WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,892
Date uploaded in London – 20 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்!
ச. நாகராஜன்
வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவுவது சுபாஷிதத்தில் சொல்லப்படும் அறிவுரைகளே. இதோ சில சுபாஷிதங்கள்:
நற்குணங்களை வெளியே சொல்லாதே!
க்ரோதம் குர்யான் ந சாகஸ்மான் ம்ருது: ஸ்யான் நாபராதிஷு | அர்தான் ப்ரூயான் ந சாஸஸ்து குர்பான் ப்ரூயான் ந சாத்மன: ||
ஒருவன் தனது கோபத்தை வீணாகக் காட்டக் கூடாது அல்லது குற்றம் புரிவோரிடம் பணியவும் கூடாது. ரவுடிகளிடம் தனது வளத்திற்கான வசதிகளைத் தெரியப்படுத்தக் கூடாது. தனது நற்குணங்களைப் பற்றி பேசவும் கூடாது.
மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது.
சகுனம் பலஹீனமாவது எப்போது?
க்ரோஷாதந்தர்பலீ தஸ்மாத் ஊர்த்வம் மந்தபலஸ்தத: |
ந ஜாத: சர்வதா யஸ்ய சகுன: ஸ்யாத் ச முத்யதே ||
ஒரு க்ரோச தூரத்தில் (இரண்டு மைல்களுக்குள்) சகுனமானது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதற்குப் பின்னர் அதன் பலன் பலஹீனமாகி விடும்.
அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லையெனில் அந்த தீய சகுனமானது வழிப்போக்கனின் மரணத்தையே குறிக்கும்.
இது சாரங்கதாரா பத்ததியில் இடம் பெறும் ஒரு ஸ்லோகமாகும்.
நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்!
கதிர்வாமா ப்ரயாணே து ப்ரவேஷே தக்ஷிணா சுபா: |
தத்ரஸ்தோ ந விலம்பேத ஷஸ்த: சர்வத்ர ஜம்புக: ||
ஒரு பிரயாணத்தில் இடமாகப் போவது மங்கலமானது (வெற்றியைத் தரும்).
வீட்டிற்குள் நுழையும் போது வலமாகச் செல்வது நல்லது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருவன் நிற்கக் கூடாது. நரியானது எல்லா இடத்திலும் பார்ப்பதற்கு நல்ல சகுனம் தான்!
இது சாரங்கதாரா பத்ததியில் இடம் பெறும் ஒரு ஸ்லோகமாகும்.
பக்த ஜனப்ரியன் யார்?
க்லேசக்ஷமஸ்ததா யஸ்ச விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: |
கூடமந்த் ரஸ்ச தக்ஷஸ்ச ப்ராக்ஞோ பக்தஜனப்ரிய: ||
தனக்கு வரும் துன்பங்களை எவன் ஒருவன் சகித்துக் கொள்கிறானோ, சுயக்கட்டுப்பாடுடன் தனது இந்திரியங்களை ஜெயிக்கிறானோ, ரகசியங்களை மிக கவனமாகப் பாதுகாத்து செயல்களில் திறமை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே புத்திசாலி. பக்த ஜனங்களுக்கு அவனே பிரியமானவன்.
விஷ்ணுதர்மோத்தரத்தில் வரும் ஸ்லோகம் இது.
விதியை புறம் தள்ளுவர் தைரியசாலிகள்!
க்லீபா ஹி தைவமேவைகம் ப்ரஷஸ்சந்தி ந பௌருஷன் |
தைவம் புருஷகாரேண க்னந்தி ஷூரா: சதோத்யமா: ||
கோழைகள் விதியையே புகழ்வார்கள். எடுத்த காரியத்தில் முயற்சி செய்யமாட்டார்கள். தைரியசாலிகளோ எப்போதுமே செயலில் ஈடுபடுபவர்களாக இருப்பதால் விதியை தங்களது ஆண்மைத் திறத்தால் புறம் தள்ளுவார்கள்.
அக்னிபுராணத்தில் வரும் ஸ்லோகம் இது.
மருத்துவ சிகிச்சையின் பலன்கள்!
க்வசித் தர்ம க்வசித்மைத்ரி க்வசிதர்த: க்வசித் யஷ: |
கர்மாண்யாஸ: கவசிச்சேதி சிகித்ஸா நாஸ்தி நிஷ்பலா ||
சில சமயம் தர்மம் செய்ய உதவுகிறது; சில சமயம் நல்ல பெயரை எடுக்க உதவுகிறது; சில சமயம் பணம் சம்பாதிக்க உதவுகிறது; சில சமயம் புகழை அடைய உதவுகிறது; சில சமயம் நல்ல அனுபவம் பெற உதவுகிறது. இப்படியாக மருத்துவ சிகிச்சையானது பலனில்லாமல் இருக்கவே இருக்காது.
வைத்யாகித சுபாஷிதாவளியில் வரும் ஸ்லோகம் இது.
**