பிரம்மா மேகநாதனுக்கு வரங்களை அளித்தது! (தொடர்ச்சி)-Post15,951

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,951

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (63 – 2) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது! (தொடர்ச்சி)

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கத்தில் ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்ற விவரத்தை அகஸ்தியர் வாயிலாக ராமர் கேட்டதைப் பார்த்தோம்.

பிரம்மா இந்திரஜித்துக்குக் கொடுத்த வரம் உள்ளிட்ட பல விஷயங்கள் யுத்த காண்டத்தில் பல ஸர்க்கங்களில் கூறப்பட்டுள்ளது.

அவற்றைக் காண்போம்.

உக்கிரமான யுத்தத்தில் அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் அவனது தேரின் சாரதியையும் கொன்றான். உடனே இந்திரஜித் கடும் கோபம் கொண்டான். அங்கிருந்து மறைந்தான். அப்போது ராமர் வானரர்களைப் பார்த்து, “ஸ ப்ரஹ்மணா தத்தவரைத்ரைலோக்யம் பாத்யதே ம்ருஷம்” – பிரம்மதேவரால் வரம் பெற்றிருக்கிற அவன் மூவுலகையும் இம்சிக்கிறான்” என்று கூறினார். இதை ராத்திரி யுத்தம் என்கின்ற 44ம் ஸர்க்கத்தில் 38வது ஸ்லோகத்தில் காண்கிறோம்

அடுத்து ராவணனின் தாபம் என்கின்ற 72ம் ஸர்க்கத்தில் ராவணனின் புலம்பலைக் காண்கிறோம், (ஸ்லோக எண் 5)

அதிகாயனை லக்ஷ்மணன் வதம் செய்தான். இதை அறிந்த ராவணன், “ அந்த சகோதரர்களாகிய வீரர்கள் இந்திரஜித்தால் வரமாய் பெற்ற பாணங்களால் கட்டப்பட்டார்களோ அந்தக் கட்டிலிருந்து அவர்கள் விடுபட்டார்கள் என்று அறிகிறேன்” என்று கூறினான்.

இந்த இடத்திலும் இந்திரஜித் பெற்ற வரம் ராவணனால் குறிப்பிடப்படுகிறது.

அடுத்து பிரம்மாஸ்திரத்தால் பந்திப்பது என்ற 73ம் ஸர்க்கத்தில் லக்ஷ்மணரிடம் ராமர் மீண்டும் இந்திரஜித் பெற்ற வரத்தைக் குறிப்பிடுகிறார்.

“லக்ஷ்மணா! இந்த தேவேந்திர சத்துருவான அரக்கத்தலைவனோ பிரம்மாஸ்திரத்தை கைக் கொண்டு பயங்கரமான வானர சேனையை நாசப்படுத்தி  நம்மையும் எதிர்த்தவனாய் பாணங்களால் துன்புறுத்துகிறான். அஸ்திரங்களைக் கொண்ட இந்திரஜித்து பிரம்மதேவரால் வரங்கள் அளிக்கப் பெற்றவன். பேராற்றல் கொண்டவன்” என்று விவரித்து இந்திரஜித் பெற்ற வரத்தை ராமர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அடுத்து ராமரையும் லக்ஷ்மணனையும் நேரில் எதிர்க்கக் கிளம்பியதை வர்ணிக்கும் இந்திரஜித்தின் புறப்பாடு என்ற 80வது ஸர்க்கத்தில் 27வது ஸ்லோகத்தில் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறான்:

“போரில் வரம் பெற்ற அந்த இந்திரஜித்து கோபம் கொண்டவனாய் சூரியனை நிகர்த்த பாணங்களால் ஶ்ரீ ராமரை எல்லா அங்கங்களிலும் மிகுந்து தாக்கினான்.”
 இதிலும் வரம் குறிப்பிடப்படுகிறது.

அடுத்து இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணன் புறப்படுவது என்ற 85வது ஸர்க்கத்தில் விபீஷணன் ராமரிடம் இந்திரஜித்து பிரம்மாவிடமிருந்து வரத்தைப் பெற்ற போது அவர் கூறியதை இப்படிக் கூறக் காண்கிறோம்:

‘மகாபாகுவே! நிகும்பலையில் செல்லாதவனாய், ஹோமத்தை முடிக்காதவனாய் போரிடும் உன்னை எந்த சத்ரு தாக்குவானோ அவன் தான் இந்திரசத்ருவாகிய உன்னை வதைப்பவன்’ என்று ஸர்வ ஜகதீசனான பிரம்மதேவரால் வரமானது அளிக்கப்பட்டிருக்கிறது. (ஸ்லோக எண் 15)

இப்படி பல இடங்களிலும் இந்திரஜித் பெற்ற வரம் பற்றிய விவரங்களை யுத்த காண்டத்தில் காண்கிறோம்.

**

Leave a comment

Leave a comment