூடப்படவில்லை. எல்லா கலைகளும் அந்த இறுதி நிலைக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குடிகாரன் கூட எப்போதோ கேட்ட கீர்த்தனை ஒன்றை முணுமுணுத்து கடவுளின் புகழையும் தன்னை உணர்வதில் உள்ள இன்பத்தையும் கூறுகிறான். ஒவ்வொருவரும், அவர் எந்த ஒரு முன்னேறிய ஆன்மீக நிலையில் இருந்தாலும் சரி, கவனத்தைச் செலுத்தி முன்னேறிச் செல்லத் தூண்டப்படுகிறான். இதுவே இந்தியாவை மனிதகுலத்தின் ஆன்மீக கலாசாலையாக ஆக்கியுள்ளது. இந்தியாவின் மடியில் இந்த வாழ்க்கையை வாழும் ஒரு பெரும் பேறை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதாவது வேதாந்தத்தில் வாழ கொடுத்து வைத்துள்ளீர்கள். இந்தப் பாரம்பரியத்தை நினைவில் கொண்டு அதை அவமதிக்காத வகையில் வாழுங்கள்.
சந்திரனையோ அல்லது செவ்வாய் கிரகத்தையோ அடைய முயற்சித்து விண்வெளியை ஆராய எண்ணும் நாடுகளைப் பார்த்து பொறாமைப் படாதீர்கள். வன்மத்திற்கும் பொறாமைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் போது அப்படிப்பட்ட பிரதேசங்களை ஜெயித்து தான் என்ன பிரயோஜனம்? காட்டுமிராண்டித்தனமான கடந்த காலத்தைக் கொண்டு கெட்ட நோக்கங்களால் அழுந்திக் கிடக்கும் மனத்துடன் மணிக்கு பத்தாயிரம் மைல் வேகத்தில் பயணித்து தான் என்ன பிரயோஜனம்? மிகவும் முன்னேறிய மேலை நாடுகளில் நிலவும் அசாந்தியின் காரணத்தைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அதன் காரணமாக இருப்பது அதிக கர்வம், பேராசை, கெட்ட பழக்கம், பாவம் ஆகியவை தான் என்பதை நீங்கள் காண்பீர்கள். இறைவனிடம் பயம் இல்லை அல்லது வயதுக்கு மரியாதை இல்லை, பாவத்திற்கு பயமும் இல்லை. அவர்கள் செல்வத்திற்கும் அதிகாரத்திற்குமான வெளிப்புற அடையாளங்களுக்கே மதிப்பைத் தருகிறார்கள். சரக்குப் பெட்டிக்குத் தான் மதிப்பு; உள்ளே இருப்பவற்றிற்கு மதிப்பு இல்லை.
உதாரணத்திற்கு, இந்த சலவையில் ஆன உருவம் ஒரு சரக்கு பெட்டி தான். அதற்குள் இருப்பது சாயி தத்வம். இது எப்படி என்றால் ஒரு கோப்பை தான் ஆதாரம்; (அடிப்படை) அதற்குள் இருக்கும் பால் ஆதேயம்.(அதனால் தாங்கப்பட்டிருப்பது) நீங்கள் சாயி தத்வத்தை இதனுள் ஊற்றி இதை சாயிபாபா என்கிறீர்கள். இன்னொரு பாத்திரத்தில் இன்னொரு வடிவத்தைச் செய்து அதை ஶ்ரீநிவாஸன் அல்லது சிவா, கிருஷ்ணா, ராமா என்கிறீர்கள்.
சாதனா என்னும் கிண்டர்கார்டன் (ஆரம்ப) பள்ளியில் இருப்பவர்களுக்கு இந்த விக்ரஹம் தான் ஸ்பெல்லிங் புத்தகத்தில் இருக்கும் சித்திரங்கள் போல!
குதிரையின் படமானது கு-,தி-,ரை என்ற எழுத்துக்களைக் கீழே கொண்டிருக்கும் போது அந்த எழுத்துக்களை குதிரையின் படத்துடன் பார்த்தவுடன் குதிரையை உங்களால் நினைவு கொள்ள முடிகிறது. அது போலவே சாயி என்று சொல்லப்படும் ஒரு உருவத்தை, உங்கள் தெளிவற்ற, முடிவற்ற தெய்வீக தத்துவமானது, ஒரு வடிவம் பெறும் வரை நீங்கள் கொள்ள வேண்டும். ஒருவித உருவமும் இன்றி சாயி தத்வத்தை உங்களால் மனதில் கொண்டுவர முடியும் என்றால், அல்லது எல்லா வடிவங்களையும் நாமங்களையும் உங்களால் கொண்டு வர முடியும் என்றால் இந்த சாயி விக்ரஹம் தேவையில்லை, அது அகற்றப்படலாம்.
இந்தக் கோவிலில் சலவையினாலான விக்ரஹத்தை ஸ்தாபித்தவுடன் உங்களுடைய எல்லா முயற்சியும் முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. உண்மையில் இது தான் ஆரம்பம். இந்த நாட்டில் ஏராளமான கோவில்கள் வெவ்வேறு நிலையில் சிதிலமடைந்துள்ளன. இங்கு மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் கூட இதே நிலைதான் இருக்கிறது. ஏன் இப்படி படாடோபமாக ஆரவாரித்து இன்னொரு கோவிலைக் கட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும்? புதிய கோவில்கள் உதயமாகின்றன; பழைய கோவில்கள் நினைவிலிருந்து நீங்கி அழிகின்றன. இது ஏனென்றால், வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் உங்கள் முன் தரப்பட்டாலும் அவற்றில் இருக்கும் உட்பொருள் ஒன்றே தான் என்பதை நீங்கள் உணரவில்லை என்பதால் தான்.
உங்கள் தவத்தில் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது. உங்களுக்கு இந்த விக்ரஹம் கிடைத்துள்ளது, அத்துடன் உங்களுக்கு இந்த விழாவும் கிடைத்துள்ளது.
ஆனால் அடுத்த அத்தியாயத்தில் உங்கள் பக்தியானது இந்த விக்ரஹத்தில் பொழியப்பட வேண்டும், உங்களின் சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக, அதை எப்போதும் ஜீவனுடன் வைத்திருக்க வேண்டும் –
சாயியின் முன் கூப்பிய கரங்களுடன் நிற்கத் தகுதியானவர்களாக ஆக வேண்டும்.புனிதமான, தெய்வீகமானவர்கள் மட்டுமே தங்களை முழுமையாக இறைவனுக்கு சமர்ப்பிக்க முடியும்.
**