
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,011
Date uploaded in London – 24 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் 70 – ஶ்ரீ ராமர் சீதைக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் நாற்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘சீதையை கங்கைக்கரைக்கு அழைத்துச் செல்வது’ என்னும் ஸர்க்கமாகும்.
ஶ்ரீ ராமர் சீதையிடம் கர்ப்பமாயிருக்கும் சமயத்தில், ‘உனது இஷ்டம் என்ன? அதை நான் பூர்த்தி செய்கிறேன்’ என்கிறார். சீதை, ‘கங்கைக்கரையில் தவம் செய்யும் முனிவர்களைப் பார்க்க் ஆசைப்படுகிறேன்” என்கிறாள்.
பின்னர் ஒருநாள் ராமர் தனது மந்திரிகளிடம் ஜனங்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்க அவர்கள் ராமர் ராவணனை அழித்தது பற்றிப் பெருமையுடன் பேசுகிறார்கள் என்கின்றனர். என்னைப் பற்றிய நிந்தனை ஏதேனும் இருந்தால் அதையும் சொல்ல வேண்டும் என்று ராமர் கூற பத்திரன் என்பவர், “ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் இருந்த சீதையை ஏன் ராமர் விலக்கவில்லை” என்று ஜனங்கள் பேசிக் கொள்கின்றனர் என்கிறார்.
இதைக் கேட்ட ராமர் வருத்தமுற்றார்.
அவர் லக்ஷ்மணரை அழைத்து சீதையை நகரத்திற்கு வெளியே ஜனசஞ்சாரமில்லாத பிரதேசத்தில் கொண்டு சென்று விடுமாறு கூறுகிறார்.
லக்ஷ்மணர் சீதையிடம் சென்று இப்படிக் கூறுகிறார்:
த்வயா கிலைஷ ந்ருபதிர்வரம் வை யாசித: ப்ரபு: | ந்ருபேண ச ப்ரதிஞாதமாஞப்தச்சாஸ்ரமம் ப்ரதி ||
உத்தரகாண்டம் நாற்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 7
ஏஷ: – ‘இந்த ப்ரபு: – சர்வேஸ்வரரால் ந்ருபதி: – மன்னர் த்வயா – தேவரீரால் ஆஸ்ரமம் – ஆஸ்ரமத்தி/ற்கு ப்ரதி – போகும் விஷயத்தில் வரம் – மனோரதத்தை ஆஞப்த: வை -அறிவிக்கப்பட்டவராகவும் யாசித: ச – வேண்டிக்கொள்ளப்பட்டவராகவும் ஆகிறார் ந்ருபேண – மன்னரால் ப்ரதிஞாதம் ச – அனுமதி தந்தருளப்பட்டதாகவும் கில – தெரியவருகிறது
கங்காதீரே மயா தேவி ருஷீணாமாஸ்ரமாஞ்சச்சுமான் | சீக்ரம் கத்வா து வைதேஹி ஷாஸனாத்பார்திவஸ்ய ந: || அரண்யே முனிபிர்ஜுஷ்டே அவனேயா பவிஷ்யஸி ||
உத்தரகாண்டம் நாற்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 8
வைதேஹி – வைதேஹி தேவி – தேவியாரே து – இவ்விஷயத்தில் ந: – நமது பார்திவஸ்ய – மன்னவரது ஷாஸனாத் – நியமனத்தால் கங்காதீரே – கங்கைக் கரையில் ருஷீணாம் – ரிஷிகளுடைய சுமான் – புண்ணிய ஆஸ்ரமான் – ஆஸ்ரமங்களுக்கு மயா – என்னோடு சீக்ரம் – இப்போது கத்வா – எழுந்தருளி முனிபி: – முனிவர்களால் ஜுஷ்டே – வசிக்கப்பட்ட அரண்யே – அரண்யத்தினுள் அவனேயா – அழைத்துக் கொண்டு போகப்பட்டவராக பவிஷ்யஸி – ஆகுவீராக’
இப்படி லக்ஷ்மணரால் சொல்லப்பட்டவுடன் சீதை மிகுந்த சந்தோஷத்தை அடைந்து கிளம்ப ஆயத்தமாகிறார்.
இங்கு வரம் என்ற சொல் கூறப்படுகிறது. ஆனால் சீதையைப் பிரிக்கும் இந்தச் சொல் நிஜமாகப் பார்த்தால் ஒரு சாபம் தான்!