Written by London Swaminathan
Post No. 16,012
Date uploaded in London – 24 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பெரிய புராணம் நூலை எழுதியவர் யார் ? அது இந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது?
2
பெரிய புராணம் படித்ததால் சன்யாச வாழ்க்கை பூண்டு உலகப் புகழ்பெற்ற தமிழர் யார் ?
3
இந்த நூலின் இன்னமும் ஒரு பெயர் என்ன ?
4
பெரிய புராணத்தில் யாருடைய கதைகள் உள்ளன ?
5
கம்பராமாயணம் பெரிய புராணம், சிலப்பதிகாரம் போன்றவை நாட்டின் சிறப்பு, நகரத்தின் சிறப்பு முதிய அத்தியாயங்களுடன் தொடங்கும்; பெரியபுராணத்தில் எந்த நாட்டின் எந்த நகரத்தின் சிறப்பு உள்ளது?
6
பெரிய புராணத்தின் துவக்கப் பாடல் எது ?
7
சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்! இருந்தன: இதை சேக்கிழார் எப்படிப்பாடுகிறார் ?
8
பெரிய புராணம் அரங்கேறிய இடம் எது?
9
இந்த நூலின் காலம் என்ன?
10
இந்தப்பாடலைப் பூர்த்தி செய்யுங்கள்………………..
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்
……………………………………………………………………………………….
விடைகள்
1.பெரிய புராணம் நூலை கவிதைகளாக எழுதியவர் சேக்கிழார் பெருமான். அது 12 ஆம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
*
2. பெரிய புராணம் படித்ததால் சன்யாச வாழ்க்கை பூண்டு திருவண்ணாமலைக்குச் சென்று வெளிநாட்டினரையும் கவர்ந்து இழுத்தவர் ரமண மஹரிஷி.
*
3. பெரிய புராணத்தைத் திருத்தொண்டர் புராணம் என்றும் அழைப்பார்கள்.
*
4. பெரிய புராணத்தில் 63 சைவப்பெரியார்களின் — அதாவது நாயன்மார்களின் — கதைகள் உள்ளன.
*
5.பெரியபுராணத்தில் முதலில் சோழ நாட்டின் சிறப்பினையும் திருவாரூர் நகரத்தின் சிறப்பினையும் காணலாம்.
*
6.பெரிய புராணத்தின் துவக்கப் பாடல்
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.
*
7.சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்! இருந்தன: இதை சேக்கிழார்
பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்
பொரு இல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திரு கழுமலம் ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917
ஒரே பாட்டில் வைத்துள்ளார்.
*
8. பெரிய புராணம் அரங்கேறிய இடம் -சிதம்பரம் தில்லை அருள்மிகு நடராஜர் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம்
*
9. பெரிய புராண நூலின் காலம் 12-ஆம் நூற்றாண்டு. சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி_ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது. சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது.
*
10. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத
சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904
—subham—
Tags- பெரிய புராணம், சேக்கிழார், 10 கேள்விகள்